அர்ஜென்டினாவைச் சேர்ந்த டியாகோ பாரியா (32) என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் சுற்றுலா செல்வதாகக் கூறிவிட்டு தனது க்வாட் பைக்கில் அர்ஜென்டினாவின் கடலோரப் பகுதியான தெற்கு சுபுட் மாகாணத்திற்குச் சென்றுள்ளார்.
ஆனால், ஒரு மாத காலமாகியும் அவரைக் காணவில்லை. எவ்வளவு தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியாததால் அவரின் குடும்பத்தினர் காவல்துறையில் புகாரளித்துள்ளனர். இதையடுத்து டேனிலா மில்லட்ரூஸ் தலைமையிலான குழு பாரியாவை வலை வீசித் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 18ம் தேதி அர்ஜென்டினாவின் கடலோரப் பகுதியான தெற்கு சுபுட் மாகாணத்தில் பாரியாவின் பைக் இருப்பது தெரியவந்தது.

பின்னர், காவல் படையினர் அப்பகுதியில் வலைவீசித் தேடியுள்ளனர். இதையடுத்து அங்கிருக்கும் மீனவர்கள் மீன் பிடிக்கையில் சுறா ஒன்று வலையில் சிக்கியுள்ளது. அதைச் சுத்தம் செய்யும் போது சுறாவின் வயிற்றில் சுமார் 4.9 மீட்டர் நீளம் வரையிலான மனத உடற்பாகங்கள் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான அந்த மீனவர்கள் ஊடகங்கள் மற்றும் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், பாரியாவின் குடும்பத்தினர் பாரியாவின் உடலில் இருந்த டாட்டூவை வைத்து அந்த உடல் பாரியாவினுடையது என்று அடையாளப்படுத்தினர். மேலும், டி.என்.ஏ ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டது.
இதுபற்றி கொமோடோரோ ரிவாடாவியா நகரின் காவல் துறை உயர் அதிகாரியான கிறிஸ்டியன் அன்சால்டோ, "நாங்கள் இந்த விவகாரத்தை இரண்டு கோணங்களில் விசாரித்து வருகிறோம். ஒன்று, கடற்கரையோரம் பாரியா மயங்கி விழுந்திருக்கலாம். பிப்ரவரி மாதம் அப்பகுதியில் கடல் அலையின் வேகம் அதிகமாக இருந்தது. எனவே கடல் அலை அவரை உள்ளிழுத்துச் சென்றிருக்க வாய்ப்பிருக்கிறது. இல்லையெனில், பாரியாவின் வாகனத்தில் யாரெனும் மோதி அவரைக் கடலில் தள்ளிவிட்டிருக்க வேண்டும். இதன் அடிப்படையில் பாரியாவின் இறப்புக் குறித்து விசாரானை நடத்தவுள்ளோம்" என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் அப்பகுதியில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.