அலசல்
அரசியல்
Published:Updated:

சாப்பாட்டில் மலம் வீசினார்கள்! - சேலத்திலிருந்து ‘பகீர்’ புகார்

சேலம் மாவட்டம், தேவண்ணக் கவுண்டனூர்
பிரீமியம் ஸ்டோரி
News
சேலம் மாவட்டம், தேவண்ணக் கவுண்டனூர்

“ராஜரத்தினம் தரப்பு கொலை மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரியவந்தது. எனவே, சம்பந்தப்பட்ட மூவர் மீதும் வழக்கு பதிவுசெய்யப் பட்டிருக்கிறது.

வேங்கைவயல் விவகாரமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ‘குழந்தைகள் சாப்பாட்டில் மலத்தை வீசினார்கள்’ என்ற `பகீர்’ குற்றச்சாட்டு ஜூ.வி அலுவலகத்துக்குப் புகாராக வந்திருக்கிறது!

இதையடுத்து புகார்தாரரான சேலம் மாவட்டம், தேவண்ணக் கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த பெயின்டர் கமலஹாசனை சந்தித்துப் பேசினோம். “என் மனைவி ராதிகாவின் தாத்தா சுருட்டையன் கடந்த 40 வருடங்களாகக் குடியிருந்துவந்த வீட்டில்தான் தற்போது நானும் குடும்பத்துடன் வசித்துவருகிறேன். எங்களுக்கு இரண்டு பிள்ளைகள். எங்கள் வீடு அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருப்பதால் பட்டா, பத்திரம் என எதுவும் எங்களிடம் இல்லை.

சேலம் மாவட்டம், தேவண்ணக் கவுண்டனூர்
சேலம் மாவட்டம், தேவண்ணக் கவுண்டனூர்

இந்த நிலையில், எங்கள் வீட்டுக்கு அடுத்துள்ள நிலத்துக்காரரான ராஜரத்தினம், ‘நீங்க இருக்கும் வீடு என்னுடைய பட்டா நிலத்தில் இருக்கிறது. காலிசெய்துவிட்டு ஓடிவிடுங்கள்’ எனக் கூறி தகராறு செய்தார். கடந்த ஏப்ரல் 28-ம் தேதி நான் வீட்டில் இல்லாதபோது, ராஜரத்தினம், அவரின் தம்பி ஆனந்தராஜ், அவர்களுடைய அம்மா பச்சியம்மாள் ஆகியோர் டிராக்டர்களில் குப்பைகளுடன், மனிதக்கழிவுகளைக் கொண்டுவந்து வீட்டின் அருகே கொட்டியிருக்கின்றனர். வீட்டுத் திண்ணையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த என் பிள்ளைகளின் தட்டில் மனிதக்கழிவுகளை வீசி, ‘இந்த இடத்தைவிட்டு ஓடிப்போங்கன்னு சொல்றோம். கேட்க மாட்டீங்களா...’ எனச் சத்தம் போட்டிருக்கின்றனர். மேலும், வீட்டின் அருகே நாங்கள் வைத்திருந்த 20 வாழைக்கன்றுகளையும் வெட்டிச் சாய்த்துவிட்டனர்.

ராதிகா, கமலஹாசன்
ராதிகா, கமலஹாசன்

இது குறித்து நாங்கள் காவல்துறையினரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், சேலம் மாவட்ட ஆட்சியரிடம் சென்று மனு கொடுத்தோம். அதன் பிறகு அரசு அதிகாரிகள் வந்து சம்பந்தப்பட்ட இடத்தைப் பார்த்து, வழக்கு பதிவுசெய்ய உத்தரவிட்டனர். இந்த நிலையில், ‘எதிர்த்தரப்பினர் சாப்பாட்டில் மலத்தைப் போடவில்லை’ என்று எழுதிக்கொடுத்து வழக்கை வாபஸ் பெறச் சொல்லி போலீஸார் மிரட்டுகின்றனர்’’ என்றார்.

குற்றம்சாட்டப்பட்டிருக்கும் மூவரும் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரச்னை குறித்து மாவட்ட எஸ்.பி சிவக்குமாரிடம் பேசினோம். “ராஜரத்தினம் தரப்பு கொலை மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரியவந்தது. எனவே, சம்பந்தப்பட்ட மூவர் மீதும் வழக்கு பதிவுசெய்யப் பட்டிருக்கிறது. மேலும் டி.எஸ்.பி தலைமையில் விசாரணை நடைபெற்றுவருகிறது” என்றார்.

சிவக்குமார், கார்மேகம்
சிவக்குமார், கார்மேகம்

இதையடுத்து, விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி ஆரோக்கியராஜிடம் பேசினோம். “சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று விசாரித்தவரையில், மனித மலத்தை வீசியதற்கான எந்த ஓர் அத்தாட்சியும் இல்லை. புகாரளித்தவர்கள்தான் வேண்டுமென்றே இதைத் திணிப்பது போன்று தெரிகிறது. மற்றபடி புகாரளித்தவர்களை நாங்கள் எதுவும் மிரட்டவில்லை; புகாரை வாபஸ் பெறவும் சொல்லவில்லை” என்றார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், “கமலஹாசன் குடியிருக்கும் இடம் பாதைப் புறம்போக்கில் இருக்கிறது. எனவே, அவர்களுக்கு அதே பகுதியில் மாற்று இடம் கொடுக்க முடிவு செய்திருக்கிறேன்” என்றார்.

காவல்துறை நியாயமான முறையில் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!