கர்நாடக மாநிலம், பெங்களூரில், கக்கலிபுரா பகுதியில் கான்கோர்டே நேபா வேலி அருகே வசித்துவந்தவர் காயத்ரி குமார் (47), சாஃப்ட்வேர் இன்ஜினீயர். இவரின் மகள் சமதா (15), பசவனபுரா அருகே தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்தார். நேற்று காலை, காயத்ரி தன்னுடைய மகள் சமதாவை, காரில் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். அப்போது, கக்கலிபுரா–பன்னர்கட்டா ரோட்டில் ஒரு வளைவில், இவருக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த சிமென்ட் மிக்சர் ட்ரக், கட்டுப்பாட்டை இழந்து திடீரென இவர்களது கார்மீது சாய்ந்தது. இந்த விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கிய நிலையில், படுகாயமடைந்த காயத்ரி, சமதா இருவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

அதிவேகமாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி தப்பியோடிய ட்ரக் டிரைவரை, போலீஸார் தேடிவருகின்றனர். விபத்தில் தாய், மகள் இறந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
விபத்து குறித்து போலீஸாரிடம் பேசினோம். ``அதிவேகமாகச் சென்ற ட்ரக் வளைவில் பிரேக் பிடித்ததால், கட்டுப்பாட்டை இழந்து, காயத்ரி ஓட்டிவந்த காரில் விழுந்ததில், இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இந்த காரில், Bluelink என்ற வசதியுள்ளதால், ஏதேனும் விபத்து, அசம்பாவிதம் ஏற்பட்டால் அவசர எண்ணுக்குத் தகவல் தெரிவிக்கப்படும். இந்த விபத்து ஏற்பட்டதும், காயத்ரியின் கணவர் சுனில் குமாருக்குத் தகவல் சென்றிருக்கிறது. அவர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு புகாரளித்திருக்கிறார். டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.