காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வளர்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர் வளர்புரம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார். மேலும், பா.ஜ.க-வில் எஸ்.சி., எஸ்.டி பிரிவின் மாநிலப் பொருளாளராகவும் பதவி வகித்துவந்தார்.

சங்கர், ரியல் எஸ்டேட் பிசினஸ், டிராவல்ஸ், பழைய இரும்பு வியாபாரம் உள்ளிட்ட பிசினஸ்களில் ஈடுபட்டுவந்தார். இவர்மீது குற்ற வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன. தொழில் போட்டி காரணமாக சங்கரைக் கொலைசெய்ய ஒரு டீம் நீண்டகாலமாக முயற்சி செய்துவந்தது. அந்த டீமின் தாக்குதலிலிருந்து சங்கர் தப்பிவந்தார். இந்த நிலையில் நேற்று இரவு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் சரமாரியாக வெட்டியும் கொலை செய்யப்பட்டார் சங்கர். இந்தச் சம்பவம், காட்டுத்தீபோல பரவியது. அவரின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிந்தது. உடனே சங்கரின் ஆதரவாளர்கள், அவரின் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்தனர்.
சாலையில் கிடந்த சங்கரின் சடலத்தைப் பார்த்து கதறி அழுதனர். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நசரத்பேட்டை போலீஸார், சங்கரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பா.ஜ.க பிரமுகர்களும் விரைந்துவந்து சங்கரின் கொலைக்கு நீதிகேட்டு கோஷமிட்டனர். அவர்களிடம் போலீஸார் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சங்கரின் கொலை தொடர்பாக வழக்கு பதிவுசெய்த நசரத்பேட்டை போலீஸார், சிசிடிவி கேமரா பதிவுகள், செல்போன் சிக்னல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரித்துவருகின்றனர். கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

தனிப்படை போலீஸாரிடம் பேசினோம். ``கொலைசெய்யப்பட்ட சங்கரின் நண்பர் குமரன். இவர், ஸ்ரீபெரும்புதூரிலுள்ள தொழிற்சாலைகளிலிருந்து பழைய இரும்புகளை வாங்கி வியாபாரம் செய்துவந்தார். அதில் ஒரு பிரபல ரௌடியுடன் குமரனுக்கு மோதல் ஏற்பட்டது. அதனால் அந்த ரௌடிக் கும்பல் குமரனைக் கொலைசெய்தது. அதன் பிறகு குமரன் இடத்துக்கு சங்கர் வந்தார். குமரன் கொலைக்கு பழிக்குப் பழிவாங்க அடுத்தடுத்து சில கொலைகள் நடந்தன. அதற்கு மூளையாக சங்கர் செயல்பட்டு வந்தார். அதனால் சங்கர் மீதும் வழக்குகள் பதிவாகின. இதையடுத்து, சங்கரின் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து என்ற சூழ்நிலை உருவானது.
இந்தச் சூழலில்தான் சங்கர், பா.ஜ.க-வில் இணைந்தார். அவருக்கு எஸ்.சி பிரிவில் மாநிலப் பொருளாளர் பதவி வழங்கப்பட்டது. கட்சிப் பணி காரணமாக சங்கர் அடிக்கடி வெளியில் செல்வதை, அவரின் எதிரிகள் கண்காணித்து வந்தனர். அவர்கள் சங்கரைக் கொலைசெய்ய இரண்டு தடவை முயற்சி செய்து அது தோல்வியில் முடிவடைந்தது. இந்தச் சமயத்தில்தான் சங்கர் தரப்பு கட்சிப் பிரமுகர் ஒருவரின் ஏழாம் ஆண்டு நினைவுநாளையொட்டி அந்தப் பிரமுகரின் ஆதரவாளர்கள் பூந்தமல்லி பகுதி முழுவதும் நினைவஞ்சலி போஸ்டர்களை ஒட்டியிருந்தனர்.

அந்தப் பிரமுகரின் நினைவுநாளில்தான் சங்கர், நசரத்பேட்டை சிக்னல் அருகே வெடிகுண்டு வீசி கொலைசெய்யப்பட்டிருக்கிறார். அதனால் பழிக்குப் பழியாக சங்கர் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. அந்தக் கோணத்திலும் விசாரித்துவருகிறோம். சங்கர் கொலைசெய்யப்பட்ட சமயத்தில் அங்கு வந்த இரண்டு பேரைப் பிடித்திருக்கிறோம். அவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது. விரைவில் சங்கர் கொலை வழக்கில் குற்றவாளிகள் கைதுசெய்யப்படுவார்கள். அப்போதுதான் சங்கரின் கொலைக்கான காரணம் தெரியவரும்" என்றனர்.