
தஞ்சை பட்டமளிப்பு விழா சர்ச்சை!
தமிழக ஆளுநருக்கு எதிராகப் போராட்டம் நடத்தவிருந்ததாகக் கூறி, பட்டியலின மாணவரை தஞ்சாவூர் காவல்துறை கொடுமை செய்ததாக எழுந்திருக்கும் புகார் பெரும் சர்ச்சையாகியிருக்கிறது!
கும்பகோணத்துக்கு அருகேயுள்ள இடையாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்த்சாமி. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் மாஸ் கம்யூனிகேஷன் இரண்டாம் ஆண்டு படிக்கும் இவர், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் இருக்கிறார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கடந்த 24-ம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டம் வழங்கினார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் எம்.பில் படித்த அரவிந்த்சாமிக்கும் முறைப்படி அழைப்பு வந்த நிலையில், பட்டம் பெறுவதற்காகச் சென்றிருக்கிறார்.
அங்கே தனக்கு நேர்ந்த துயரம் குறித்து நம்மிடம் பேசிய அரவிந்த்சாமி, ‘‘விழா அரங்கில், மாணவர்களுக்கு நடுவே அமர்ந்திருந்த என்னருகே வந்த போலீஸார், என் சட்டை, பேன்ட் பாக்கெட்டுக்குள் கைவிட்டுப் பார்த்தனர். எதுவும் இல்லாததால் திரும்பிச் சென்றவர்கள், சில நிமிடங்களில் மீண்டும் வந்தனர். எல்லோர் முன்னிலையிலும் என் தலைமுடியைக் கலைத்து ‘முடிக்குள் ஏதாவது ஒளித்து வைத்திருக்கிறேனா’ என அத்துமீறி நடந்துகொண்டனர். ‘எல்லாரும் பார்க்குறாங்க, ஏன் சார் இப்படி அவமானப்படுத்துறீங்க?’ என நான் கேட்டதை அவர்கள் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.

பின்னர் என்னை அரங்கிலிருந்து வெளியே அழைத்துச் சென்று, ஜெனரேட்டர் இருந்த மின்சார அறைக்குள் வைத்து கதவைப் பூட்டினர். அங்கே எனது மேல் சட்டை, பேன்ட்டைக் கழற்றி அரை நிர்வாணமாக்கினர். ‘ஏன் சார் என்னை சித்ரவதை செய்றீங்க?’ என்று கேட்டேன். ‘கறுப்பு நிறத்தில் ஏன் பனியன், ஜட்டி அணிந்திருக்கிறாய்... உள்ளாடையைக் கழற்றி ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்போகிறாயா?’ என்றனர். ஜட்டியை இழுத்துப் பார்த்தனர். அதற்கு மேல் என்னை அசிங்கப்படுத்த முடியாது. நான் கூனிக்குறுகிப்போய்விட்டேன்.
‘ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் நான். என்னோட அப்பா, அம்மா விவசாயக் கூலிகள். எங்க குடும்பத்துல முதல் தலைமுறைப் பட்டதாரியான நான் பட்டம் வாங்குறதைப் பார்க்க என் உறவினர்கள் வந்துருக்காங்க சார். ப்ளீஸ் நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன். பட்டம் வாங்குறதுக்கு அனுமதிங்க... இது என் கனவு சார்... இந்த மேடை ஏறுவதற்காகப் பல ஆண்டுகளா காத்திருக்கேன். பட்டம் வாங்குன பிறகு நீங்க எங்க கூப்பிட்டாலும் வர்றேன்’ என நான் கண்ணீர்மல்க, கெஞ்சிக் கேட்டும் போலீஸார் மனம் இரங்கவில்லை.

‘ஆளுநர் இங்கே இருக்கிற வரையில் உன்னை விட மாட்டோம்’ என்றவர்கள், என்னை வேனில் ஏற்றிக்கொண்டு தஞ்சாவூரைச் சுற்றிவந்தனர். பல்கலைக்கழக நிர்வாகமும் பட்டமளிப்புப் பெயர் பட்டியலிலிருந்து என்னை நீக்கி போலீஸாருக்கு ஆதரவாகச் செயல்பட்டது. ஆளுநர் பட்டமளித்துச் சென்ற பிறகே என்னை போலீஸார் வேனிலிருந்து இறக்கிவிட்டனர்.
பின்னர், பல்கலைக்கழகத்துக்குச் சென்று என் பட்டத்தைக் கேட்டபோது, ‘பட்டம் காணவில்லை’ எனக் கூறி அலைக்கழித்தனர். அதன் பின்னர் தேர்வுக் கட்டுப்பாட்டுப் பிரிவில் பணியிலிருந்த பெண் ஓ.ஏ ஒருவர்தான் என் பட்டத்தைத் தேடி எடுத்துக்கொடுத்தார்.
எனக்கு நடந்த இந்த அவமானம் வேறு எந்த மாணவருக்கும் இனி நடக்கக் கூடாது. இந்த அவமதிப்புக்கு நீதி கேட்டு, இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் தஞ்சாவூர் சரகக் காவல்துறை துணைத் தலைவர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி எதிர்ப்பைப் பதிவுசெய்தோம்’’ என்றார்.
இது தொடர்பாகத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவள்ளுவனிடம் பேசினோம். ‘‘நான் ஆளுநருடன் மேடையில் இருந்ததால், அரவிந்த்சாமியிடம் போலீஸ் சோதனை செய்தது குறித்து, ஆசிரியர்கள் மூலம் மதியத்துக்குப் பிறகுதான் எனக்குத் தெரியவந்தது. சோதனை செய்ததையும், வெளியே அழைத்துச் சென்றதையும் போலீஸார் என்னிடம் சொல்லவில்லை. பட்டத்தைக் காணவில்லை என நாங்கள் சொல்லவில்லை. பெயரை நீக்கினோம் எனச் சொல்வதும் தவறானது. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரிடமிருந்து அரவிந்த்சாமி பட்டத்தை வாங்கிச் சென்றிருக்கிறார்’’ எனத் தெரிவித்தார்.

தஞ்சாவூர் எஸ்.பி ஆஷிஷ் ராவத்திடம் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டபோது, ‘‘இது தொடர்பாக உங்களுக்குத் தகவல் வேண்டுமென்றால் ஐ.ஜி அலுவலகத்தில் கேளுங்கள்’’ என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார். இதையடுத்து தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி அலுவலக வட்டாரத்தில் பேசினோம். ‘‘இதற்கு முன்பு நடந்த பட்டமளிப்பு விழாவில் அரவிந்த்சாமி கோஷமிட்டிருக்கிறார். ஆளுநருக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடப்போகிறார் என்ற தகவல் வந்ததால்தான், அவரை வெளியே அழைத்துச் சென்று சோதனை செய்தோம். இது வழக்கமான நடைமுறைதான். துணைவேந்தரிடம் அரவிந்த்சாமி பட்டம் வாங்கவிருந்ததால், ஆளுநர் நிகழ்ச்சி முடிந்த பின்னர் பட்டம் வாங்குவதற்கு அவரை அனுமதித்தோம். அவரும் வாங்கிவிட்டார். ஆனால், தற்போது நடக்காத விஷயத்தைக் கூறிவருகின்றனர்’’ என்றனர்.
‘கறுப்பு’ உள்ளாடை அணிந்ததற்காக ஒரு மாணவர் காவல்துறையால் அவமானப் படுத்தப்படுகிறார். அடடா... பிரமாதமான ‘திராவிட மாடல்’ ஆட்சி!
நாட்டு வெடிகுண்டுகளின் சத்தம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதை ஒடுக்க முடியாமல் திண்டாடும் காவல்துறை, எளியவர்கள் கிடைத்தால் ஆடை அவிழ்க்கிறது. சபாஷ்... அருமையான பாதுகாப்பு நடவடிக்கை!