தனியார் நிறுவனம் ஒன்று தன் ஊழியர்களை மும்பையிலிருந்து புனேயில் நடந்த நிகழ்ச்சிக்கு பஸ் ஒன்றில் அழைத்துச் சென்றிருந்தது. அவர்கள் புனே நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு இன்று அதிகாலை புறப்பட்டு தனியார் பஸ் மூலம் மும்பைக்கு வந்துகொண்டிருந்தனர்.
பஸ்ஸில் 45 பேர் இருந்தனர். பஸ் லோனவாலாவைத் தாண்டி கொபோலி மலைப்பகுதியில் வந்தபோது போர்கட் என்ற இடத்தில் வளைவு ஒன்றில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதி 50 அடி பள்ளத்தில் விழுந்தது. பஸ்சில் சிக்கிக்கொண்டவர்கள் உதவி கேட்டு கூச்சலிட்டனர். இது குறித்து உடனே அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினரும், போலீஸாரும் இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

உள்ளூர் மக்களும் இந்தப் பணியில் ஈடுபட்டனர். பஸ் விழுந்த வேகத்தில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்து பஸ்ஸுக்குள் சிக்கிக்கொண்டவர்களை மீட்டு கொபோலி மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து அதிகாலை 4 மணிக்கு நடந்ததால் மீட்புப்பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் இருந்தது. பலர் பஸ்ஸிலிருந்து தூக்கி வீசப்பட்டனர். அவர்களை மீட்புக்குழுவினர் காலை வரை தேடி மீட்டனர். 25 பேர் காயம் அடைந்திருக்கின்றனர். அவர்களில் பலர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்ததால் இறந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்தது. மலையேற்ற வீரர்களும், தனியார் டாக்டர்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தால் விபத்து நடந்த இடத்தில் போலீஸ் வாகனங்களும், ஆம்புலன்ஸ்களும் சாலையின் இரு பக்கமும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இதனால் புனே-மும்பை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரத்துக்கு வரிசையாக நின்றன. இந்தச் சாலையில் அடிக்கடி விபத்து நடந்துவருகிறது. எனவே, நெடுஞ்சாலைப்பிரிவு போலீஸார் 24 மணி நேரமும் இந்தச் சாலையில் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.