சேலம், அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் உதயசங்கர். வெள்ளிப் பட்டறையில் வேலை செய்து வந்தார். மேலும் பா.ஜ.க-வின் மாநகர இளைஞரணிச் செயலாளராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில், இன்று மாலை பள்ளப்பட்டி மூன்று ரோடு பகுதியிலுள்ள விவசாய விற்பனை கூட்டுறவு வங்கி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல், உதயசங்கரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது.

வாக்குவாதம் முற்றவே அந்தக் கும்பல், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து உதயசங்கரை சரமாரியாக வெட்டத் தொடங்கியது.
அப்போது உதயசங்கர் அருகிலிருந்த பேக்கரி கடைக்குள் வெட்டுக் காயங்களுடன் ஓடினார். ஆனாலும் அவரைப் பின் தொடர்ந்து வந்த கும்பல், அவரை தரதரவென நடுரோட்டுக்கு இழுத்து வந்து சரமாரியாக வெட்டியது.
இதில் உதயசங்கரின் தலை, வயிறு, கை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் காயங்கள் ஏற்பட்டன. அதையடுத்து, அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. ரத்த வெள்ளத்தில் கிடந்த உதயசங்கரை அந்தப் பகுதி மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் தகவலறிந்து மாநகர துணை காவல் ஆணையர் கௌதம் கோயல், உதவி ஆணையாளர் நிலவழகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்தப் பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வுசெய்ததில், மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் உதயசங்கரை வெட்டிவிட்டுத் தப்பி ஓடியது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.