அஸ்ஸாம் மாநிலத்தில் `பெண் சிங்கம்' என அழைக்கப்பட்டவர் ஜுன்மொனி ரபா(30). சப்-இன்ஸ்பெக்டரான ஜுன்மொனி, பல சர்ச்சைகளில் சிக்கியவர். அதோடு கிரிமினல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் இரக்கம் காட்டாதவர் எனப் பெயரெடுத்தவர். ஜுன்மொனி சென்ற கார் கன்டெய்னர் லாரிமீது மோதி விபத்துக்குள்ளாகியிருக்கிறது. நகாவ் மாவட்டத்திலுள்ள சருபுகியா என்ற கிராமத்தில் இந்த விபத்து நடந்திருக்கிறது. காரில் ஜுன்மொனி மட்டும் சென்றிருக்கிறார். அதுவும் சீருடை இல்லாமல் இருந்திருக்கிறார். போலீஸார் ஜுன்மொனியை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால், அவர் அதற்குள் இறந்துவிட்டார். அவரது கார் மோதிய கன்டெய்னர் லாரி டிரைவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த விபத்து அதிகாலை 2:30 மணிக்கு நடந்திருக்கிறது. தனியாக அதுவும் அதிகாலை 2:30 மணிக்கு அப்பர் அஸ்ஸாம் நோக்கி ஜுன்மொனி ஏன் சென்றார்... என்பது மர்மமாக இருக்கிறது. அவரின் குடும்பத்துக்கும் இது குறித்து தெரிந்திருக்கவில்லை. இது குறித்து ஜுன்மொனியின் தாயார் சுமித்ரா அளித்த பேட்டியில், `இது திட்டமிட்ட படுகொலை என்றும், பாரபட்சமில்லாமல் விசாரணை நடத்த வேண்டும் என்றும், தன் மகளின் இறுதிச்சடங்குக்காக தங்களது வீட்டில் பறிமுதல் செய்த ஒரு லட்சம் ரூபாயை போலீஸார் திரும்பக் கொடுக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். விபத்து நடப்பதற்கு முந்தைய நாளில்தான் ஜுன்மொனி வீட்டில் போலீஸார் ரெய்டு நடத்தி ஒரு லட்சம் ரூபாயைப் பறிமுதல் செய்தனர்.
அதோடு ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர்மீது மிரட்டி பணம் பறித்ததாக வழக்கும் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஜுன்மொனியின் விபத்து மரணத்தை சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி மாநில டி.ஜி.பி பிரதாப் சிங் உத்தரவிட்டிருக்கிறார். விபத்தில் இறந்துபோன ஜுன்மொனி கிரிமினல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் மிகவும் திறமையானவராக இருந்தாலும் சமீபகாலமாக நிதி மோசடி தொடர்பாகக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஊழல் தொடர்பாக ஜுன்மொனி கைதுசெய்யப்பட்டார்.

அதோடு பணியில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால், பின்னர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு மீண்டும் பணியில் சேர்ந்தார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவருடன் ஜுன்மொனி போனில் கடுமையாகப் பேசிக்கொண்டது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.