அரசு விரைவுப் பேருந்து ஒன்று திருத்துறைப்பூண்டியிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு, சென்னை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. பேருந்து, சீர்காழி அருகே பாதரகுடி என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது, புறவழிச்சாலையின் ஓரத்தில் பழுதடைந்து நின்ற டேங்கர் லாரி ஒன்றின்மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த லாரி நாகை மாவட்டம், நரிமணத்திலிருந்து கச்சா எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு, சென்னைக்குச் சென்றுகொண்டிருந்தது.
திடீரென டேங்கர் லாரி பழுதாகி சாலையோரம் நின்றுகொண்டிருந்தது. அந்தச் சமயத்தில்தான், அதிவேகத்தில் வந்த அரசுப் பேருந்து, அந்த டேங்கர் லாரிமீது மோதியது. பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால், எதிரே வந்த இரு சக்கர வாகனத்திலும் மோதியது. அதில் சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த சிதம்பரம், பள்ளிப்படை பகுதியைச் சேர்ந்த குருக்கள் பத்மநாபன், அவருடைய மகன் அருள்ராஜ், பாலமுருகன் ஆகிய மூன்று பேர் பேருந்து சக்கரத்தின் அடியில் வாகனத்தோடு சிக்கிக்கொண்டனர்.

பேருந்தின் அடியில் சிக்கிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பேருந்தின் முன்பகுதி டேங்கர் லாரியில் மோதி முற்றிலும் சேதமடைந்தது. இதில் முன்பகுதியில் அமர்ந்திருந்த நடத்துனர் விஜயசாரதி இருக்கையுடன் சாலையில் தூக்கி வீசப்பட்டு விழுந்தார். இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த 25 பயணிகள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து அங்கு விரைந்த போலீஸார், காயமடைந்த நடத்துனர் உட்பட பயணிகள் அனைவரையும் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு நடத்துனர் விஜயசாரதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா, விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார். இறந்தவர்களின் உடல்கள் சீர்காழி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் பலத்த காயமடைந்தவர்கள் அனைவரும், சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பாக சீர்காழி டி.எஸ்.பி லாமேக் வழக்கு பதிவுசெய்து பேருந்து ஓட்டுநர் (பழனியைச் சேர்ந்த பிரதாப்), லாரி ஓட்டுநர் (கேரளாவைச் சேர்ந்த ஜான்பியர்) ஆகிய இருவரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்.

மேலும், உயர் சிகிச்சைக்காக ஐந்து பேர், சிதம்பரம் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். லாரியின் பின்பகுதி உடைந்து கச்சா எண்ணெய் சாலையில் கசிந்தது. தீயணைப்புத்துறையினர் உடனடியாக விரைந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். இந்த விபத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.