உத்தரப்பிரதேசத்தில் சமீபகாலமாக கிரிமினல்களைச் சுட்டுக் கொலைசெய்யும் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. சமீபத்தில் கொலை வழக்கு ஒன்றில் முக்கிய சாட்சியைச் சுட்டுக் கொலைசெய்த ஆசாத் அகமத், அவன் கூட்டாளி இருவரையும் ஜான்சி நகரில் போலீஸார் சுட்டுக் கொலைசெய்தனர். இதே வழக்கில் போலீஸ் காவலிலிருந்த ஆசாத்தின் தந்தை அதிக் அகமத் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டபோது, போலீஸார் முன்னிலையில் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தத் துப்பாக்கிச்சூடு தொடர்பான சர்ச்சை அடங்குவதற்கு முன்பு உத்தரப்பிரதேச போலீஸார் மேலும் ஒரு கிரிமினலைச் சுட்டுக் கொலைசெய்திருக்கின்றனர்.

அனில் துஜானா என்ற அந்த கிரிமினல்மீது கொலை, கொள்ளை, மிரட்டிப் பணம் பறித்தல் தொடர்பாக 62 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. `அவரைப் பற்றித் தகவல் கொடுத்தால் 50,000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும்’ என்று உத்தரப்பிரதேச அரசு அறிவித்திருந்தது. மீரட் அருகிலுள்ள கிராமம் ஒன்றில் அவர் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்டக் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் பிரிஜேஷ் சிங் தலைமையில் தனிப்படை போலீஸார் அந்த கிராமத்துக்குச் சென்று அனிலைச் சுற்றிவளைத்தனர்.
உடனே அவர் போலீஸாரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டார். போலீஸார் தற்காப்புக்காகத் துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே அனில் உயிரிழந்தார். உத்தரப்பிரதேசத்திலுள்ள நொய்டா, காஜியாபாத் மற்றும் டெல்லியில் அனில் அதிக அளவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்தார். கடந்த வாரம்தான் அனில் கொலை வழக்கு ஒன்றிலிருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜாமீனில் வெளியில் வந்தவுடன், அனில் தன்மீதான கொலை வழக்கில் சாட்சியாகச் சேர்க்கப்பட்டிருந்தவரை மிரட்டினார்.
இதையடுத்து அவரை போலீஸார் தேடிவந்தனர். அவர் தன் கூட்டாளிகளுடன் மீரட் அருகிலுள்ள கிராமத்தில் பதுங்கியிருந்தார். அவரைக் கைதுசெய்யத்தான் போலீஸார் சென்றனர். ஆனால் புதருக்குள் மறைந்திருந்து அனிலும், அவரின் கூட்டாளிகளும் துப்பாக்கியால் சுட்டதால் எதிர் துப்பாக்கிச்சூடு நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். ஏற்கெனவே மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கிரிமினல்கள் மற்றும் ரௌடிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேச முதல்வரான பிறகு, இதுவரை 183 கிரிமினல்கள் சுட்டுக் கொலைசெய்யப்பட்டிருக்கின்றனர்.