உத்தரப்பிரதேச மாநிலம், அலிகஞ்ச் நகரிலுள்ள மொஹல்லா குலாம் உசேன் நகரில் வசிப்பவர் ஹரிசங்கர். இவரின் இரண்டரை மாத ஆண் குழந்தைக்குக் காலில் சிறிய கட்டி இருந்திருக்கிறது. அதை நீக்க வேண்டும் என விரும்பிய ஹரிசங்கர், கான்காவிலுள்ள சராய் பஸ்டா சாலைக்கு அருகில், `பெங்காலி’ என்ற பெயரில் இயங்கிவந்த கிளினிக்குக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அந்த கிளினிக்கை போலி மருத்துவரான திலக் சிங் என்பவர் நடத்திவந்திருக்கிறார். அவரிடம் குழந்தையின் கட்டி குறித்துக் கூறியதற்கு, `சிறிய அறுவை சிகிச்சை செய்தால் போதும், கட்டியை அகற்றி குணப்படுத்திவிடலாம்’ என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
அதை நம்பி குழந்தையை ஒப்படைத்த ஹரிசங்கர், கடந்த 13-ம் தேதி அறுவை சிகிச்சைக்கும் ஒப்புக்கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. அறுவை சிகிச்சையின்போது குழந்தையின் காலில் நரம்பு அறுபட்டிருக்கிறது. இதனால் கடும் ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. பதறிய திலக் சிங், குழந்தையைப் பெற்றோரிடம் கொடுத்துவிட்டு கிளினிக்கை மூடிவிட்டு தலைமறைவாகியிருக்கிறார். அதன் பிறகு குழந்தையை ஃபருக்காபாத் மருத்துவமனைக்கு ஹரிசங்கர் அழைத்துச் சென்றார். அங்கு குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இது குறித்து ஹரிசங்கர் அலிகஞ்ச் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார். இறந்த குழந்தையின் உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்திருப்பதாகக் காவல்துறை பொறுப்பாளர் பிரேம்பால் சிங் தெரிவித்திருக்கிறார். இது குறித்துப் பேசிய தலைமை மருத்துவ அதிகாரி உமேஷ் சந்திர திரிபாதி, ``இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.