சென்னை மேற்கு தாம்பரம், கடப்பேரி திருவள்ளூர் தெருவைச் சேர்ந்தவர் மௌலி (48). பேராசிரியர். இவரின் மனைவி சுனிதா (41). இவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மீது காவல் நிலையத்தில் 8.6.2021-ல் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது ``எனக்கும் என் மனைவிக்கும் கொரோனா. அதனால் கடந்த 21.5.2021-ல் இரவு 11:30 மணியளவில் என் மனைவி சுனிதாவை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், டவர் 3-ல் மூன்றாவது தளம் பி.விங்கில் உள்நோயாளியாகச் சேர்த்தேன்.

எனக்கும் கொரோனா தொற்று இருந்ததால், மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டேன். 23.5.2021-ல் அதிகாலையில் மருத்துவமனை வளாகத்திலிருக்கும் காவல் நிலையத்திலிருந்து எனக்கு போன் வந்தது. கொரோனா வார்டில் சிகிச்சையிலிருந்த என் மனைவி சுனிதாவைக் காணவில்லை, அவர் வீட்டுக்கு வந்திருக்கிறாரா என விசாரித்தார்கள். அதற்கு நான் இல்லை என பதிலளித்தேன். பின்னர் உடனடியாக போன் மூலம் உறவினர்கள், தெரிந்தவர்களிடம் சுனிதா குறித்து விசாரித்தேன். அவர்கள் சுனிதா வரவில்லை என்று பதிலளித்தனர். பிறகு 23-ம் தேதி காலை மருத்துவமனைக்கு நேரில் வந்து மனைவியைத் தேடிப்பார்த்தேன். ஆனால் அவளைக் காணவில்லை.
அதன் பிறகு காவல் நிலையத்தில் வாய்மொழியாக தகவலைத் தெரிவித்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டேன். என் மனைவி குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அதனால் மனவேதனையில் இருந்துவந்தேன். இந்தநிலையில், காவல் நிலையத்திலிருந்து கடந்த 8.6.2021-ம் தேதி எனக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய காவலர் ஒருவர், மருத்துவமனையின் டவர் 3-ல் உள்ள 8-வது மாடியில் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாகத் தகவல் சொன்னார். உடனே நான் மருத்துவமனைக்கு வந்தேன். மொட்டைமாடிக்குச் சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் கிடந்த பெண், சுனிதா எனத் தெரியவந்தது.
எனவே, சுனிதாவின் மரணம் குறித்து விசாரித்து சடலத்தை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். புகாரின் பேரில் எஸ்.ஐ சுந்தரமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார். கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த சுனிதா, மருத்துவமனையின் மாடிக்கு எப்படிச் சென்றார். அவர் அங்கு எப்படி இறந்தார் என்ற விவரங்கள் தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையில் சுனிதாவின் மரணத்துக்கான காரணம் தெரியவரும். பேராசிரியர் மனைவி சுனிதா, அரசு மருத்துவமனையின் மொட்டைமாடியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.