மும்பை அருகிலுள்ள நவிமும்பையின் கார்கரில் மகாராஷ்டிரா பூஷண் விருது வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விருதை சமூக ஆர்வலர் அப்பாசாஹேப் தர்மதிகாரி என்பவருக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா வழங்கினார். விழாவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்காக மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்து கட்சித் தொண்டர்கள் அழைத்துவரப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் திறந்த வெளியில் 36 டிகிரி வெப்பநிலையில் அமர வைக்கப்பட்டனர்.

சமூக ஆர்வலரின் ஆதரவாளர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். பட்டப்பகலில் திறந்த வெளியில் நடந்த இந்த விழாவில் கலந்துகொண்ட அனைவரும் வெயிலால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வெயிலின் கொடுமை தாங்காமல் 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் இன்று காலை வரை 11 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் 50 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ஐந்து லட்சம் வழங்கப்படும் என்றும், நடந்த சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது என்றும் முதல்வர் ஷிண்டே குறிப்பிட்டிருக்கிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ஏக்நாத் ஷிண்டே நேற்று இரவு ஒன்பது மணிக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
மொத்தம் 208 ஏக்கர் பரப்பிலான மைதானத்தில் பல்லாயிரம் மக்கள் பேர் கலந்துகொண்டனர். மக்கள் பல மணி நேரம் திறந்த வெளியில் வெயிலில் அமர்ந்திருந்ததால் அவர்களுக்கு மயக்கம், நெஞ்சு வலி, வயிற்றுப்போக்கு போன்ற பல பிரச்னைகள் ஏற்பட்டன. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் யோகேஷ் பாட்டீல் கூறுகையில், ``இதுவரை 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 50 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூன்று பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

வி.ஐ.பி-க்கள் அமருவதற்கு மட்டும் நிழல் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் வெயிலைப் பற்றி கவலைப்படாமல் மக்களை வெயிலில் அமர வைத்திருக்கின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
அமித் ஷா வந்ததால் செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜ.க., சிவசேனா சார்பாக கிராமங்களிலிருந்து லட்சக் கணக்கில் மக்கள் அழைத்துவரப்பட்டிருந்தனர். அவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் வசதிகூட செய்து கொடுக்கப்படவில்லை. பத்திரிகையாளர்கள்கூட வெயிலில்தான் நிறுத்தப்பட்டிருந்தனர். நிகழ்ச்சிக்கு மிகவும் மோசமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிகழ்வை அரசியலாக்க வேண்டாம் என்று முதல்வர் ஷிண்டே கேட்டுக்கொண்டிருக்கிறார்.