கோவை கார் வெடிப்பு விபத்து குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த வழக்கை என்.ஐ.ஏவுக்கு மாற்ற முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார். எப்போது வேண்டுமானாலும் என்.ஐ.ஏ வழக்கு விசாரணையை தொடங்கலாம் என்ற நிலை நிலவுகிறது.

கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபினுக்கு உடைந்தையாக இருந்ததற்காக ஏற்கெனவே கோவை போலீஸாரால் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆறாவது நபரக அப்சர்கான் என்பவரை போலீஸ் கைது செய்துள்ளது.
அப்சர் கான் உயிரிழந்த ஜமேசா முபினின் சகோதரர் ஆவார். எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். நேற்று வின்சென்ட் சாலையில் உள்ள அவரது வீட்டில் போலீஸ் சோதனையில் ஈடுபட்டனர். அதில்தான் முபினுக்கு அப்சர் உதவியது தெரியவந்துள்ளது.

முபினுக்கு வெடி மருந்துக்கு தேவையான வேதிப் பொருள்களை அப்சர்தான், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் மூலம் வாங்கிக் கொடுத்திருக்கிறார். பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், சல்பர், கார்கோல் போன்ற பல்வேறு பொருள்களை அப்சர் ஆன்லைன் மூலம் ஆர்டர் போட்டுக் கொடுத்திருக்கிறார்.
அப்சரைப் போலவே, முபின் பல்வேறு முகவரிகளின் மூலம் வெடி மருந்துக்கான வேதிப் பொருள்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். இதனிடையே கைது செய்யப்பட்ட 5 பேரை இன்று முதல் மூன்று நாளுக்கு போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கின்றனர்.

இன்றும் போலீஸார் கரும்புக்கடை, ஆசாத்நகர், புல்லுக்காடு, போத்தனூர், குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் சந்தேகப் பட்டியலில் உள்ளோர் வீடுகளில் ரெய்டு நடத்தி வருகின்றனர்.