பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் சீக்கியர்களின் புனித தலமான பொற்கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலுக்குத் திரளான சீக்கியர்கள் வருகை தருவது வழக்கம். இந்த நிலையில், சனிக்கிழமை இரவு பொற்கோயில் அருகேயுள்ள ஹெரிடேஜ் தெருவில் குண்டு வெடித்ததாகக் கூறப்படுகிறது. பொற்கோயிலின் ஒரு கி.மீ சுற்றளவில் இந்த வெடிப்புச் சத்தம் கேட்டிருக்கிறது. சில கட்டடங்களின் கண்ணாடி முகப்புகள் வெடிப்பில் சேதமடைந்தன. இதில் ஒருவர் காயமடைந்தார்.

இது குறித்து ஊடகங்களிடம் பேசிய பஞ்சாப் காவல்துறை, ``எங்களுக்குக் கிடைத்த ஆதாரங்களின்படி, சனிக்கிழமை இரவு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட வெடிபொருள், ஓர் உலோகப் பெட்டியில் இருந்திருக்கிறது. சம்பவம் நடந்த இடத்திலிருந்து பல உலோகத் துண்டுகளை மீட்டிருக்கிறோம். பொட்டாசியம் நைட்ரேட், கந்தகத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட வெடிகுண்டாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். மேலும், இந்தத் தாக்குதலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை" எனத் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில்தான், கடந்த 24 மணி நேரத்தில் பொற்கோயில் அருகே ஹெரிடேஜ் தெருவில் இன்று இரண்டாவது குண்டு வெடித்திருக்கிறது. கமிஷனர் உள்ளிட்ட காவலர்கள் குழு, தடயவியல் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து மாதிரிகளை ஆய்வுக்காகச் சேகரித்துவருகின்றனர். இது குறித்துப் பேசிய அமிர்தசரஸ் ஏ.டி.சி.பி மெஹ்தாப் சிங், "நாங்கள் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரித்துவருகிறோம்.

இங்கு நிலைமை இயல்பாகத்தான் இருக்கிறது. வெடிகுண்டு படை, எஃப்.எஸ்.எல் போன்ற குழுக்கள் இங்கு இருக்கின்றன. ஒருவருக்கு காலில் சிறிய காயம் ஏற்பட்டிருக்கிறது. விசாரணைக்குப் பிறகு உண்மை தெரியவரும்" எனக் கூறியிருக்கிறார். இந்தத் தொடர் குண்டு வெடிப்புகள் அந்தப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.