'பிகினி கில்லர்' , `சர்பன்ட்’ என்று மக்களால் குறிப்பிடப்பட்ட சீரியல் கில்லரை நாடுகடத்த நேபாள் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
கடந்த 1970-களின் இறுதியில் தொடங்கி சுமார் 15 ஆண்டுகள் இன்டர்நேஷனல் போலீஸின் கண்களில் விரலைவிட்டு ஆட்டியவன் சோப்ராஜ். இந்திய தந்தைக்கும், வியட்நாம் தாய்க்கும் பிறந்த சோப்ராஜ் குடும்பச் சூழல் காரணமாக இளம் வயதிலேயே பிரான்ஸுக்குச் செல்லவேண்டியதாயிற்று. தன்னுடைய வீட்டில் சரியான கவனிப்பு இல்லாததால் பிறர் வீடுகளில் புகுந்து திருட ஆரம்பித்ததன் விளைவு, 19-வது வயதிலேயே பாரீஸ் சிறை அவனுக்குப் பரிச்சயமாயிற்று. சிறையில் கிடைத்த நட்புகள் அவனை சாதா திருடனிலிருந்து கொள்ளைக்காரன் அந்தஸ்துக்கு உயர்த்தியது.
நிழல் உலகப் புள்ளிகளிடம் எடுபிடியாகச் சேர்ந்தான் சோப்ராஜ். வசதிகள் குவியத் தொடங்கின. சாண்டல் என்ற பெண்ணை காதலித்து திருமணமும் செய்துகொண்டான். இவனின் அட்டகாசம் அதிகரிக்க... கிடுக்கிப்பிடி போட்டுத் தேடியது பிரெஞ்சு போலீஸ். போலி பாஸ்போர்ட் மூலம் மனைவியுடன் தப்பி 1970-ல் மும்பைக்கு வந்தான். சிறிது காலம் அமைதியாக இருந்தவனுக்கு மீண்டும் கை அரிக்க ஆரம்பிக்க, கடத்தல் தொழிலிலும், சூதாட்டத்திலும் ஈடுபட்டான். நகைக்கடை கொள்ளை முயற்சியில் மும்பை போலீஸ் அவனைக் கைதுசெய்தது.
ஓராண்டு இடைவெளியில் சிறையிலிருந்து தப்பியவன், மனைவியுடன் ஆப்கன் சென்றான். அங்கும் கொள்ளை, சிறைவாசம்... இதையடுத்து இரான், கிரீஸ், தாய்லாந்து, பிரான்ஸ் எனச் சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக கைவரிசை காட்டிய சோப்ராஜின் மீது பல நாடுகளில் சுமார் 20 கொலை வழக்குகள் பதிவாகின. கணவனின் கொலை உக்கிரம் தாங்காமல் காதல் மனைவியும், ஒருகட்டத்தில் பிரிந்து சென்றுவிட்டார். இது சோப்ராஜுக்கு மேலும் வெறியேற்றியது.
செல்வந்தர்களிடம் பேசி நட்பாக்கிக்கொள்ளும் சோப்ராஜ், அவர்களைக் கொலைசெய்து சொத்துகளை அபகரிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தான். மும்பையில் இவனின் கொலை, கொள்ளைகளுக்கு பார்ட்னராக பார்பரா, மேரி ஹெலன் ஆகிய இரு ஐரோப்பியப் பெண்கள் இருந்தனர். அவர்களுடன் சேர்ந்து டெல்லிக்குச் சென்ற சோப்ராஜ், அங்கு சுற்றுலாவுக்கு வந்த பிரெஞ்சு மாணவர்களுக்கு பேதி மாத்திரை கொடுத்து கொள்ளையடிக்க முயன்று போலீஸில் சிக்கினான்.
ஐரோப்பியப் பெண்கள் அப்ரூவராக மாற... திகார் சிறையில் அடைக்கப்பட்டான். திகார் சிறையில் செல்வாக்குடன் இருந்தவன், 1984-ம் ஆண்டு தன்னுடைய பிறந்தநாள் பார்ட்டி என்று அனைவருக்கும் பழங்கள், பிஸ்கெட் கொடுத்தான். மயக்க மருந்து கலந்திருந்த அதைச் சாப்பிட்ட சிறைக்காவலர்கள் மயங்க, அங்கிருந்து நான்கு பேருடன் தப்பினான். ஆனால், சுதாரித்துக்கொண்ட டெல்லி போலீஸார் குறுகியகாலத்திலேயே மீண்டும் பிடித்து சிறையில் அடைத்தது.
ஒருவழியாக 1997-ம் ஆண்டு தண்டனை முடிந்து வெளியே வந்தான். பிரான்ஸுக்குச் சென்றவன், தன்னை ஒரு சாகச கொலை, கொள்ளைக்காரனாக பெருமையாகச் சித்திரித்து, வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியிட ஒப்பந்தம் போட்டு, அதிலும் காசு பார்த்தான். இவன்மீது இருந்த கொலை வழக்குகளுக்காக நேபாள போலீஸ் 2003-ல் இவனைக் கைதுசெய்தது. 35 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில், நேபாள கீழ் நீதிமன்றம் இவனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து இவனுடைய பெண் வக்கீல் சகுந்தலா தபா மனுத்தாக்கல் செய்த நிலையில், 2010-ல் உச்ச நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்து தண்டனையை ஊர்ஜிதம் செய்தது. கோவாவில் வைத்து சோப்ராஜைக் கைதுசெய்த மும்பை போலீஸ் அதிகாரி மதுகர், 'சோப்ராஜ் எப்போதும் பணத்தின் மீதே குறியாக இருப்பவன். மிகக் கொடூரமான குற்றவாளி. குற்றம் என்பது அவன் ரத்தத்தில் ஊறிய விஷயம். அதை ஒருபோதும் அவனால் விட முடியாது. நான் விசாரித்த வகையில், அவன் குறைந்தது 32 கொலை செய்திருப்பான்.
மும்பையில் அவன் இருந்தபோது பல பணக்காரப் பெண்களுடன் தொடர்புவைத்திருந்தான். அவனிடம் ஏன் அத்தனை பெண்கள் மயங்கினார்கள் என்று தெரியவில்லை. அவனிடம் இருந்த ஏதோவொரு கவர்ச்சிதான் உலகின் மிக மோசமான கொலைக் குற்றவாளியாகச் செயல்பட உதவியிருக்கிறது. அவனை நாங்கள் கைதுசெய்தபோது, பல இடங்களிலிருந்து அவனைத் தங்கள் நாட்டிடம் ஒப்படைக்கும்படி கோரிக்கை வந்தது. ஆனால், டெல்லி போலீஸில் அவனை ஒப்படைத்தோம்...'' என்றார். இந்த நிலையில், 78 வயதான சோப்ராஜின் இதய நிலை மற்றும் பல் பிரச்னைகள் காரணமாக முன்கூட்டியே தன்னை விடுவிக்க வேண்டுமென நேபாள நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தான். சோப்ராஜ்
அவனுக்காக பிரெஞ்சு தூதரகமும் நேபாள அரசை அணுகியது. அதைத் தொடர்ந்த விசாரணையில், நேபாள நீதிமன்றம், நேபாளத்தில் கொலைக் குற்றத்துக்கான தண்டனை அனுபவித்து வரும் சார்லஸ் சோப்ராஜை 15 நாள்களுக்குள் விடுவிக்கவும், உடனடியாக அவனின் சொந்த நாடான பிரான்ஸுக்கு நாடு கடத்தவும் புதன்கிழமை (21.12.22) உத்தரவிட்டிருக்கிறது.
சோப்ராஜால் கொலைசெய்யப்பட்ட பல பெண்கள் பிகினி உடையில் கண்டெடுக்கப்பட்டதால் சோப்ராஜை 'பிகினி கொலையாளி' (The Bikini killer) என்றும், சட்ட அமலாக்க அதிகாரிகளிடமிருந்து அடிக்கடி தப்பித்ததால் அவனை `The serpent' (பாம்பு) என்றும் மக்களால் அடையாளப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.