அஸ்ஸாம் மாநிலம், திப்ருகர் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் தங்கும் விடுதியில் ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் ஐந்து பேர் சனிக்கிழமை இரவு ராகிங் செய்திருக்கின்றனர். சீனியர்களின் ராகிங்கைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆனந்த் சர்மா என்ற ஜூனியர் மாணவர், விடுதியின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்ததில் படுகாயமடைந்திருக்கிறார். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதில் பாதிக்கப்பட்ட ஆனந்த் சர்மா என்ற மாணவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இவர் வணிகவியல்துறையின் மாணவராவார்.

இந்தச் சம்பவத்தையடுத்து போலீஸிடம் சென்ற ஆனந்த் சர்மாவின் தாயார் சரிதா ஷர்மா, ``சீனியர்களால் கடந்த நான்கு மாதங்களாகச் சித்ரவதைக்குள்ளாவதாக என் மகன் என்னிடம் கூறினான். மேலும், நேற்றிரவு எனக்கு போன் செய்த என் மகன், தான் விடுதிக்குச் செல்வதாகவும், இரவு முதல் காலை வரை அவர்கள் சித்ரவதை செய்வதாகவும் தெரிவித்தான். இப்போது என் மகனுக்கு மார்பில் காயமும், காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டிருக்கின்றன" எனப் புகாரளித்தார்.
பின்னர் புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த திப்ருகார் போலீஸார், வழக்கு பதிவுசெய்து ஐந்து பேரைக் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் மட்டும் முன்னாள் மாணவர் என்றும், நான்கு பேர் தற்போது பல்கலைக்கழகத்தில் படித்துவரும் மாணவர்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தன் ட்விட்டர் பக்கத்தில், `ராகிங் வேண்டாம்' என மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
மேலும் ஆனந்த் சர்மா மட்டுமல்லாமல் இன்னும் இரண்டு ஜூனியர் மாணவர்கள் ராகிங்கால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து பல்கலைக்கழக அதிகாரிகள், ராகிங் தடுப்புப் பணிக்குழுவினர், இந்த விவகாரத்தில் விசாரணையைத் தொடங்கியிருக்கின்றனர்.