12.02.2023 அன்று அதிகாலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு ஏடிஎம் மையங்களை ‘காஸ்’ வெல்டிங் மூலம் உடைத்து, ரூ.72.79 லட்சம் பணத்தை அள்ளிச் சென்றது வடமாநில கொள்ளைக் கும்பல் ஒன்று. தமிழ்நாட்டையே தடதடக்கவைத்த இந்த வழக்கை தமிழ்நாடு போலீஸ் விரைவாக, சிறப்பாகக் கையாண்டது. வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணன் உத்தரவின்படி, வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி மேற்பார்வையில், நான்கு எஸ்.பி-க்கள் தலைமையில் ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ராஜஸ்தான், ஹரியானா போன்ற வடமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டன.

தீவிர தேடுதல் வேட்டையில், கொள்ளையர்கள் கர்நாடக மாநிலம், கோலார் பகுதியில் தங்கியிருந்து முன்கூட்டியே நோட்டமிட்டிருப்பது தெரியவந்தது. அதன்படி, கொள்ளையர்கள் அடுத்தடுத்து கைதுசெய்யப்பட்டனர். ஏற்கெனவே, எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.5 லட்சம் ரொக்கப் பணம், மூன்று கார்கள், ஒரு கன்டெய்னர் லாரியைக் கைப்பற்றிய போலீஸார், இந்த வழக்கில் மூளையாகச் செயல்பட்ட ஒன்பதாவது கொள்ளையனையும் தற்போது கைதுசெய்திருக்கிறார்கள்.
பிடிபட்ட நபர், ஹரியானா மாநிலம், நூ மேவாத் மாவட்டத்திலுள்ள பாதஸ் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான ஆசீப் ஜாவேத் என போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள். இவன் ஹரியானா - ராஜஸ்தான் மாநிலங்களின் எல்லைப் பகுதியான ஆரவல்லி மலைப் பகுதியிலுள்ள பாழடைந்த கட்டடத்துக்குள் பதுங்கியிருந்தான். தமிழ்நாடு போலீஸார், பல சவால்களைக் கடந்து, துணிகரமாகச் செயல்பட்டு, துப்பாக்கிமுனையில் ஆசீப் ஜாவேத்தைக் கைதுசெய்திருக்கிறார்கள். அவனிடமிருந்து ரூ.15 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் முதல் குற்றவாளியாகவும் ஆசீப் ஜாவேத் சேர்க்கப்பட்டிருக்கிறான். இதையடுத்து, மேவாட் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆசீப் ஜாவேத்தை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துவந்த போலீஸார், பலத்த பாதுகாப்புடன் திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்குப் பின்னர் அவன் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்படவிருக்கிறான். பெரும் சவாலாக விளங்கிய இந்த வழக்கில், சிறப்பாகச் செயல்பட்ட போலீஸாரை டி.ஜி.பி சைலேந்திர பாபு பாராட்டியதோடு ரூ.1 லட்சம் வெகுமதியும் வழங்கியிருக்கிறார்.