சென்னை அரும்பாக்கம், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் மகாதேவ் பிரசாத். இவரின் மனைவி ஜெயஸ்ரீ. இவர்கள் இருவரும் சேர்ந்து மளிகைப்பொருள்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை நடத்திவந்தனர். இவரின் நிறுவனத்தில் 25,000 ரூபாய் முதலீடு செய்து உறுப்பினரானால் மளிகைப்பொருள்கள் வீட்டுக்கு மொத்தமாக அனுப்பிவைக்கப்படும். அதை பேக்கிங் செய்து வழங்கினால் மாதச் சம்பளம் வழங்கப்படும் என மகாதேவ் பிரசாத் அறிவித்தார். `வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம்’ என்ற ஆசையில் பல பேர் மகாதேவ் பிரசாத்தின் நிறுவனத்தில் பணத்தை டெபாசிட் செய்தனர்.

சில மாதங்கள் சம்பளத்தைக் கொடுத்த மகாதேவ், அதன் பிறகு ஏமாற்றிவந்திருக்கிறார். அதனால் பணத்தை முதலீடு செய்தவர்கள் மகாதேவ் பிரசாத்திடம் கேட்டனர். நெருக்கடி காரணமாக குடும்பத்துடன் மகாதேவ் பிரசாத் தலைமறைவாகிவிட்டார். அதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதைத் தொடர்ந்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகாரளித்தனர். இந்த நிலையில் மகாதேவ் பிரசாத், வீட்டை காலிசெய்ய முடிவுசெய்தார். அதன்படி சிலர் வந்து அவரின் வீட்டிலிருந்த பொருள்களை எடுத்துக்கொண்டிருந்தனர். அதைப் பார்த்த பொதுமக்கள், அங்கு வந்து தகராறில் ஈடுபட்டனர். மேலும், வீட்டை காலிசெய்தவர்களை அரும்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து அரும்பாக்கம் போலீஸார், இந்த மோசடி வழக்கு ஏற்கெனவே சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் இருப்பதால் அங்கு செல்லும்படி அறிவுரை வழங்கினர். அதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி, துணை கமிஷனர் மீனா, கூடுதல் துணை கமிஷனர் அசோகன் ஆகியோர் மேற்பார்வையில் உதவி கமிஷனர் ஜான் பிரிட்டோ, இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ், துரைராஜ் ஆகியோர் தலைமையிலான போலீஸார் மகாதேவ், அவரின் மனைவி ஜெயஸ்ரீயைத் தேடிவந்தனர். இந்த நிலையில், அவர்கள் இருவரையும் பிடித்த போலீஸார், விசாரணை நடத்தி இருவரையும் சிறையில் அடைத்தனர்.
இது குறித்து போலீஸார் நம்மிடம் பேசுகையில், ``சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் மகாதேவ் பிரசாத், அவரின் மனைவி ஜெய ஸ்ரீ ஆகியோர்மீது புகாரளித்திருந்தார். இவரைத் தொடர்ந்து இன்னும் பலர் புகாரளித்தனர். அதன்பேரில் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினோம். ஆனால் மகாதேவ், அவரின் மனைவி ஜெயஸ்ரீ ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களைக் கைதுசெய்து விசாரித்துவருகிறோம். இந்தத் தம்பதி கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. மேலும் வீட்டில் இருந்தபடியே இல்லத்தரசிகள் 10,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்ற கவர்ச்சி விளம்பரத்தை நம்பி ஏராளமானவர்கள் பணத்தை இழந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது" என்றனர்.