அலசல்
Published:Updated:

ஹனி ட்ராப்... மொசாட் ரூட்டில் ரா... விறுவிறு சேஸிங்கில் மெகுல் சோக்சி!

மெகுல் சோக்‌சி
பிரீமியம் ஸ்டோரி
News
மெகுல் சோக்‌சி

- தாக்‌ஷாயிணி

ஒரு நாட்டிலுள்ள குற்றவாளியை அந்த நாட்டின் எல்லையிலிருந்து கடத்துவது, அழகிய பெண் உளவாளியை நெருக்கமாகப் பழகவைத்து ஆளைத் தூக்குவது, வேறொரு நாட்டின் எல்லைக்குள் சிக்கவைத்து கைதுசெய்வது... இப்படியான விறுவிறு காட்சிகளையெல்லாம் ஹாலிவுட் படங்களில்தான் பார்த்து வியந்திருப்போம். அதற்குச் சற்றும் குறைந்ததல்ல, இந்தியாவிலிருந்து கிரேட் எஸ்கேப் ஆன வைர வியாபாரி மெகுல் சோக்‌சி வழக்கு!
பார்பரா ஜபாரியா
பார்பரா ஜபாரியா

யார் இந்த மெகுல் சோக்சி?

புகழ்பெற்ற வைர வியாபாரியான சினுபாய் சோக்சியின் மகனான மெகுல் சோக்சி, பிறந்து வளர்ந்ததெல்லாம் மும்பையில்தான். கல்லூரிப் படிப்பை குஜராத்தில் முடித்த மெகுல், 1975-ல் தன் தந்தையின் வைர வியாபாரத் தொழிலை ஏற்று நடத்த ஆரம்பித்தார். ‘கீதாஞ்சலி குரூப்’ என்கிற பெயரில், இந்தியா முழுவதும் 4,000 நகைக் கடைகளுடன் தொழிலை விரிவுபடுத்திய மெகுல் சோக்சிக்கு ஏராளமான அரசியல் புள்ளிகள், உயரதிகாரிகளின் நட்பு கிடைத்தது. தன் மருமகன் நீரவ் மோடியுடன் சேர்ந்து இந்தத் தொடர்புகளை லாபகரமாகப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டார் மெகுல் சோக்சி.

தனிநபரின் சமூக மதிப்பைப் பொறுத்து, அவர்களுக்குக் கடன் உறுதிக் கடிதங்களை வங்கிகள் வழங்குவது வழக்கம். இப்படி ஒரு வங்கியில் வழங்கப்படும் கடன் உறுதிக் கடிதத்தை வைத்து, வேறு வங்கிகளில் கடன்களை அவர்கள் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு ‘ஸ்விஃப்ட் முறை’ என்று பெயர். இப்படி, பஞ்சாப் நேஷனல் வங்கியிலிருந்து கடன் உறுதிக் கடிதங்களைப் பெற்ற நீரவ் மோடி - மெகுல் சோக்சி கூட்டணி ஹாங்காங், துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளைகளிலும், ஹாங்காங்கில் இருந்த யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கிளையிலிருந்தும் பெரும் தொகைகளைக் கடனாக பெற்றது.

ஹனி ட்ராப்... மொசாட் ரூட்டில் ரா... விறுவிறு சேஸிங்கில் மெகுல் சோக்சி!

ஆனால், இந்தக் கடன் உறுதிப் பத்திரங்கள் போலியானவை என்று 2018, ஜனவரி மாதம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் பிரச்னை வெடித்தது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை பிராடி ஹவுஸ் கிளையிலிருந்து, இந்த போலியான பத்திரங்கள் அளிக்கப்பட்டதாகவும், இதன் அடிப்படையில் நீரவ் மோடியும் மெகுல் சோக்சியும் இணைந்து 13,500 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் வெளிவருவதற்குச் சில நாள்களுக்கு முன்னதாகவே, நீரவ் மோடி லண்டனுக்கும், மெகுல் சோக்சி ஆன்டிகுவா நாட்டுக்கும் தப்பிச் சென்றுவிட்டனர். தொடர்ந்து நடந்த விசாரணையில், 2015 முதல் 2017 வரை பஞ்சாப் நேஷனல் வங்கியின் மேலாண்மை இயக்குநராக இருந்து, அதன் பிறகு அலகாபாத் வங்கியின் மேலாண்மை இயக்குநராக பணியிலிருந்த உஷா ஆனந்த சுப்பிரமணியனை பணிநீக்கம் செய்தது மத்திய அரசு. 2019, மார்ச் மாதம் நீரவ் மோடி லண்டன் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரது ஸ்விட்சர்லாந்து, சிங்கப்பூர் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன. தற்போது அவர் தென்மேற்கு லண்டனின் ‘வேண்ட்ஸ்வொர்த்’ சிறையில் இருக்கிறார்.

ஆனால், இன்டர்போலின் ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ இருந்தும், மெகுல் சோக்சியை மட்டும் இந்திய அரசால் நெருங்க முடியவில்லை. ஆன்டிகுவாவின் அரசியல் புள்ளிகளுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொண்டதால் அந்த நாட்டின் காவல்துறை மெகுல் சோக்சியை நெருங்கவில்லை என்று கூறப்படுகிறது. அந்தத் தொடர்புகள் மூலமாக, ஆன்டிகுவாவின் குடியுரிமையையும் பெற்றுள்ளார் மெகுல் சோக்சி.

ஹனி ட்ராப்... மொசாட் ரூட்டில் ரா... விறுவிறு சேஸிங்கில் மெகுல் சோக்சி!

சிக்கவைத்த ஹனி ட்ராப்!

இந்தச் சூழலில்தான், கடந்த மே 23-ம் தேதி ஆன்டிகுவா நாட்டிலிருந்து மெகுல் சோக்சி காணாமல் போனார். அவர் விவகாரத்தை உற்று நோக்கிவந்த பல்வேறு நாடுகளின் விசாரணை அமைப்புகளும் இதனால் பரபரப்படைந்தன. மூன்று நாள்கள் கழித்து விஷயம் வெளியே வந்தது... ‘க்யூபாவுக்குத் தப்பிச் செல்லும் வழியில் அத்துமீறி டொமினிக்கன் நாட்டுக்குள் நுழைந்ததால், மெகுல் சோக்சியைக் கைது செய்திருக்கிறோம்’ என்று பக்கத்து தீவு நாடான டொமினிக்கன் குடியரசு அறிவித்தது. இந்த ட்விஸ்ட்டை யாரும் எதிர்பார்க்கவில்லை. டொமினிக்கன் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மெகுல் சோக்சி, தான் கடத்தப்பட்டதாக அளித்த வாக்குமூலம்தான், இந்த விவகாரத்தின் மர்ம முடிச்சுகளை அவிழ்த்திருக்கிறது. இது தொடர்பாக, ஆன்டிகுவா நாட்டு போலீஸிலும் மெகுல் சோக்சியின் குடும்பத்தினர் புகார் அளித்திருக்கிறார்கள்.

மெகுல் சோக்சி அளித்திருக்கும் வாக்குமூலத்தில், “எனக்கு பார்பரா ஜபாரியா என்கிற பெண்ணுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. கடந்த ஒரு வருடமாக நாங்கள் அவ்வப்போது சந்தித்துப் பேசிவந்தோம். மே 23-ம் தேதி இரவு என்னை விருந்துக்கு அழைத்தார் பார்பரா. அதை நம்பி அன்று மாலை 5 மணியளவில் ஜாலி துறைமுகத்தின் அருகேயிருக்கும் அவரது வீட்டுக்குச் சென்றேன். வீட்டுக்குள் திடகாத்திரமாக நின்றிருந்த ஏழெட்டு பேர் என்னைத் தாக்கி கைகளைக் கட்டினார்கள். பார்பராவின் வீட்டுக்குப் பின்புறம் கடற்கரையையொட்டி நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய படகில் என்னை ஏற்றினார்கள். இவ்வளவையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் பார்பரா. சிறிது தூரம் சென்ற பிறகு, பெரிய படகு ஒன்றில் என்னை ஏற்றினார்கள். அந்தப் படகிலிருந்த ஐந்து பேரில் இருவர் இந்தியர்கள். பெண்ணை வைத்து வலைவிரிக்கும் ‘ஹனி ட்ராப்’ மூலமாக என்னை இந்திய ஏஜென்ட்கள் கடத்தியிருப்பதை அப்போதுதான் புரிந்துகொண்டேன்.

ஹனி ட்ராப்... மொசாட் ரூட்டில் ரா... விறுவிறு சேஸிங்கில் மெகுல் சோக்சி!

“இந்தியா அனுப்பாதீர்கள்!”

படகில்வைத்தே என்னைத் தாக்கியவர்கள், ‘டொமினிக்கன் நாட்டுக்குச் செல்கிறோம். உன்னை அங்குவைத்து இந்திய அரசியல்வாதி ஒருவர் விசாரிப்பார்’ என்று சொன்னார்கள். எனது நிதித் தொடர்புகள், சொத்து மதிப்புகள் குறித்தும் அவர்கள் கேட்டார்கள். டொமினிக்கன் நாட்டில் நாங்கள் கால் வைத்தவுடன், அவர்களுடைய திட்டத்தில் ஏதோ தவறு ஏற்பட்டுவிட்டது என்று நினைக்கிறேன். டொமினிக்கன் போலீஸில் என்னைச் சிக்கவைத்துவிட்டு, அவர்கள் தப்பிவிட்டனர். நான் க்யூபாவுக்கு தப்பிச் செல்ல முயலவில்லை. டொமினிக்கன் அரசு என்னை இந்தியாவுக்கு நாடு கடத்த முயல்கிறது. என்னை இந்தியாவுக்கு அனுப்பாதீர்கள்” என்று சொல்லியிருக்கிறார்.

மெகுல் சோக்சியின் குடும்பத்தினரும், ‘இந்திய உளவுத்துறை ஏஜென்ட்கள் கேட்டுக்கொண்டதால், பார்பரா ஜபாரியா மெகுலைக் கடத்துவதற்குத் துணை போயிருக்கிறார்’ என்று சீறியிருக்கிறார்கள். ஆனால் பார்பராவோ, “நான் யாருக்கும் துணைபோகவில்லை. ரியல் எஸ்டேட் தொழிலில் நான் ஈடுபட்டிருப்பதால், அவ்வப்போது நானும் மெகுலும் சந்தித்துக்கொள்வோம். கடந்த மே 23-ம் தேதி காலை வெளியே பிரேக் ஃபாஸ்ட் முடித்துவிட்டு, மதியம் 12 மணியளவில் என்னை என் வீட்டில் இறக்கிவிடுவதற்காக மெகுல் வந்தார். அப்போது, ‘இனி நாம் சந்தித்தால் க்யூபாவில்தான் சந்திப்போம்’ என்றார். அதன் பிறகு நான் அவரைப் பார்க்கவில்லை’ என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

நீரவ் மோடி
நீரவ் மோடி

மொசாட் ரூட்டில் ‘ரா’?

ஆன்டிகுவாவில் மெகுல் சோக்சி செல்வாக்குடன் இருந்ததால், அவரை டொமினிக்கன் நாட்டுக்குக் கடத்தி அங்கிருந்து இந்தியா கொண்டுவர இந்திய உளவுத்துறை நடத்திய நாடகம்தான் இது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இந்தக் கருத்தை இதுவரை இந்திய அரசு மறுக்கவும் இல்லை; ஏற்கவும் இல்லை. கடந்த காலங்களில் ஹமாஸ், பி.எல்.ஏ இயக்கங்களின் தலைவர்களை இதே பாணியில்தான் நாடுவிட்டு நாடு கடத்தி பிறகு தூக்கியது இஸ்ரேலின் மொசாட். இப்போது, அதே ரூட்டில் இந்தியாவின் ‘ரா’ பயணிக்கிறது என்கிற தகவல் பரவுவதால், வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கும் இந்திய ‘ஊழல் பெருச்சாளிகள்’ பலரும் ஆடிப் போயிருக்கிறார்கள்.

மெகுலை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்குத் தடைவிதித்திருக்கும் டொமினிக்கன் உயர் நீதிமன்றம், ஜூன் 11-ம் தேதி இந்த வழக்கை விசாரிக்கிறது. மெகுலை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்காகவே, நீண்ட தூரம் பயணம் செய்யும் விமானத்தை கத்தாரிலிருந்து வாடகைக்கு அமர்த்தியிருக்கிறது இந்திய அரசு. இந்திய அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே டொமினிக்கன் உயர் நீதிமன்றத்தில் ஆஜராவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை, மெகுல் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டால், அவர் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் இங்கு பல பண முதலைகள் சிக்கும் என்பதில் ஐயமில்லை!