நீலகிரி மாவட்டம், குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி நேற்று இரவு சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனம் 9 மணியளவில் மரப்பாலம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தைக் கண்ட வாகன ஓட்டுநர்கள் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெவித்திருக்கிறார்கள். தகவலின்பேரில் விரைந்து சென்ற குன்னூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு குழுவினர், மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். கடுமையான சிரமத்திற்கு இடையே போராடி காரில் காயத்துடன் இருந்த 5 நபர்களையும் இரவு 10.30 மணிக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
குன்னூர் அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு முதலுதவி அளித்து, உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு 5 பேரையும் அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேரில் இருவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தனர். சுற்றுலாவை முடித்துக் கொண்டு சொந்த ஊர் திரும்புகையில் ஏற்பட்ட இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விபத்து குறித்து குன்னூர் காவல்துறையினர், "செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தைச் சேர்ந்த செந்தில், அவர் மனைவி பூங்காவனம், உறவினரான சம்பத், அவருடைய மனைவி சத்ய லட்சுமி, மற்றும் அருணகிரி என்பவர் என 5 பேர் ஊட்டியில் சுற்றுலாவை முடித்துவிட்டு திரும்பி செல்கையில் ஏற்பட்ட விபத்தில் சத்ய லட்சுமி மற்றும் அருணகிரி ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த செந்தில் உட்பட 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்றனர்.