புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே கிள்ளுக்குளவாய்பட்டியில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி ஒன்று இயங்கிவருகிறது. இந்த குவாரியில் குடுமியான்மலையைச் சேர்ந்த லெட்சுமணன் (20) என்பவர், பொக்லைன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். பள்ளத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர், டீசல் தீர்ந்ததால், டீசல் நிரப்புவதற்காக மேலே செல்ல முயன்றிருக்கிறார். அப்போது, எதிர்பாராதவிதமாக குவாரியில் மண் சரிந்து பொக்லைன் இயந்திரத்தின் மீது விழுந்ததால், பொக்லைன் எந்திரத்தை முழுவதும் மண் மூடியது.
இதில், லெட்சமணன் பொக்லைன் இயந்திரத்துக்குள் சிக்கிக்கொண்டார். தகவலறிந்து விரைந்துவந்த புதுக்கோட்டை மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் பானுப்பிரியா தலைமையிலான கீரனூர், சிப்காட், கந்தர்வகோட்டை தீயணைப்பு வீரர்கள், கல்குவாரி பள்ளத்துக்குள் இறங்கி, பொக்லைன் எந்திரத்தையும், ஆபரேட்டர் லட்சுமணனையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் ஐந்து மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, மணல் முழுவதையும் அகற்றிய தீயணைப்பு வீரர்கள், பொக்லைன் எந்திரத்தில், இறந்த நிலையில் இருந்த லெட்சுமணனின் உடலை மீட்டு மேலே கொண்டுவந்தனர். லெட்சுமணனின் உடலைப் பார்த்த அவரின் உறவினர்கள், சக தொழிலாளர்கள் கதறி அழுதனர்.

லெட்சுமணன் உடலை மீட்ட உடையாளிபட்டி போலீஸார், பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
குவாரிகளில், இது போன்று தொழிலாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. இந்த குவாரியில் அடிக்கடி இது போன்ற சம்பவம் நடப்பதாகவும், சம்பந்தப்பட்ட குவாரியை ஆய்வுசெய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த கோட்டாட்சியர் உட்பட போலீஸார் நடவடிக்கை எடுப்பதாகக் கூறி பொதுமக்களை அங்கிருந்து கிளப்பினர்.
மண் சரிந்து விழுந்து பொக்லைன் ஆபரேட்டர் உயிரிழந்த சம்பவம் கீரனூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.