நாகை அருகே சாலையில் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக இருந்த இரும்புத் தடுப்புகளை அகற்றிய நபரை, காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் பூட்ஸ் காலால் உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அந்த உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
தமிழக எல்லையான நாகை மாவட்டம், நாகூர் அருகேயுள்ள வாஞ்சூர் ரவுண்டானாவில் புதுச்சேரியிலிருந்து மதுபானம் கடத்துவதைத் தடுக்கும் வகையில், திருமருகல் சாலையில் போலீஸார் இரும்புத் தடுப்புகள் அமைத்திருக்கின்றனர்.

நான்கு சாலைகளில், இரண்டு சாலைகள் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பேருந்து, கனரக வாகனங்கள் வளைந்து செல்வதில் சிரமம் ஏற்படுவது தொடர்ந்துவந்தது. தடுப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட நேரம் நிற்கும் நிலை அடிக்கடி ஏற்படும். இதனால் பயணிகள் சிரமத்துக்கு ஆளாகிவந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு கும்பகோணத்திலிருந்து நாகைக்கு வந்த இரண்டு அரசுப் பேருந்துகள், தடுப்புகளில் வளைந்து செல்ல முடியாமல் பயணிகளுடன் நீண்ட நேரம் நிற்கும் சூழல் ஏற்பட்டது.
இதையறிந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் தடுப்புகளை அகற்றி பேருந்துகள் எளிமையாகச் செல்ல வழிவகை செய்ய வேண்டுமெனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது.
இதையடுத்து பயணிகள் வெகுநேரம் சிரமப்பட்டதால், ஆரோக்கியதாஸ் என்பவருடன் சேர்ந்து சிலர் தடுப்புகளை அகற்றி பேருந்துகள் செல்வதற்கு வழியை ஏற்படுத்தினர். இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த நாகூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனிவேல், ஆரோக்கியதாஸைக் கடுமையாகத் தாக்கி ஒருமையில் பேசியிருக்கிறார்.

இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, உதவி ஆய்வாளர் பழனிவேல், ஆரோக்கியதாஸை பூட்ஸ் காலால் உதைத்து கடுமையாகத் தாக்கியிருக்கிறார். பின்னர் போலீஸார் ஆரோக்கியதாஸை வாகனத்தில் ஏற்றி, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆரோக்கியதாஸ் தாக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, உதவி ஆய்வாளர் பழனிவேலை ஆயுதப்படைக்கு மாற்றி உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.