விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகா மேலேந்தல் கிராமத்தில் புதிதாக அரசு கலைக் கல்லூரி கட்டும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. கட்டடப் பணியில், கூலி அடிப்படையில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த மக்கள் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், இன்று வழக்கம்போல் கட்டடப் பணிகள் தொடங்கி நடைபெற்றுவந்திருக்கின்றன. கட்டட வேலையில் மிதலைக்குளம் மற்றும் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஹரிஷ்குமார் (15), ரவிச்செல்வம் (17) ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, கீழே கிடந்த வயர்பாக்ஸ் பொருளை எடுத்து ஓரமாக வைக்க முற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தின்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் ரவிச்செல்வம், ஹரிஷ்குமார் ஆகியோர்மீது மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதைப் பார்த்த சக தொழிலாளர்கள், உடனடியாக போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து திருச்சுழி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
உயிரிழந்தவர்களில், ரவிச்செல்வம் 12-ம் வகுப்பு தேர்வெழுதிவிட்டு தேர்வு முடிவுக்காகக் காத்திருந்தவர். ஹரிஷ்குமார், 9-ம் வகுப்பு படித்து முடித்திருக்கிறார். பள்ளி கோடை விடுமுறையையொட்டி, இருவரும் கட்டட வேலைக்காக வந்து பணி செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.