Published:Updated:

"இப்பவும் கணவர் சுபாஷ் எங்கன்னு என் பொண்ணு கேட்டுக்கிட்டே இருக்கா!"- அனுசுயாவின் தாய் பேட்டி

அனுசுயாவின் தாய் அனிதா

"திடீர்னு அதிகாலையில கத்தியோட ஓடிவந்த மாப்ளையோட அப்பா தண்டபாணி, மாப்ளையைக் கொடூரமா வெட்டியிருக்காரு. தடுக்க வந்த மாப்ளையோட பாட்டியையும் என் மகளையும் கண்ணு மண்ணு தெரியாம வெட்டியிருக்காரு."- ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சுபாஷின் மனைவி அனுசுயாவின் தாய் பேட்டி

Published:Updated:

"இப்பவும் கணவர் சுபாஷ் எங்கன்னு என் பொண்ணு கேட்டுக்கிட்டே இருக்கா!"- அனுசுயாவின் தாய் பேட்டி

"திடீர்னு அதிகாலையில கத்தியோட ஓடிவந்த மாப்ளையோட அப்பா தண்டபாணி, மாப்ளையைக் கொடூரமா வெட்டியிருக்காரு. தடுக்க வந்த மாப்ளையோட பாட்டியையும் என் மகளையும் கண்ணு மண்ணு தெரியாம வெட்டியிருக்காரு."- ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சுபாஷின் மனைவி அனுசுயாவின் தாய் பேட்டி

அனுசுயாவின் தாய் அனிதா
கைகால்களைக்கூட அசைக்கமுடியாமல் சேலம் அரசு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார், சாதி ஆணவக் கொடூரத்தால் கொலைமுயற்சி தாக்குதலுக்கு உள்ளான புதுமணப்பெண் அனுசுயா. உயிருக்கு உயிராகக் காதலித்துத் திருமணம் செய்த அவரின் கணவர் சுபாஷ் உயிரைக் குடித்திருக்கிறது சாதிய ஆணவம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள அருணபதி கிராமத்தைச் சேர்ந்த சுபாஷுக்கும் அரியலூர் மாவட்டம் கொல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அனுசுயாவுக்கும் காதல் மலர்ந்தது. அனுசுயா பட்டியலினத்தவர் என்பதால் எதிர்ப்பு தெரிவித்தார் சுபாஷின் தந்தை தண்டபாணி. ஆனாலும், எதிர்ப்பை மீறி கடந்த மார்ச் 27-ம் தேதி அனுசுயாவை சாதிமறுப்புத் திருமணம் செய்து கரம்பிடித்தார் சுபாஷ். திருப்பத்தூரிலுள்ள தனியார் வங்கியில் பணியாற்றிக்கொண்டிருந்ததால், அங்கு மனைவி அனுசுயாவுடன் வீடு எடுத்துத் தங்கியுள்ளார்.

சுபாஷ் - அனுசுயா திருமணத்தின்போது
சுபாஷ் - அனுசுயா திருமணத்தின்போது

இந்த நிலையில்தான், மணமக்களை வீட்டிற்கு அழைத்த தண்டபாணி, தூங்கிக்கொண்டிருக்கும்போது அதிகாலையில் மகனையும், அவரின் பாட்டியும் தன் தாயுமான கண்ணமாளையும் படுகொலை செய்துள்ளார். தடுக்கவந்த மருமகள் அனுசுயாவை சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டுத் தப்பியோடி உள்ளார். இந்தச் சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது. சுபாஷும் அவரின் பாட்டியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் அனுசுயாவின் தாய் அனிதா கதறியபடி நம்மிடம் பேசினார்.

“என் மருமக புள்ள தங்கமானவரு. என் பொண்ணைதான் கல்யாணம் பண்ணிப்பேன், இல்லைன்னா செத்துப்போய்டுவேன்னு ஒத்தக்காலில் நின்னாரு. நாங்களும் ஆரம்பத்துல கல்யாணத்துக்கு ஒத்துக்கவே இல்ல. என் பொண்ணும் செத்துப்போய்டுவேன்னு சொன்னா. பிள்ளைங்க உசுரவிட வேறென்ன முக்கியம்? சந்தோசமா இருந்துட்டுப்போகட்டுமேன்னு சொந்தக்காரங்க முன்னிலையில கல்யாணம் பண்ணி வெச்சோம். இப்படியாகும்னு தெரிஞ்சிருந்தா பொண்ணக் கொடுத்திருக்கவே மாட்டேன். அப்பவே, உங்க அப்பா வந்தாதான் பொண்ணைக் கொடுப்போம்னு சொன்னோம்.

'அவருக்கு எத்தனையோ தடவை எடுத்து சொல்லி புரியவைக்க முயற்சி பண்ணிட்டோம். அவரு புரிஞ்சிக்கிற மாதிரி இல்ல. சாதி பார்க்கிறாரு. கல்யாணம் பண்ணிட்டா எல்லாம் சரியாகிடும்'ன்னு மாப்ள சொன்னாரு. மாப்ளையோட அம்மா, தங்கச்சிங்க எல்லோரும் ரொம்ப சப்போர்ட்டிவ்வா இருந்தாங்க. அவங்களும் ஒத்துக்கிட்டதாலதான் கல்யாணம் பண்ணிவெச்சோம். ஆனா, பெத்த புள்ளையையே வெட்டிக் கொல்லுற அளவுக்கு இவ்ளோ கொடூர சாதிவெறியனா இருப்பார்னு நினைச்சுக்கூட பார்க்கல” என்று கதறி அழுகிறவரை ஆசுவாசப்படுத்தவே நெடுநேரம் ஆனது.

சுபாஷுடன் அனுசுயாவின் தம்பி புஷ்பராஜ்
சுபாஷுடன் அனுசுயாவின் தம்பி புஷ்பராஜ்

“எனக்கு ரெண்டு பொண்ணு ஒரு பையன். நானும் படிக்கல, என் கணவரும் படிக்கல. அதனால, பிள்ளைங்கள நல்லா படிக்கவெச்சோம். என் மூத்த பொண்ணு 18 வயசுல உடம்பு சரியில்லாம இறந்துபோச்சு. இந்த ஒரு பொம்பளப் புள்ளையையாவது நல்லபடியா கரைசேர்க்கணும்னு எம்.எஸ்ஸி கெமிஸ்ட்ரியும் பி.எட் டீச்சர் ட்ரெயினிங்கும் படிக்க வெச்சோம். நல்லா படிக்கிற புள்ள. அது படிச்சதுக்கு ஏற்ற வேலை கிடைக்கிறவரைக்கும் வீட்டுல இருந்திருக்கலாம்.

ஆனா, அவளோட அப்பா கோயம்புத்தூர்ல பனியன் கம்பெனியில வேலை பார்த்துக்கிட்டிருந்தாரு. வெயிட்டு தூக்கி தூக்கி உடம்பு சரியில்லாம போயி வீட்டுக்கு வந்துட்டாரு. அதனால, குடும்பச் சூழ்நிலைய புரிஞ்சுக்கிட்டு திருப்பூர்ல இருக்கிற பனியன் கம்பெனியில குவாலிட்டி செக்கிங் வேலையில 18,000 ரூபாய் சம்பளம் வாங்கிட்டிருந்தா அனுசுயா. இன்ஜினீயரிங் படிச்ச என் பையனும் அக்காகூட வீடு எடுத்துப் பாதுகாப்புக்காகத் தங்கியிருந்தான். அந்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டுலதான் சுபாஷின் தங்கச்சி வீடு. அந்த வீட்டுலதான் சுபாஷோட அம்மா, அப்பா தங்கி பனியன் கம்பெனியில டெய்லரிங் வேலை பார்த்துக்கிட்டிருந்தாங்க. எம்.பி.ஏ படிச்சுட்டுத் திருப்பத்தூரிலுள்ள பேங்குல வேலை பார்த்துக்கிட்டிருந்த சுபாஷ், அடிக்கடி லீவுல வரும்போது அனுசுயாகூட நட்பாகியிருக்காரு. ஒரு வருசமா லவ் பண்ணியிருக்காங்க. இந்த விஷயம் சுபாஷோட குடும்பத்துக்குத் தெரிஞ்சிருக்கு. நாங்க வேற சாதி, அதனாலதான் எங்கப்பா ஒத்துக்கலன்னு அப்பவே மாப்ள சொன்னாரு. என்ன விசேஷம்னாலும் கோயிலுக்குப் போகணும்னாக்கூட என் பொண்ணைக் கூட்டிக்கிட்டுதான் போவாங்க. ஊர்ல இருந்தாக்கூட வரச்சொல்லிக் கூட்டிக்கிட்டுப் போற அளவுக்கு மாப்ளையோட அம்மா, தங்கச்சிங்க பாசமா இருந்தாங்க. அதனால, கல்யாணம் ஆனதும் சரியாகிடும், அவங்க பார்த்துப்பாங்கன்னு நினைச்சோம்.

கல்யாணம் முடிஞ்சப்போகூட, 'அப்பாதான் கோபமா இருக்காரே, திருப்பத்தூர் போகவேணாம். இங்கேயே ஏதாவது வேலை பார்த்துத் தர்றோம்'னு சொன்னோம். ஆனா, பேங்க் வேல இப்போதான் கிடைச்சிருக்கு. அதை விடமுடியாதுன்னு போனார். திருப்பத்தூர்ல வாடகை வீடு எடுத்து வாழ்ந்துக்கிட்டிருந்தாங்க.

புத்தாண்டு அன்னைக்கு மாப்ளையோட பாட்டியே நேர்ல வந்து கூட்டிக்கிட்டுப் போயிருக்காங்க. எங்ககிட்டகூட ஒருவார்த்த சொல்லாம ரெண்டு பேரும் போயிருக்காங்க. சொல்லியிருந்தாக்கூட எச்சரிச்சிருப்போம். அந்த வீடே பத்துக்குப் பத்து அறைதான். ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்டிருக்கும். அங்கு, இன்னொரு குடும்பம் இருக்கவே முடியாது. அப்படியிருந்தும்கூட அவரு பாசமா கூப்பிட்டாரேன்னு போயி அங்க தூங்கியிருக்காங்க.

திடீர்னு அதிகாலையில கத்தியோட ஓடிவந்த மாப்ளையோட அப்பா தண்டபாணி, மாப்ளையைக் கொடூரமா வெட்டியிருக்காரு. தடுக்க வந்த மாப்ளையோட பாட்டியையும் என் மகளையும் கண்ணு மண்ணு தெரியாம வெட்டியிருக்காரு. என் புள்ளையோட அழகு முகத்திலேயே வெட்டு விழுந்திருக்கு. புள்ளையோட ரெண்டு மணிகட்டுலேயும் வெட்டினதால உயிரைக்காப்பாற்ற கையையும் வெட்டி எடுக்கவேண்டியிருக்கலாம்ன்னு எல்லாம் டாக்டர்கள் சொல்றாங்க. இப்பவும் கணவர் சுபாஷ் எங்கன்னு கேட்டுக்கிட்டே இருக்கா. எங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியல. மருமகனையும் இழந்துட்டு என் புள்ளையும் இந்த நிலைமையில இருக்கிறதைப் பார்த்துக்கிட்டு இருக்கவே முடியல” என்று கலங்கி அழுபவர், “என் மருமகனோட படுகொலைக்கும் மகளோட இந்த நிலைமைக்கும் காரணமானவரை சட்ட ரீதியா தண்டிக்கணும். எங்களுக்கு உரிய நீதி கிடைச்சாலே போதும்” என்று தமிழ்நாட்டு முதல்வருக்குக் கோரிக்கை வைக்கிறார்.

கெளசல்யா
கெளசல்யா
ஆணவப்படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றத் தொடர்ந்து போராடிவரும் சமூகச் செயற்பாட்டாளர் கெளசல்யாவிடம் பேசினோம்.

“கிருஷ்ணகிரியிலேயே ஒருமாத இடைவெளிக்குள் நடக்கும் இன்னொரு படுகொலை இது. சாதி ஆணவத்தால் பெற்ற தாயையும் மகனையும் கொன்றுள்ளார். மருமகள் உயிருக்குப் போராடிவருகிறார். இந்தப் படுகொலை குறித்து யாரும் பேசவில்லை; விவாதிக்கவில்லை. எதிர்ப்புகூட தெரிவிக்கவில்லை என்பதே மனதைக் கனக்க வைக்கிறது.

நான் பாதிக்கப்பட்டபோது, தமிழகத்தில் அத்தனை போராட்டங்கள் நடந்தன. எல்லோரும் குரல் கொடுத்தார்கள். ஆனால், இப்போது தி.மு.க ஆட்சியில் இருக்கிறது என்பதற்காகவே, முற்போக்கு பேசும் மற்ற இயக்கத் தோழர்கள்கூட அமைதி காக்கிறார்கள். ஆட்சியில் இல்லாதபோது, எங்கள் வழக்கு பற்றியும் வழக்கின் மீதான தீர்ப்பு பற்றியும் அறிக்கை கொடுத்த முதல்வர் மு.க. ஸ்டாலின், தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் ஏன் அமைதி காக்கவேண்டும்? 'இது சாதி ஒழிப்புக்கான அரசு; சமூக நீதி அரசு' என்று சொல்லிக்கொண்டே அமைதி காப்பதன் மூலம் எதன் பக்கம் நிற்கிறார்? இப்படி, அமைதி காப்பதுகூட சாதிக்குத் துணைபோகும் செயல்தான். ஓட்டு அரசியலுக்காக எத்தனை பேரை வேண்டுமென்றாலும் பலி கொடுக்கலாமா? வெளியில் தெரிந்தும் தெரியாமலும் அத்தனை ஆணவப்படுகொலைகள் நடந்து வருகின்றன.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

ஆணவப்படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற சமூகச் செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர் சட்ட வரைவையே முதல்வரிடம் கொடுத்துவிட்டு வந்துள்ளார். அதன் தற்போதைய நிலை என்னவென்று தெரியவில்லை. ஒருவர் சாதிப்பெயரைச் சொல்லித் திட்டினால் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்படி புகார் கொடுக்கமுடியும். ஆனால், ஆணவப்படுகொலை என்று வழக்கு தொடுக்கிறோமா? தனி விசாரணை நடத்துகிறோமா? தனி நீதிமன்றம் வைத்துள்ளோமா? தனிக்குற்றமாகச் சொல்ல எதுவுமே இல்லையே? ஆணவப்படுகொலைகள் என்றாலும் வெறும் கொலையாகத்தான் வழக்கு பதியப்படுகிறது.

அதுவே, ஆணவப்படுகொலைகளுக்கு தனிச்சட்டம் வந்தால், 'சாதி ஆணவத்தால் கொலை செய்தால் நமக்கு இந்தத் தண்டனை கிடைக்கும். வீரியமுள்ள சட்டம் இது. அரசின் அழுத்தம் அதிகமாக இருக்கும் என்பதால், இந்தத் தவற்றை நாம் செய்யவேகூடாது' என்ற மனத்தடையை சாதியவாதிகளுக்கு ஏற்படுத்தும். இச்சட்டத்தால் ஆணவப்படுகொலைகளை முழுமையாக ஒழிக்க முடியாது என்றாலும் கொலை செய்யப்போகிறவர்களை கொஞ்சமாவது யோசிக்க வைக்கும்.

சாதி
சாதி

கடந்த 2018-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியின்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆணவப்படுகொலைகளைத் தடுக்கவும் சாதிமறுப்புத் திருமணம் செய்பவர்களைக் காக்கவும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தனி செல் அமைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு சில வரையறைகளையும் கொடுத்திருந்தது. ஆனால், இப்போதுவரை தனி செல் அமைக்கப்படவில்லை. சாதியைக் காப்பாற்றுவதில் அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் ஒன்றுதான். அப்படி, தி.மு.க அரசு சாதி காக்கும் அரசாக இல்லாமல் இருந்தால் உடனடியாக ஆணப்படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டுவரவேண்டும். மாறாக, அமைதி காத்தால், இது சாதிக்குத் துணைபோகும் அரசுதான்" என்கிறார் அழுத்தமாக.