Published:Updated:

கர்நாடகா: பாஜக-வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... 189-ல் 52 புதுமுகங்கள் - எடுபடுமா வியூகம்?!

கர்நாடகா பா.ஜ.க
News
கர்நாடகா பா.ஜ.க

வேட்பாளர்கள் தேர்வில் கையாளப்பட்ட பல வியூகங்கள் செல்லுபடியாகுமா... கர்நாடகாவில் மீண்டும் ‘டபுள் இன்ஜின்’ அரசை பா.ஜ.க நிறுவுமா?

Published:Updated:

கர்நாடகா: பாஜக-வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... 189-ல் 52 புதுமுகங்கள் - எடுபடுமா வியூகம்?!

வேட்பாளர்கள் தேர்வில் கையாளப்பட்ட பல வியூகங்கள் செல்லுபடியாகுமா... கர்நாடகாவில் மீண்டும் ‘டபுள் இன்ஜின்’ அரசை பா.ஜ.க நிறுவுமா?

கர்நாடகா பா.ஜ.க
News
கர்நாடகா பா.ஜ.க

தென்னிந்தியாவில் கர்நாடகத்தில் மட்டுமே பா.ஜ.க ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருப்பதால், மே மாதம் நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத்தேர்தல் பா.ஜ.க-வுக்கு மிக முக்கியத் தேர்தலாகக் கருதப்படுகிறது. பா.ஜ.க-வின் எதிரணியான காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி கட்சியினர் தங்களின் 90 சதவிகிதம் வேட்பாளர்களின் பெயர் பட்டியலை வெளியிட்ட நிலையில், பா.ஜ.க மட்டுமே பட்டியலை வெளியிடாமல் இருந்தது.

வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் மூவர், கடந்த இரண்டு மாதங்களில் ஊழல் புகாரில் சிக்கிய நிலையில், ’பா.ஜ.க ஆட்சி 40 சதவிகிதம் ஊழல் நிறைந்தது’ என, எதிரணிகள் வறுத்தெடுத்தன. இதனால், ஊழல் புகாரை வலுவிழக்கச்செய்ய, கறைபடியாத கைகளைத் தேடிய பா.ஜ.க-வினர், வேட்பாளர்களைத் தேர்வுசெய்ய பிரத்யேக சர்வே, நிர்வாகிகள், கட்சிக்குள்ளேயே ‘இன்டர்னல் எலெக்‌ஷன்’ என, பலகட்ட வியூகங்களைக் கையாண்டு, வேட்பாளர்கள் பெயர் பட்டியலைத் தயாரித்தது. பா.ஜ.க மேலிடம் பட்டியல் குறித்து ஒரு வாரம் ஆலோசனை நடத்திய நிலையில், நேற்று 11–ம் தேதி இரவு, வரும் தேர்தலுக்கான தனது முதற்கட்ட வேட்பாளர் பெயர் பட்டியலை வெளியிட்டது.

புது டெல்லியில் பா.ஜ.க தலைமை அலுவலகத்தில், யூனியன் அமைச்சரும் கர்நாடகத் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளருமான தர்மேந்திர பிரதான், மூத்த பா.ஜ.க தலைவர் அருண் சிங், தமிழக மாநிலத் தலைவரும், கர்நாடக பொறுப்பாளருமான அண்ணாமலை தலைமையிலான குழுவினர், மொத்தமுள்ள 224 தொகுதிகளில், 189 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டனர்.

பெயர்களின் பட்டியல் வெளியிட்ட அருண் சிங், ‘‘முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில், 52 புதுமுகங்கள் களம் காண்கின்றனர். மொத்தப் பட்டியலில், 32 பேர் ஓ.பி.சி பிரிவிலும், 30 பேர் எஸ்.சி பிரிவிலும், 16 பேர் எஸ்.டி பிரிவிலுமுள்ள வேட்பாளர்கள். 8 பெண்களும் இந்தப் பட்டியலில் இருக்கின்றனர். இந்த முறை அதிகப்படியான இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறோம்’’ எனக் கூறியிருக்கிறார்.

கர்நாடகா பா.ஜ.க
கர்நாடகா பா.ஜ.க

முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எந்தத் தொகுதி ஒதுக்கப்படுமென எதிர்பார்ப்பு நிலவிவந்த நிலையில், அவரின் ஹாவேரி மாவட்டமான சிக்கான் தொகுதியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. எடியூரப்பா தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அறிவித்து, அவரின் மகனுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமென கூறியிருந்தார்.

இந்த நிலையில், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கு, எடியூரப்பா தற்போது எம்.எல்.ஏ-வாக உள்ள சிமோகா மாவட்டத்தின் சிக்கரிப்பூர் தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல், தமிழகத் தேர்தல் பொறுப்பாளரும் எம்.எல்.ஏ-வுமான சி.டி.ரவிக்கு, ஏற்கெனவே அவர் வென்றிருக்கும் சிக்மங்களூரு மாவட்டத்தின் சிக்மங்களூரு தொகுதியே ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், முன்னாள் முதல்வரும் மூத்த தலைவருமான ஜெகதிஷ் ஷெட்டர் பெயர், வேட்பாளர்கள் பெயர் பட்டியலில் இல்லை. அதிருப்தியிலுள்ள ஜெகதிஷ் ஷெட்டர், பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்துப் பேச திட்டமிட்டிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.

பசவராஜ் பொம்மை
பசவராஜ் பொம்மை

வேட்பாளர்கள் பட்டியலில் பெரும்பாலான மூத்த எம்.எல்.ஏ-க்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் இருப்பதால், பலரும் அதிருப்தியில் இருக்கின்றனர். வேட்பாளர்கள் தேர்வில் கையாளப்பட்ட பல வியூகங்கள் செல்லுபடியாகுமா... கர்நாடகாவில் மீண்டும் ‘டபுள் இன்ஜின்’ அரசை பா.ஜ.க நிறுவுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்...!