
ரத்தம் சொட்டச் சொட்ட வீட்டை நோக்கி ஓடிவந்த சங்கீதா, கதவை பலமாக தட்டிவிட்டு உயிரைவிட்டிருக்கிறார்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை அடுத்துள்ள வடசேரிகோணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சஜீவ் - ஷாலினி தம்பதி. கடந்த 27-12-2022 அன்று நள்ளிரவு 1:30 மணிக்கு இவர்கள் வீட்டுக் கதவு பலமாகத் தட்டப்படும் சத்தம் கேட்டிருக்கிறது. கண்விழித்து, மின்விளக்கை எரியவிட்டு, ஜன்னலைத் திறந்து பார்த்த தம்பதி அதிர்ச்சியில் உறைந்துபோயினர். வீட்டு வாசலில், அவர்களின் 17 வயது மகள் சங்கீதா கழுத்து அறுபட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கிடந்திருக்கிறார். பக்கத்து வீட்டாருடன் சேர்ந்து சங்கீதாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்துபோனார்.
‘தனது தங்கையுடன் தனியறையில் தூங்கிக்கொண்டிருந்த சங்கீதாவுக்கு என்ன நடந்தது...’ என்ற தந்தை சஜீவின் சந்தேகத்துக்கு போலீஸ் விசாரணையில் அதிர்ச்சியான விடை கிடைத்திருக்கிறது. இது குறித்துப் பேசும் போலீஸார், “பி.காம் படித்துவந்த சங்கீதாவும், ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியான கோபுவும் நான்கு மாதங்களுக்கு முன்பு காதலித்திருக்கின்றனர். இது சங்கீதாவின் பெற்றோருக்குத் தெரியவந்ததால் கண்டித்திருக்கின்றனர். எனவே, கோபுவின் நம்பரை பிளாக் செய்த சங்கீதா, அவருடனான காதலையும் பிரேக்அப் செய்திருக்கிறார்.

இந்த நிலையில், சங்கீதா வேறு யாரையாவது காதலிக்கிறாரா என்பதை அறிய திட்டமிட்டிருக்கிறார் கோபு. இதற்காக 15 நாள்களுக்கு முன்பு புதிதாக வேறொரு சிம் கார்டு வாங்கி, சங்கீதாவின் எண்ணுக்கு அகில் என்ற பெயரில் வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பி நட்பாகியிருக்கிறார். `அகில்’ என்ற பெயரில் சங்கீதாவிடம் சாட் செய்துவந்த கோபு, ‘என்னைக் கழற்றிவிட்டுவிட்டு புதிய நட்புக்காக சாட் செய்கிறாயா?’ என மனதுக்குள் கறுவியபடி பழிவாங்கத் திட்டமிட்டிருக்கிறார்.
கடந்த 27-ம் தேதி நள்ளிரவு, சங்கீதாவின் வீட்டுக்கு வெளியே ரோட்டில் நின்றிருந்த கோபு, ‘முக்கியமான விஷயம் நேரில் வா’ என சங்கீதாவை அழைத்திருக்கிறான். ‘இதோ வந்துவிடுகிறேன்’ என தன்னுடைய சகோதரியிடம் தகவல் சொல்லிவிட்டு வீட்டிலிருந்து ரோட்டுக்கு வந்திருக்கிறார் சங்கீதா. அங்கு ஹெல்மெட் அணிந்தபடி முகத்தை மறைத்து நின்ற கோபுவிடம் பேச்சுக் கொடுத்தபோதே சங்கீதாவுக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது. எனவே, ஹெல்மெட்டை கழற்றும்படி கூறியிருக்கிறார் சங்கீதா. ஹெல்மெட்டைக் கழற்றிய கோபு, சங்கீதாவின் கழுத்தைக் கத்தியால் ஆழமாக வெட்டிவிட்டு, அவரது செல்போனையும் பறித்துக்கொண்டு பைக்கில் தப்பிச் சென்றுவிட்டார்.
ரத்தம் சொட்டச் சொட்ட வீட்டை நோக்கி ஓடிவந்த சங்கீதா, கதவை பலமாக தட்டிவிட்டு உயிரைவிட்டிருக்கிறார். கோபு தப்பிச் சென்ற வழியில் வீசிவிட்டுச் சென்ற சங்கீதாவின் செல்போனைக் கைப்பற்றி சோதனை நடத்தியபோதுதான் அனைத்து விஷயங்களும் தெரியவந்தன. கோபு கைதுசெய்யப்பட்டிருக்கிறார்” என்றனர்.
பதின்ம வயதுப் பிள்ளைகளிடம் பெற்றோர் கூடுதல் கவனிப்பை மேற்கொள்ளவேண்டும் என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது!