சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் மனோஜ் (30). இவர் கடந்த 2-ம் தேதி தன்னுடைய நண்பர் கோழி என்கிற செல்வம் என்பவருடன் மது அருந்த புதுவண்ணாரப்பேட்டை எம்.ஜி.ஆர் சாலையிலுள்ள டாஸ்மாக் கடைக்கு வந்தார். இருவரும் மது அருந்தினர். போதை தலைக்கேறியதும் செல்வம், `கூடுதலாக மதுபானம் வாங்க வேண்டும்’ என மனோஜிடம் பணம் கேட்டிருக்கிறார். ஆனால், அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார்.

அதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த செல்வம், நண்பன் என்றுகூட பாராமல் தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து மனோஜை சரமாரியாகக் குத்தியிருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் மனோஜ் கீழே சரிந்தார். அதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது ஏ.இ கோயில் தெருவில் சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்திவரும் திருவேங்கடம் (71) என்பவர், செல்வத்தைத் தடுத்திருக்கிறார். அதனால் ஆத்தரமடைந்த செல்வம், முதியவர் திருவேங்கடத்தையும் கத்தியால் குத்தியிருக்கிறார். இதையடுத்து, அங்கிருந்து செல்வம் தப்பி ஓடிவிட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்கும் ஆம்புலன்ஸுக்கும் அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். பின்னர் உயிருக்குப் போராடிய மனோஜ், திருவேங்கடம் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த டாக்டர்கள், திருவேங்கடம், மனோஜ் ஆகியோர் வரும்வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை போலீஸார் கொலை வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக திருவொற்றியூரைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அவர் அளித்த தகவலின்படி, தப்பி ஓடிய எண்ணூரைச் சேர்ந்த கோழி என்கிற செல்வத்தைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பட்டப்பகலில் போதையால் நடந்த இரட்டைக் கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.