கிருஷ்ணகிரியில் மூன்று வாரங்களுக்கு முன்பு, சொந்த சாதியில் திருமணம்செய்த இளைஞரை, சொத்து இல்லை என்பதற்காக மாமனாரே கழுத்தறுத்து கொலைசெய்த சம்பவத்தின் தாக்கம் இன்னமும் குறையவில்லை. அதற்குள், கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே, பட்டியலினப் பெண்ணை திருமணம்செய்ததற்காக, ஈவு இரக்கமின்றி தன்னுடைய மகனையும், தாயையும் அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு, மருமகளைக் கொல்ல முயன்ற தந்தையின் வெறிச்செயல், பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மாற்றுச் சாதி திருமணம்!
தந்தையின் வெறியாட்டம் குறித்து, ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் பார்த்திபன் நம்மிடம், ‘‘கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா கதவணி ஊராட்சிக்குட்பட்ட அருணபதி கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி (50). தையல் தொழிலாளியான இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். மகன் பெயர் சுபாஷ் (25). தண்டபாணி குடும்பத்துடன், 6 ஆண்டுகளாக திருப்பூரில் வசித்துவருகிறார். அவருடைய, தாய் கண்ணம்மா (62), அருணபதி கிராமத்திலுள்ள வீட்டில் தங்கியிருக்கிறார். தண்டபாணி பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்.
எம்.காம் பட்டதாரியான சுபாஷ் (25), திருப்பூரில் பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்தபோது, அவரது வீட்டுக்கு அருகில் வாடகை வீட்டில் தங்கியிருந்த, அரியலூரைச் சேர்ந்த பட்டியலினப் பெண் ஒருவரைக் காதலித்து வந்திருக்கிறார். மாற்றுச் சாதி என்பதால், இவர்களது காதலுக்கு தண்டபாணி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், பெண் வீட்டார் சம்மதத்துடன், இருவரும் மார்ச் 27-ம் தேதி, திருமணம் செய்துகொண்டனர். மாற்றுச் சாதியில் மகன் திருமணம் செய்ததால், ஆத்திரமடைந்த தண்டபாணி மகன், மருமகளைக் கொலைசெய்ய திட்டமிட்டிருக்கிறார்.
‘கறி சோறு ஆக்கிப்போடலாம்’
அதையடுத்து, தாய் கண்ணமாவிடம் போனில் பேசிய தண்டபாணி, ‘பையனுக்கு கறி சோறு ஆக்கிப்போடலாம், வீட்டுக்கு வரச்சொல்லு’ எனக் கூறியிருக்கிறார். அதை கண்ணம்மா தன்னுடைய பேரனிடம் கூற, அப்பா தனது திருமணத்தை ஏற்றுக்கொண்டார் என்ற எண்ணத்தில், சுபாஷ், தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு, பாட்டி வீட்டுக்கு கடந்த 14-ம் தேதி வந்திருக்கிறார்.

கறி விருந்து முடிந்து அன்று இரவு, மகன் சுபாஷ், மருமகள், தாய் கண்ணம்மா வீட்டுக்குள் உறங்க, தண்டபாணி அந்த வீட்டுக்கு வெளியில் படுத்திருந்தார். 15-ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு, பனை மரத்தில் நுங்கு சீவப் பயன்படுத்தும் அதீத பதம் உள்ள அரிவாளை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்த தண்டபாணி, முதலில் தூங்கிக்கொண்டிருந்த தனது மகனை, அரிவாளால் கழுத்தில் பலமாக இருமுறை வெட்டியிருக்கிறார். சத்தம் கேட்டு எழுந்த தன்னுடைய தாய் கண்ணம்மாவையும் கழுத்தில் சரமாரியாக வெட்டியிருக்கிறார். மரண ஓலம் கேட்டதும், தூக்கத்திலிருந்து எழுந்த சுபாஷின் மனைவி, தண்டபாணியின் செயலைப் பார்த்து அதிர்ந்து, அங்கிருந்த தப்ப முயன்று வீட்டைவிட்டு வெளியே ஓடியிருக்கிறார்.

அப்போது, அவரையும் துரத்திச்சென்று கழுத்து, முகத்தில் வெட்டியதும், அந்தப் பெண் நிலை தடுமாறி விழுந்திருக்கிறார். மூவரும் இறந்துவிட்டனர் எனக் கருதி, தண்டபாணி அங்கிருந்து, நடந்தே ஊத்தங்கரை – திருப்பத்தூர் ரோட்டுக்கு வந்திருக்கிறார்.
இந்தக் கோர கொலைவெறித் தாக்குதலில், சுபாஷ், கண்ணம்மா சம்பவ இடத்திலேயே இறந்துவிட்ட நிலையில், உயிர் பிழைத்திருந்த இளம்பெண் தன்னுடைய கணவரின் சட்டையை எடுத்து, கழுத்தைச் சுற்றி கட்டிக்கொண்டு உதவி கேட்டு, அவர்களின் வீட்டுக்கு அருகில், 400 மீட்டர் தொலைவிலுள்ள உலர் களத்துக்கு நடந்து சென்று அங்கு மயங்கி விழுந்திருக்கிறார். அந்த வழியாக வந்த மக்கள் அவரை மீட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்குத் தகவல் கொடுத்திருக்கின்றனர்.

பாவ மன்னிப்புக் கேட்க!
அங்குள்ள மெயின் ரோட்டுக்கு வந்த தண்டபாணி, பஸ் பிடித்து, மக்கள் திதி கொடுக்கும் அனுமன் தீர்த்தம் கேயிலுக்குச் சென்று, தலைமுழுகிவிட்டு, மீண்டும் அங்கிருந்து தீர்த்தமலை கோயிலுக்குச் சென்றுவிட்டு அங்கும் தலைமுழுகியிருக்கிறார். பிறகு, மனவிரக்தியில் அரிவாளால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார் தண்டபாணி. காயங்களுடன் ஊத்தங்கரை பஸ் ஸ்டாண்டு அருகே இருந்தபோது, அவரைக் கைதுசெய்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறோம்.
கழுத்தில் படுகாயம், மூன்று விரல்கள் துண்டான நிலையில் சேலம் மருத்துவமனையில் இளம்பெண்ணும், காயங்களுடன் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் தண்டபாணியும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை முடிந்ததும், இருவரிடமும் முழு விசாரணை நடத்தப்படும். மாற்றுச் சாதி என்ற ஒற்றை காரணத்துக்காக, மகன், தாயைக் கொன்றிருக்கிறார் தண்டபாணி’’ என்றார், விரிவாக.
‘கோபத்துல கொன்னுட்டேன்’
மருத்துவமனையிலுள்ள தண்டபாணியிடம் போலீஸார் பேசியபோது, ‘‘அந்தப் பொண்ணு நம்ம குடும்பத்துக்கு ஆகாதுனு, நான் ரொம்ப நாளா சொல்லியும் என் பையன் கேட்கல. ஊருக்குள்ள எல்லாரும் ஒரு மாதிரி பேசுனாங்க, அதான் கோபத்துல கொன்னுட்டேன்" என வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
‘அமைதியான குடும்பமுங்க…’
ஊரிலுள்ள மக்களிடம் நாம் பேசியபோது, ‘‘ஏரிக்கரையோரம் இருக்கும் கண்ணம்மா வீட்டைச் சுற்றி, 400 மீட்டருக்கு வேறு வீடுகள் இல்லாததால், கொலை நடந்தது யாருக்கும் தெரியவில்லை. தண்டபாணி குடும்பம் ஊருக்குள் அமைதியாக வாழும் குடும்பம். அமைதியாகவே இருக்கும் தண்டபாணி, மாற்று சாதியில் திருமணம் செய்ததால் தன்னுடைய மகனையே கொலைசெய்தது அதிர்ச்சியாகவே இருக்கிறது.

ஆனால், சுபாஷின் தங்கை சமீபத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிலுள்ள ஒருவரை காதல் திருமணம் செய்திருக்கிறார். அதை ஏற்றுக்கொண்ட தண்டபாணி, மகன் பட்டியலினப் பெண்ணை திருமணம் செய்ததை ஏற்றுக்கொள்ளாமல் கொலைசெய்தது ஆச்சர்யமாக இருக்கிறது’’ என்றனர்.
தமிழகத்தில் காதல் விவகாரம் தொடர்பாக, ஒவ்வோர் ஆண்டும், 120 – 150 ஆணவக்கொலைகள் நடப்பதாக, புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சட்டங்களும், தண்டனைகளும் கடுமையானால் ஒழிய, சமூகத்தின் சாபக்கேடான ஆணவக்கொலைகளைக் களைய முடியாது என்பதே நிதர்சனம்!