விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை அடுத்த பாளையம்பட்டிப் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்வா கண்ணன். இவர், அந்தப் பகுதியிலுள்ள பெனியேல் தேவாலயத்தில் பாதிரியாராகப் பணியாற்றிவருகிறார். இந்த நிலையில், அருப்புக்கோட்டையை அடுத்த என்.ஜி.ஓ காலனியில் வசிக்கும் சபை ஊழியரான விஜயலட்சுமி என்பவரின் வீட்டில்வைத்து ஜோஸ்வா கண்ணன் உட்பட ஏழு ஆண்கள், ஏழு பெண்கள் சேர்ந்து, மாற்றுமத சிறுவர், சிறுமியர்களுக்கு கோடை விடுமுறை பைபிள் வகுப்பு எடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது பற்றிய தகவலறிந்த அதே பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க உறுப்பினர் சுரேஷ், சிறுவர், சிறுமிகளை மதமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவதாகக் கருதி, ஜோஸ்வா கண்ணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஜோஸ்வா கண்ணன், சுரேஷைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து, தான் தாக்கப்பட்டது குறித்து சுரேஷ், அருப்புக்கோட்டை பா.ஜ.க ஒன்றியத் தலைவர் பூலோகராஜுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். தகவலின்பேரில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் அங்கு வந்த பூலோகராஜ், ஜோஸ்வா கண்ணனிடம் சென்று வாக்குவாதம் செய்திருக்கிறார். அப்போது மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, கைகலப்பானது. அதில் ஜோஸ்வா கண்ணன், கீழே கிடந்த கல்லை எடுத்து எரிந்ததில் பூலோகராஜின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியே பரபரப்பானது.
இந்த மோதல் குறித்துத் தகவலறிந்த போலீஸார், உடனடியாக விரைந்து வந்து சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் மதரீதியான மோதல் உருவாகாமல் இருப்பதற்குக் கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதற்கிடையில் பா.ஜ.க-வினர் தன்னைத் தாக்கியதாக பாதிரியார் ஜோஸ்வா கண்ணனும், காயம்பட்ட பா.ஜ.க நிர்வாகியான பூலோகராஜும் அடுத்தடுத்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான புகார்களின்பேரில் அருப்புக்கோட்டை தாலுகா போலீஸார் இரு தரப்பினர்மீதும் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். இது குறித்து நம்மிடம் பேசிய பூலோகராஜ், ``கோடைக்கால பைபிள் வகுப்பு எனும் பெயரில் மாற்றுமத சிறுவர், சிறுமிகளை மதம் மாற்றும் முயற்சி வெகுநாள்களாகவே நடந்துவருகிறது. என்.ஜி.ஓ காலனியில் வீட்டுக்குள்வைத்து, மாற்று மதச் சிறுவர், சிறுமிகளை முழங்காலிடச்செய்து வேதாகம வசனங்கள் உள்ள புத்தகத்தைப் படிக்கச் செய்திருக்கின்றனர். சிறுவர், சிறுமிகளைக் கட்டாயப்படுத்தி வேதாகமத்தைப் படிக்கச் செய்வது தவறானது. இந்த விஷயம் மாற்று மதச் சிறுவர், சிறுமிகளின் பெற்றோர்களுக்கும் தெரியாது. எனவே, இதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க, எங்கள் கட்சி உறுப்பினர் சுரேஷ் வீடியோ எடுக்க முற்பட்டிருக்கிறார். அப்போதுதான் அவர் தாக்கப்பட்டார். இதற்கு நியாயம் கேட்டுச் சென்ற என்னையும், ஜோஸ்வா கண்ணன் கல்லால் தாக்கிக் காயப்படுத்தினார்.
பிரச்னை ஏற்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. எங்கள் கட்சி உறுப்பினரைத் தாக்கியதற்கு மன்னிப்புக் கேளுங்கள் என்று தன்மையாகத்தான் சொன்னோம். ஆனால் அதற்கு உடன்பட மறுத்து அவர்தான் எங்களைத் தாக்கினார். என் தலையில் ரத்தம் வருவதைப் பார்த்ததும், தன்னுடைய சொந்த காரில் அங்கிருந்து விரைந்து தப்பித்த ஜோஸ்வா, மருத்துவமனையில் எங்களுக்கு முன்னதாக வந்து சேர்ந்துகொண்டார். அவர் என்னைக் கல்லால் தாக்கியதற்கு ஆதாரம் இருக்கிறது" என்றார்.

பாதிரியார் ஜோஸ்வா கண்ணன் பேசுகையில், "எங்கள் சபையைச் சேர்ந்த விஜயலட்சுமியின் தந்தையார் இறந்து 40-ம் நாள் காரிய நினைவுநாளுக்காக ஊழியம் செய்யச் சென்றேன். வழிபாட்டுக்குப் பின்பு சிறுவர், சிறுமிகளுக்குச் சாப்பாடு பரிமாறுவது வழக்கம். அதற்காகத்தான் நானும் எங்கள் சபையைச் சேர்ந்தவர்களும் அங்கு பிரார்த்தனை நடத்திக்கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த பா.ஜ.க-வினர், வீடு புகுந்து எங்களிடம் தேவையின்றி பிரச்னை செய்தனர். அநாவசியமாக வீடியோ எடுக்க முயன்றதால், சிறுவர், சிறுமிகள் பயந்து அழ ஆரம்பித்துவிட்டனர்.
இதனால் பதற்றமாகிப்போன எங்கள் சபை ஊழியர்கள், என்னை அங்கிருந்து கிளம்பச் சொன்னார்கள். அதனடிப்படையில், அங்கிருந்து காரில் கிளம்பினேன். அப்போது, என்னைப் பின்தொடர்ந்து வந்தவர்கள் நடுவழியில் என்னை வழிமறித்து வலுக்கட்டாயமாக காரிலிருந்து இறங்கச் செய்து, தகராறு செய்தனர். அப்போது, நான் தாக்கப்பட்டேன். இதில் என்னுடைய மூக்குக்கண்ணாடி உடைந்து கீழே விழுந்தது. நானும் நிதானமில்லாமல் நிலை தடுமாறி கீழே விழுந்தேன். இதையடுத்து சுதாரித்துக்கொண்ட நான் அங்கிருந்து கிளம்பி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்தேன்" என விளக்கமளித்தார்.