ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்துவருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை முதல் மீன் வளத்துறை அதிகாரிகள் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்த மீனவர்களின் விசைப்படகுகளை ஆய்வுசெய்தனர்.
இதற்கிடையே மீன் வளத்துறை அதிகாரிகள் விசைப்படகுகளில் ஆய்வு நடத்துவதற்கு லஞ்சம் வாங்குவதாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. அதனடிப்படையில் ராமேஸ்வரம் மீன் வளத்துறை அலுவலகத்துக்கு வந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், மீன் வளத்துறை அலுவலகக் கதவுகளைப் பூட்டி இரவு முழுவதும் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர்.

பின்னர் மீன் வளத்துறை அலுவலகத்திலிருந்து ரூ.55 ஆயிரம் பணம், போலியான ஆவணங்களைத் தயார்செய்து படகுகளுக்கு உரிமை வழங்கியது உள்ளிட்ட முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றிச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. அரசு வழங்கும் மானிய டீசலைப் பெறுவதற்காக மீனவர்களுக்கு போலியான ஆவணங்கள் மூலம் படகுகளை இயக்க அனுமதி வழங்கியும், ஒரே நம்பரில் இரண்டு, மூன்று படகுகள் செயல்பட்டுவந்ததும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ஓராண்டுக்குப் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்திவந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் மூலம் தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக மீன் வளத்துறை அதிகாரிகளிடம், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளவிருக்கின்றனர்.