அரசியல்
அலசல்
Published:Updated:

பிறந்தநாள் பார்ட்டி... மது விருந்து மோதல்... சண்டையை விலக்கச் சென்ற காவலர் கொலை!

விஜயன்
பிரீமியம் ஸ்டோரி
News
விஜயன்

அஜ்மீர் காஜா கடந்த 6-ம் தேதி மாலையில் நண்பர் ஒருவரின் பிறந்தநாள் பார்ட்டிக்குச் சென்றிருக்கிறான். அப்போது பழவந்தாங்கல் ரயில் நிலையம் அருகிலுள்ள மதுக்கடையில் நண்பர்களோடு சேர்ந்து மது அருந்தியிருக்கிறான்.

காவலர் ஒருவரைக் கல்லால் அடித்துக் கொலைசெய்த சம்பவம் சென்னை போலீஸாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை ஆலந்தூரை அடுத்த பழவந்தாங்கல் கண்ணன் காலனியைச் சேர்ந்தவர் விஜயன் (32). இவர், சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படையில் இரண்டாம்நிலைக் காவலராகப் பணிபுரிந்துவந்தார். இவருக்குத் திருமணமாகி, ஐந்து மாதக் கைக்குழந்தை இருக்கிறது.

பிறந்தநாள் பார்ட்டி... மது விருந்து மோதல்... சண்டையை விலக்கச் சென்ற காவலர் கொலை!

காவலர் விஜயனின், மனைவியின் தம்பி வாசுதேவன் அதே பகுதியிலிருக்கும் தனியார் கம்பனி ஒன்றில் வேலை பார்த்துவந்திருக்கிறார். கடந்த 6.2.2023 அன்று காவலர் விஜயனும், வாசுதேவனும் காய்கறி வாங்க கடைக்குச் சென்றபோது, வாசுதேவனுக்கு அவரின் உடன் வேலை செய்யும் நண்பரான அஜ்மீர் காஜாவிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது. பழவந்தாங்கல் ரயில் நிலையம் அருகிலுள்ள நோபல் தெருவில் சிலர் தன்னிடம் பிரச்னை செய்வதாக காஜா போனில் சொல்லியிருக்கிறார். அதன்பேரில் வாசுதேவனும், காவலர் விஜயனும் சம்பவ இடத்துக்குச் சென்றிருக்கிறார்கள். அங்குதான் இந்த விபரீதம் நிகழ்ந்திருக்கிறது.

ரவிக்குமார், அஜீத், வினோத், விவேக்
ரவிக்குமார், அஜீத், வினோத், விவேக்

என்ன நடந்தது என்று புனித தோமையார் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செல்லப்பாவிடம் கேட்டோம். “அஜ்மீர் காஜா கடந்த 6-ம் தேதி மாலையில் நண்பர் ஒருவரின் பிறந்தநாள் பார்ட்டிக்குச் சென்றிருக்கிறான். அப்போது பழவந்தாங்கல் ரயில் நிலையம் அருகிலுள்ள மதுக்கடையில் நண்பர்களோடு சேர்ந்து மது அருந்தியிருக்கிறான். அந்த நேரத்தில் ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த அஜீத் என்பவரின் நண்பர்களுக்கும், காஜாவின் நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் காஜாவின் நண்பர்கள் அனைவரும் தப்பிச் சென்றுவிட்டதால் காஜா தனியாக சிக்கிக்கொண்டான். அவனை அஜீத் டீம் சரமாரியாகத் தாக்கியதால் உயிர்பயத்தில், தன்னுடன் வேலை பார்க்கும் வாசுதேவனை அழைத்திருக்கிறான் காஜா. பொது இடத்தில் சண்டை போட்டுக்கொண்டவர்களை விலக்கும் எண்ணத்தோடு காவலர் விஜயனும் தன் உறவினரான வாசுதேவனுடன் அங்கே சென்றிருக்கிறார். ஆனால், அஜீத் டீம் அவரைக் கற்களைக்கொண்டு தலையில் தாக்கியிருக்கிறது. இதனால் மூளையில் ரத்தம் உறைந்து காவலர் விஜயன் சுயநினைவின்றி இறந்துவிட்டார்” என்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அஜீத், கார்த்திக், ரவிக்குமார், ஆலி மணிகண்டன், வினோத், விவேக் ஆகிய ஆறு பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில், அஜீத், வினோத்குமார் இருவர் மீது, கடந்த 2020-ம் ஆண்டு வாகனச் சோதனையின்போது பழவந்தாங்கல் போலீஸ் எஸ்.ஐ ஒருவரைத் தாக்கிய வழக்கு நிலுவையிலிருக்கிறது. மறைந்த காவலர் விஜயனின் உடலை அவரின் சொந்த மாவட்டமான தருமபுரிக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள் போலீஸார். விஜயனின் இறுதிச் சடங்கின்போது வாசுதேவன், “நண்பனுக்கு உதவிசெய்யப்போய் உங்களைப் பறிகொடுத்துட்டேனே மாமா” என்று கதறி அழுதிருக்கிறார்.

கொடுமை!