Published:Updated:

ராமேஸ்வரம் கடற்கரையில் வெடிகுண்டுகள் புதைப்பா? - தீவிர சோதனை மேற்கொண்ட உளவுப்பிரிவு போலீஸ்

கடற்கரையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்
News
கடற்கரையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்

ராமேஸ்வரம் அருகே கடற்கரைப் பகுதியில் பூமிக்குள் வெடிகுண்டுகள் புதைத்துவைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், நவீன கருவிகள் மூலம் வெடிகுண்டுகளைத் தேடும் பணி நடந்தது.

Published:Updated:

ராமேஸ்வரம் கடற்கரையில் வெடிகுண்டுகள் புதைப்பா? - தீவிர சோதனை மேற்கொண்ட உளவுப்பிரிவு போலீஸ்

ராமேஸ்வரம் அருகே கடற்கரைப் பகுதியில் பூமிக்குள் வெடிகுண்டுகள் புதைத்துவைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், நவீன கருவிகள் மூலம் வெடிகுண்டுகளைத் தேடும் பணி நடந்தது.

கடற்கரையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்
News
கடற்கரையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்

ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தை அடுத்த அந்தோணியார்புரம் கடற்கரைப் பகுதியில், 2018-ம் ஆண்டு மீனவர் எடிசன் என்பவரது வீட்டில், கழிவுநீர்த் தொட்டி அமைக்க பள்ளம் தோண்டியபோது, துப்பாக்கித் தோட்டாக்கள் அடங்கிய பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், நவீன ரக துப்பாக்கிக்குண்டுகள், கண்ணீவெடி, ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்டவை பூமிக்கடியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டன. பயங்கர ஆயுதங்கள் பூமிக்கடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது இந்திய அளவில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் போர் நடந்தபோது இலங்கையிலிருந்து தப்பி வந்த விடுதலைப் புலிகள் சிலர் இந்த வெடிகுண்டு, துப்பாக்கி, தோட்டாக்களை இங்கு பதுக்கிவைத்துச் சென்றிருக்கலாம் என அப்போது சொல்லப்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதி கடற்கரை முழுவதும் வெடிகுண்டு, துப்பாக்கிகள் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றனவா எனச் சல்லடை போட்டுத் தேடினர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.

பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி
பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி

இந்த நிலையில், ராமேஸ்வரம் அருகே அக்காள்மடம் கடற்கரை பகுதியில் வெடிகுண்டுகளும், பயங்கர ஆயுதங்களும் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக மத்திய உளவுப்பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. அதனடிப்படையில் நேற்று முன்தினம் முதல் மத்திய உளவுப் பிரிவு போலீஸார், ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தலைமையில், வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் பூமிக்குள் வெடிகுண்டுகள், தோட்டாக்கள் ஏதேனும் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றனவா எனச் சோதனை செய்தனர். அதில் சந்தேகத்துக்கிடமான சில இடங்களை அடையாளப்படுத்தி பொக்லைன் இயந்திரங்களைக்கொண்டு மூன்றடி ஆழம்வரை தோண்டப்பட்டது.

பின்னர் பள்ளத்துக்குள் இறங்கி, அதற்கு கீழே வெடிபொருள்கள் ஏதேனும் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றனவா என நவீன டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.

கடற்கரைப் பகுதியில் வெடிகுண்டுகள் புதைத்து வைத்திருப்பதாகவும், அவை தோண்டி எடுக்கப்பட்டு வருவதாகவும் ராமேஸ்வரம் முழுவதும் காட்டுத்தீ போல் தகவல் பரவியது. இதையடுத்து அங்கு ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது‌.

தோண்டப்பட்ட பள்ளங்கள்
தோண்டப்பட்ட பள்ளங்கள்

இரண்டு நாள்களாக பாம்பன், அக்காள்மடம் கடற்கரைப் பகுதிகள் முழுவதும் நடந்த சோதனையில் வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் ஏதும் கைப்பற்றப்பட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து க்யூ பிராஞ்ச் போலீஸார் சிலரிடம் விசாரித்தபோது, ``விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒரு நபர் பிடிபட்டிருப்பதாகவும், அந்த நபர் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் கடந்த ஒரு வாரமாக மத்திய உளவுப்பிரிவு போலீஸார் பாம்பன், அக்காள்மடம் கடற்கரைப் பகுதியில் ரகசியமாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த நபர் ஆயுதங்களைப் புதைத்துவைத்திருப்பதாகக் கூறிய இடத்தைக் கண்டறிந்து உறுதிப்படுத்திய பிறகு, இந்தச் சோதனையை மேற்கொண்டனர். ஆனால், ஆயுதங்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, பிடிப்பட்ட நபரிடம் தீவிர விசாரணை நடத்தி, மீண்டும் சோதனை செய்ய மத்திய உளவுப்பிரிவு போலீஸார் திட்டமிட்டிருக்கின்றனர்" என்றனர்.