அதன் பிறகு அந்த நிறுவனத்தில் ஆவணங்களை முறையாகப் பராமரிக்கவில்லை என்று அவர்களுக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பியிருக்கிறார். அதையடுத்து, 'எங்களுடைய நிறுவனத்தில் ஆவணங்கள் அனைத்தும் முறையாகப் பராமரிக்கப்பட்டிருக்கிறது' எனக் கூறிய ஆலோசகர் மனோகரன், ஆவணங்களின் நகல்களைத் தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திக்கிடம் கொடுத்திருக்கிறார்.

அதற்கு தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திக்கோ, 'திருச்சியிலுள்ள எல்லா நிறுவனங்களும் எங்களை முறையாகக் கவனிக்கிறாங்க. ஆனா, உங்களுடைய நிறுவனத்திலிருந்து மட்டும் எங்களைக் கவனிக்காமல் இருக்குறீங்க. நாங்க நினைச்சா உங்களுக்கு எப்படி வேண்டுமானாலும் அபராதம் விதிக்கலாம் தெரியுமா!' என்றதோடு '15,000 ரூபாய் கொடுத்துடுங்க. உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் பார்த்துக்குறேன்' எனக் கூறியிருக்கிறார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மனோகரன் மேற்படி நிறுவனத்திடம் அனுமதி பெற்றுவிட்டு, தன்னிடம் லஞ்சம் கேட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திக் மீது நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார்.
அதனடிப்படையில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி மணிகண்டனிடம் புகாரளித்திருக்கிறார். அந்தப் புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஸ்கெட்ச் போட்டுக் கொடுக்க, மனோகரனிடமிருந்து தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திக் 15,000 ரூபாய் லஞ்சமாக வாங்கியிருக்கிறார். அதை மறைந்திருந்து கவனித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திக்கை கையும் களவுமாகப் பிடித்து கைதுசெய்தனர்.