திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகிலிருக்கும் செங்குணம் கிராமம், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். கட்டடத் தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் வழக்கறிஞர் ஜெயசங்கர் என்பவருக்குமிடையே வீட்டுமனை தொடர்பாக தகராறு ஏற்பட்டுவந்திருக்கிறது. இருவருமே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். நேற்று காலை 11:30 மணியளவில், பிரச்னைக்குரிய அந்த இடத்தில் சந்திரசேகரன் மாட்டுக் கொட்டகை அமைப்பதற்காக சுற்றுச்சுவர் கட்டியிருக்கிறார். இதையறிந்து ஆத்திரமடைந்த வழக்கறிஞர் ஜெயசங்கர், தன்னிடம் வழக்குக்காக அடிக்கடி வந்துசெல்லும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த மாற்றுச் சமூக இளைஞர்கள் சுமார் 10 பேரை அங்கு வரவழைத்திருக்கிறார்.

அந்த இளைஞர்களிடம் பணம் கொடுத்து, சந்திரசேகரனை தாக்கச் சொன்னாராம் ஜெயசங்கர். இளைஞர்களும் கம்பு, கட்டைகளுடன் ஊருக்குள் புகுந்து, சந்திரசேகரனைத் கொடூரமாகத் தாக்கியிருக்கிறார்கள். அதோடு அவர் கட்டிய சுவரையும் இடித்துத் தள்ளியிருக்கிறார்கள். சந்திரசேகரனை அடிக்க வேண்டாம் எனக் கதறிக்கொண்டு ஓடிவந்த அவரின் மனைவியையும் தலையில் தாக்கி, ஆபாசமாகத் திட்டியிருக்கிறார்கள் இளைஞர்கள். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. பெண்கள் சிலர் ஓடிவந்து காயமடைந்த சந்திரசேகனையும், அவரின் மனைவியையும் மீட்க முயல்கிறார்கள்; தாக்குதல் நடத்தும் இளைஞர்களையும் தடுக்கிறார்கள்.
ஆனால், அந்த இளைஞர்கள் தடுக்கவந்த பெண்களிடமும் சாதிப்பெயரைச் சொல்லி கோபத்தைக் காட்டியிருக்கிறார்கள். காட்சிகளும் கதறல் சத்தமும் காணொளியைப் பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கி பதறவைக்கிறது. தாக்குதலில் பலத்த காயமடைந்த சந்திரசேகரன் சிகிச்சைக்காக போளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மேலும், இது தொடர்பாக போளூர் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போளூர் டி.எஸ்.பி குமாரிடம் கேட்டபோது, ‘‘தாக்குதல் நடத்திய ஐந்து இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. தாக்குதலுக்கு காரணமான வழக்கறிஞர் ஜெயசங்கர் தலைமறைவாக இருக்கிறார். அவர் மீதும் வழக்கு பதிவுசெய்திருக்கிறோம். தாக்குதலில் ஈடுபட்ட மேலும் சில இளைஞர்களையும் அடையாளம் கண்டு கைதுசெய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறோம்’’ என்றார்.
வழக்கு விவரம்:
முதல் குற்றவாளியைத் தவிர மற்ற ஐந்து பேரும் கைதுசெய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார்கள். கைதுசெய்யப்பட்ட ஐந்து பேரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதோடு, இவர்கள் அனைவருமே போளூர் பொன்னுசாமி தெருவைச் சேர்ந்தவர்கள்.
1. முதல் குற்றவாளி - வழக்கறிஞர் ஜெயசங்கர் (தலைமறைவு).
2. பழனி என்பவரின் மகன் சசிக்குமார் (32).
3. கஜேந்திரன் மகன் சுபாஷ், (30).
4. விஸ்வநாதன் மகன் பிரகாஷ், (23).
5. செல்வம் மகன் மணி, (27).
6. சுதாகர் மகன் வசந்தகுமார், (22).
இந்த கொடூரச் சம்பவத்தால், அந்தக் கிராமத்தில் வசிக்கும் பட்டியல் சமூக மக்கள் பெரும் அச்சத்துக்குள்ளாகியிருக்கிறார்கள்.