நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் போதைப்பொருள் வழக்கில் கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவுக்கு எதிராக சி.பி.ஐ ஊழல் வழக்கு பதிவுசெய்திருக்கிறது. இந்த வழக்கில் சமீர் வான்கடே விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.ஐ சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், நேற்று மாலைவரை அவர் விசாரணைக்கு வரவில்லை. அதேசமயம் சமீர் வான்கடே விசாரித்துவந்த ஆர்யன் கான் வழக்கை விசாரிக்க புதிதாக ஞானேஷ்வர் சிங் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார். ஞானேஷ்வர் சிங் இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு அறிக்கை ஒன்றை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல்செய்திருக்கிறார்.

அதில், `போதைப்பொருள் வழக்கில் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் மாற்றம் செய்து, கடைசி நேரத்தில் ஆர்யன் கான் பெயரும், அவரின் நண்பர் மெர்ச்சண்ட் பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
அதோடு ஆர்யன் கானுடன் பிடிபட்ட சவுமியா சிங் பேக்கிலிருந்து சுருட்டப்பட்ட ஒரு பேப்பர் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அப்படியிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இதே போன்று மெர்ச்சண்டுக்குப் போதைப்பொருள் வழங்கியதாக ஒப்புக்கொண்ட சித்தார்த் ஷாவும் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. போதைப்பொருள் தடுப்பு அலுவலகத்திலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான சில பகுதிகள் திட்டமிட்டுச் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் முக்கியப் பகுதிகள் தெரியவிடாமல் செய்திருக்கின்றனர். அலுவலக ரிக்கார்டிங் சாதனங்களும் திருத்தப்பட்டிருக்கிறது. சாட்சியாகச் சேர்க்கப்பட்டிருந்த கோசாவி கைதுசெய்தவர்களுடன் சுதந்திரமாக இருக்க அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைப் பயன்படுத்தி கோசாவி ஷாருக் கானிடம் ரூ.25 கோடி கேட்டு மிரட்டியிருக்கிறான். ரெய்டின்போது முக்கியமான பொருள்களை அதிகாரிகள் எடுத்துக்கொண்டு அதைக் கணக்கில் காட்டவில்லை. ஓர் அதிகாரி ஆப்பிள் வாட்சைத் திருடியிருக்கிறார்.

2017-21-ம் ஆண்டுக்குள் சமீர் வான்கடே குடும்பத்துடன் ஐந்து முறை பிரிட்டன், அயர்லாந்து, போர்ச்சுக்கல், மாலத்தீவுகளுக்கு சென்றுவந்திருக்கிறார். இதற்கு 8.75 லட்சம் மட்டுமே செலவு செய்ததாக சமீர் வான்கடே தெரிவித்திருக்கிறார். ஆனால், இந்தப் பணம் மேற்கண்ட நாடுகளுக்குச் சென்று வர விமான கட்டணத்துக்குத்தான் போதுமானது. 2021-ம் ஆண்டு சமீர் வான்கடேயும், அவரின் நண்பர் ராஜனும் மாலத்தீவில் தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்திருக்கின்றனர். பிரிட்டனுக்கு 19 நாள்கள் குடும்பத்தோடு சென்றுவந்திருக்கிறார்.
அதற்கு ஒரு லட்சம் மட்டுமே செலவானதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதோடு ரோலக்ஸ் வாட்ச் வாங்கி விற்பனை செய்திருக்கிறார். மும்பையில் சமீர் வான்கடேயிக்கு நான்கு வீடுகள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாது மகாராஷ்டிராவின் வாசிமில் 416 ஏக்கர் நிலம் இருக்கிறது. கோரேகாவிலுள்ள வீட்டுக்கு 82 லட்சம் செலவு செய்ததாகத் தெரிவித்திருக்கிறார். ஆனால், உண்மையில் அந்த வீட்டின் மதிப்பு ரூ.2.5 கோடியாகும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால், இந்த அறிக்கையில் அனைத்தும் திரித்துக் கூறப்பட்டிருப்பதாக சமீர் வான்கடே தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்திருக்கும் பேட்டியில், ``நான் செலவு செய்தவைகளுக்கும், அதற்கு எங்கிருந்து பணம் வந்தது என்பதற்கும் என்னால் கணக்கு காட்ட முடியும். எனக்கு மும்பையில் ஐந்து வீடுகள் இருக்கின்றன. அவை நான் பணியில் சேருவதற்கு முன்பே எனக்கு இருக்கிறது. நான் ரோலக்ஸ் வாட்ச் எதுவும் வாங்கி விற்கவில்லை. அந்த அறிக்கையில் உண்மைக்கு மாறான தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன. அனைத்துச் சொத்துகளும் நான் பணியில் சேருவதற்கு முன்பே இருக்கும் எனது பூர்வீகச் சொத்தாகும். அது குறித்து முறைப்படி தெரிவித்திருக்கிறேன். வரியும் கட்டியிருக்கிறேன். நான் ஒன்றும் சம்பளத்துக்காக இந்த வேலையைச் செய்யவில்லை. விருப்பப்பட்டு செய்துகொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்தார்.