விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் புகுந்து சிகிச்சைப் பெற்றுவந்த சிறைக்கைதிகளைக் கொலைசெய்ய முயற்சிசெய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து போலீஸ் தரப்பில் பேசுகையில், "திண்டுக்கல் மாவட்டத்தில் சின்னத்தம்பி என்பவரைக் கொலைசெய்த குற்றத்துக்காக, அதே மாவட்டம் மேட்டுப்பட்டி, மொட்டைப்பட்டி ரோட்டைச் சேர்ந்த விக்னேஷ் என்ற விக்ணு (வயது 29), வேடப்பட்டி ஒத்தால்பாலம் அபிராமி நகரைச் சேர்ந்த யுவராஜ்குமார் (வயது 28) ஆகிய இருவரையும் கடந்த மாதம் போலீஸார் கைதுசெய்தனர்.

தொடர்ந்து நிர்வாகக் காரணங்களுக்காக, விக்னேஷும், யுவராஜ்குமாரும் விருதுநகர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் திடீர் உடல் நலக்குறைவு ஏற்படவும், விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அவர்கள் தொடர்ந்து 4-வது நாளாக சிகிச்சை பெற்றுவருகின்றனர். பாதுகாப்புப் பணிக்கென சுழற்சி முறையில் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
அந்தவகையில் காவலர்கள் சிலம்பரசன், அழகுராஜா ஆகியோர் நேற்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், மருத்துவமனையில் விக்னேஷும், அழகுராஜாவும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வார்டுக்குள், திடீரென முகமுடி அணிந்துகொண்டு பயங்கர ஆயுதங்களுடன் ஐந்து பேர்கொண்ட மர்மக் கும்பல் உள்ளே புகுந்திருக்கிறது.
முன்னரே அவர்கள் போட்டுவைத்திருந்த திட்டத்தின்படி, பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் சிலம்பரசன், அழகுராஜா ஆகியோர்மீது மிளகாய்ப்பொடியைத் தூவிவிட்டு சிறைக்கைதிகள் இருவரையும் அரிவாளால் வெட்டியிருக்கின்றனர். இதில் கைதிகளுக்குக் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட காவலர்கள், மர்மக் கும்பலைத் துப்பாக்கியைக் காட்டி தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். தொடர்ந்து சிறைக்கைதிகளைத் தனியே ஓர் அறையில்வைத்து பூட்டிவிட்டு, கைதிகளை வெட்டவந்த மர்மக் கும்பலை நோக்கி `துப்பாக்கியால் சுட்டுவிடுவேன்’ என மிரட்டி சுடுவதற்கு ஆயத்தமானதும் கொலைசெய்ய வந்தவர்கள் பயந்து அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
மருத்துவமனைக்குள் நடைபெற்ற இந்தச் சம்பவத்தால் அங்கு சிகிச்சையிலிருந்த நோயாளிகளும், பொதுமக்களும் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள். சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாச பெருமாள், காவல் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

இந்தச் சம்பவத்தில் காயமுற்ற இரு கைதிகளுக்கும் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. கைதிகளை மருத்துவமனைக்குள் புகுந்து வெட்ட முயன்ற மர்மக் கும்பலைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன" என போலீஸார் தெரிவித்தனர்.
மேலும், இது குறித்து வழக்கு பதிவுசெய்த கிழக்குக் காவல் நிலைய போலீஸார், கொலைசெய்ய முயற்சிசெய்த கும்பல் குறித்து விசாரணை நடத்தியதில் திண்டுக்கல்லில் கொலைசெய்யப்பட்ட சின்னதம்பியின் உறவினர்களான விஜி, நட்டுராயன், ஒலிசை குமார், குணம், பரமசிவம் ஆகிய ஐந்து பேர் எனத் தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாக போலீஸார் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.