ராமேஸ்வரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவிலிருந்து 8 கடல் மைல் தொலைவிலும் கச்சத்தீவு அமைந்திருக்கிறது. புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களிலிருந்து தங்களைக் காப்பாற்றவும், பெருமளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் வழிபாடு நடத்திய பின்னரே கடலுக்குள் செல்வது வழக்கம். இதற்காக ராமேஸ்வரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த அந்தோணிப்பிள்ளை பட்டங்கட்டி, தொண்டியைச் சேர்ந்த சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகியோரால் 1913-ம் ஆண்டு கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் கோயில் கட்டப்பட்டது.
ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவை மண்டபம் மரைக்காயர்கள் குத்தகைக்கு எடுத்து முத்துகள், மீன்பிடிக்காகப் பயன்படுத்திவந்தனர். 1974-ல் இந்திய பிரதமர் இந்திரா காந்தி, இலங்கை அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் புனித அந்தோணியார் கோயில் திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்க உரிமை வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இலங்கை அரசு சார்பில் 2016-ம் ஆண்டு கச்சத்தீவில் புதிய அந்தோணியார் கோயில் கட்டப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், சிங்கள மொழியில் திருப்பலியை நடத்தத் தொடங்கியதும் இந்திய பக்தர்களைக் கொதிப்படையவைத்தது. இலங்கை அரசு, கச்சத்தீவை இந்தியாவிடமிருந்து முழுவதுமாகப் பிரித்து தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவருவதை அறிந்து, கச்சத்தீவை இலங்கையிடமிருந்து இந்திய அரசு மீட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. தமிழகத்தின் பிரதான கட்சிகளாக விளங்கும் அ.தி.மு.க., தி.மு.க உள்ளிட்ட கட்சியினர் இது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்திவருகின்றனர்.
இந்த நிலையில், நடப்பாண்டு கச்சத்தீவு திருவிழா கடந்த 3, 4 ஆகிய தேதிகளில் விமர்சையாக நடைபெற்றது. இதில் தமிழகத்திலிருந்து 3,500 பக்தர்களும் இலங்கையிலிருந்து 4,500 பக்தர்களும் பங்கேற்றனர். திருவிழா முடிந்து ஒரு மாதம்கூட நிறைவடையாத நிலையில், கச்சத்தீவில் திடீரென ஒரு புத்தர் கோயில் முளைத்திருப்பது இரு நாடுகளைச் சேர்ந்தவர்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி சார்ள்ஸ் நிர்மலநாதன், ``கச்சத்தீவில் திடீரென புத்தர் கோயில் முளைத்தது எப்படி... ஆண்டாண்டு காலமாக கச்சத்தீவில் அந்தோணியார் கோயில் மட்டுமே இருந்துவரும் சூழலில், புதிதாக புத்தர் கோயிலைக் கட்டியவர்கள் யார்... அதற்கு அனுமதி கொடுத்தது யார்?" என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.
மேலும், ``கச்சத்தீவில் அந்தோணியார் ஆலயம் மட்டுமே இவ்வளவு காலமாக இருந்துவருகிறது. இந்த நிலையில் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை முன்னெடுக்கும் படையினர், கச்சத்தீவையும் விட்டுவைக்காது அங்கே பெரிய புத்தர் சிலையொன்றை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். இலங்கையில் 74 சதவிகிதம் உள்ள சிங்களர்கள் பௌத்த மதத்தைப் பின்பற்றிவருகிறார்கள். பெரும்பான்மையாகவுள்ள அவர்கள் சிறுபான்மை மக்களை அடக்கி ஆள நினைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஒருவேளை கச்சத்தீவிலிருந்து இந்தியாவை உளவு பார்ப்பதற்காக சீனாவுடன் கைகோத்து ஏதேனும் திட்டமிட்டிருந்தால் அதை உடனடியாக கைவிட வேண்டும்.
அந்த புத்தர் சிலையை அங்கிருந்து உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" எனக் கடுமையாக விவாதம் செய்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், கச்சத்தீவில் புத்தர் கோயில் அமைக்கப்பட்டிருப்பதற்கு தமிழக அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.