அகில இந்திய காங்கிரஸ் இளைஞரணித் தலைவராக இருப்பவர் ஸ்ரீனிவாஸ். கர்நாடகாவைச் சேர்ந்த அவர் தற்போது தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவர் மீது அஸ்ஸாம் காங்கிரஸ் இளைஞரணித் தலைவர் அங்கிதா தத்தா பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுத்துள்ளார்.
அவர் இது தொடர்பாக அஸ்ஸாம் போலீஸிலும் புகார் செய்துள்ளார். அங்கிதா தத்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், ’சத்தீஷ்கரில் பாரத் ஜோடோ யாத்திரையின் போது ஸ்ரீனிவாஸ் என்னிடம் வந்து ’என்ன குடிக்கிறீர்கள், வோட்கா குடிக்கிறீர்களா?’ என்று கேட்டு என்னை அதிர்ச்சியடைய வைத்தார்.
அதோடு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியிடம் புகார் செய்தேன். ஆனால் அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஸ்ரீவானி கடந்த 6 மாதங்களாக எனக்கு மனரீதியாக துன்புறுத்தல் கொடுத்து வருகிறார். அதோடு கட்சி தலைமையில் என்னைப் பற்றி புகார் செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறி மிரட்டினார். ஸ்ரீனிவாஸிற்கு எதிராக போலீஸில் புகார் செய்திருக்கிறேன். எனக்கு கட்சி மாநில தலைமை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது’ என்று குற்றம் சாட்டியிருந்தார்.
அங்கிதாவின் ட்விட்டர் பதிவின் அடிப்படையில் தேசிய மகளிர் கமிஷன் அஸ்ஸாம் போலீஸாருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அங்கிதாவின் புகார் குறித்து பாரபட்சமின்றி குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விசாரித்து தங்களுக்கு அறிக்கை அனுப்பும் படி அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் தன்னை அவமதிப்பதாகக் கூறி ஸ்ரீனிவாஸ், அங்கிதாவிற்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
இது தொடர்பாக ஸ்ரீனிவாஸ் அளித்துள்ள பேட்டியில், ``தீவிர தேர்தல் பிரசாரம் காரணமாக பா.ஜ.க மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்குப் பதிலளிக்க முடியாமல் போய்விட்டது. கர்நாடகாவில் பா.ஜ.க. மோசமான தோல்வியைச் சந்திக்கும்" என்று தெரிவித்தார்.
இது குறித்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான தேபப்ரதா சைகியா கூறுகையில், ``ஸ்ரீனிவாஸ் சொந்த மாநிலத்தில் தேர்தல் நடப்பதால், இக்குற்றச்சாட்டு அதோடு தொடர்புடையதாக இருக்கலாம். பா.ஜ.க.வின் உத்தரவின் பேரில் போலீஸார் ஸ்ரீனிவாஸ் மீது வழக்குப் பதிவு செய்யலாம்" என்று தெரிவித்தார். அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா இது குறித்து அளித்த பேட்டியில், ’அங்கிதாவின் புகார் அவர்களின் உட்கட்சி பிரச்னை. அவர் போலீஸில் புகார் கொடுத்தால் அது குறித்து விசாரிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.