நாகலாந்து மாநிலத்தில், பாதுகாப்புப் படையினரால் உள்ளூர்வாசிகள் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், 30 ராணுவ வீரர்களுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசு அனுமதி மறுத்திருப்பதாக நாகலாந்து காவல்துறை தெரிவித்திருக்கிறது.
முன்னதாக 2021-ம் ஆண்டு டிசம்பரில் மோன் மாவட்டத்தில், கிளர்ச்சியாளர்கள் என நினைத்து நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் இருந்த வாகனத்தின்மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், ஆறு பேர் உயிரிழந்தனர். இதனால் கோபமடைந்த உள்ளூர்வாசிகள் ராணுவ வாகனங்களை எரித்ததால், மீண்டும் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், மேலும் ஏழு உள்ளூர்வாசிகள் பலியாகினர்.

அடுத்த நாள் மீண்டும் மோன் நகரில் நடத்தப்பட்ட பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஓர் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார். மொத்தமாக 14 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பின்னர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்.ஐ.டி), கொலைசெய்யும் நோக்கத்துடன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பதாக, 30 ராணுவ வீரர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு, கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
ஆனால், எஸ்.ஐ.டி-யின் அறிக்கையை ரத்துசெய்யுமாறு குற்றம்சாட்டப்பட்ட பாதுகாப்புப்படை வீரர்களின் மனைவிகள் கோரிக்கை வைத்ததையடுத்து, இதில் நடவடிக்கை எடுப்பதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்தது. பொதுவாக, பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வேண்டுமெனில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) உள்ளிட்ட பல்வேறு சட்டங்களின்கீழ், மத்திய அரசின் சட்டபூர்வ அனுமதி தேவை.

இந்த நிலையில், குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கும் 30 வீரர்களுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசு அனுமதி மறுத்திருந்தது. இது குறித்து நாகாலாந்து காவல்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், குற்றம்சாட்டப்பட்ட 30 பேர் மீதும் வழக்கு தொடர அனுமதி வழங்குவதற்கு, இந்திய அரசின் ராணுவ விவகாரத்துறை, பாதுகாப்பு அமைச்சகமும் மறுப்பு தெரிவித்திருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.