
- ‘ராட்சச’ ராஜகோபாலன்கள்
கடந்த 2018-ம் ஆண்டில் வெளியான ‘ராட்சசன்’ திரைப்படத்தில், மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் இடம்பெறும் வக்கிர ஆசிரியர் கேரக்டர் ஒன்று இடம்பெற்றிருக்கும். அதற்கு சற்றும் சளைத்தவரல்ல ஆசிரியர் ராஜகோபாலன் என்று அலறுகிறார்கள் பி.எஸ்.பி.பி பள்ளி மாணவிகள்!
சென்னை கே.கே.நகரிலுள்ள பி.எஸ்.பி.பி பள்ளியின் வணிகவியல் ஆசிரியரான 59 வயது ராஜகோபாலன், ஆன்லைன் வகுப்பில் டவலோடு மாணவிகளுக்குக் காட்சியளித்தார். அதன்பிறகு அவர்மீதான பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அசோக் நகர் அனைத்து மகளிர் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். போக்சோ சட்டத்தின்கீழ் கைதாகியுள்ள ராஜகோபாலனின் செல்போன், லேப்டாப்பிலிருந்து ரெக்கவரி செய்யப்பட்ட தகவல்கள் அனைத்தும் திடுக் ரகம்!
வழக்கை விசாரித்துவரும் போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். ‘‘ராஜகோபாலன் வீட்டில் இருப்பதைவிட பள்ளியில்தான் அதிக நேரத்தைச் செலவழித்திருக்கிறார். மாணவிகளின் கல்வியில் அதிக அக்கறை செலுத்துவதுபோலப் பழகுபவர், அவர்களின் குடும்பப் பின்னணியை நன்கு தெரிந்துகொள்வார். தனக்குப் பிடித்தமான மாணவிகளின் செல்போன் நம்பர்களை வாங்கிக்கொள்வார். தினமும் ‘குட்மார்னிங்’, ‘குட்நைட்’ மெசேஜுகளோடு பாடம் தொடர்பான டிப்ஸ்களையும் அவ்வப்போது வாட்ஸப்பில் அனுப்பிவந்திருக்கிறார். பின்னர், மாணவிகளின் மனநிலையைத் தெரிந்துகொள்ள இரட்டை அர்த்த ஜோக்ஸ்களை அனுப்பியிருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாகப் பாலியல் உணர்வைத் தூண்டும் வகையில் சேட்டிங் செய்திருக்கிறார். எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவிகளுக்கு கிஃப்ட் கொடுத்துத் தூண்டில் போட்டிருக்கிறார். குரூப்பாகவும் தனியாகவும் சினிமா, மால், பீச் எனப் பல இடங்களுக்கும் மாணவிகளை அழைத்துச் சென்றிருக்கிறார். சில மாணவிகளை ஸ்பெஷல் கிளாஸ் என்று பள்ளிக்கே வரவழைத்தும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

25 மாணவிகளின் அந்தரங்க போட்டோக்களை லேப்டாப், செல்போன்களிலிருந்து சைபர் க்ரைம் போலீஸார் ரெக்கவரி செய்துள்ளார்கள். மாணவிகளுக்கு ராஜகோபாலன் அளித்த பார்ட்டி ஒன்றில் பள்ளியைச் சேர்ந்த சிலர் கலந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பெயர்களை விசாரணையின்போது ராஜகோபாலன் தெரிவித்திருக்கிறார். அவர்களிடமும் விசாரணை நடத்தவுள்ளோம். ஒருசில மாணவிகள் தரப்பில், பள்ளி நிர்வாகத்திடம் புகார்கள் கொடுத்தபோதிலும் நிர்வாகம் பெரிதுபடுத்தாமல் இருந்திருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது’’ என்றார்.
பள்ளியின் முதல்வர் கீதா, பள்ளி குழுமத்தின் தாளாளர் ஷீலா ராஜேந்திரா ஆகியோரிடம் போலீஸார் விசாரித்தபோது, ‘‘ஆசிரியர் ராஜகோபாலன்மீது பள்ளி நிர்வாகத்திடம் யாரும் புகார் கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால் நடவடிக்கை எடுத்திருப்போம்’’ என்று தெரிவித்திருக்கிறார்கள்.
ராஜகோபாலனின் செல்போன், லேப்டாப்பிலிருந்து அழிக்கப்பட்ட மெசேஜ்களை ரெக்கவரி செய்த போலீஸார், அவற்றை வழக்கை விசாரிக்கும் அசோக் நகர் அனைத்து மகளிர் போலீஸாருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அந்த மெசேஜ்கள் குறித்து விசாரித்தோம்... ‘‘மாணவிகளுக்கு ராஜகோபாலன் அனுப்பிய மெசேஜ்கள் ஏராளமாக ரெக்கவரி செய்யப்பட்டுள்ளன. ‘என்ன டிரஸ் போட்ருக்க?’ ‘என்ன கலர் டிரஸ் போட்ருக்க?’ ‘நீ சேலையில ரொம்ப அழகா இருக்க...’ என உடலை நோக்கிய கேள்விகளில் ஆரம்பித்து, ‘ஃப்ரீயா இருக்கியா... சினிமாவுக்குப் போலாமா?’ என்று ஆசை வலை விரிக்கிறார். இது பிடிக்காமல், கடுமையாகத் திட்டி ஒரு மாணவி பதிலனுப்ப, உடனே சுதாரித்துக்கொண்டு, ‘sorry it is wrongly send’ என்று சமாளித்திருக்கிறார். இதுபோல ஆபாச மெசேஜ்கள், இரட்டை அர்த்த ஜோக்ஸ், ஆபாச போட்டோஸ், ஆபாச வீடியோக்களையும் அனுப்பி மாணவிகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார்’’ என்றார்கள்.

ராஜகோபாலனிடம் படித்த முன்னாள் மாணவிகள் பலரும் தொடர்ந்து புகார்களை வாட்ஸப்பில் அனுப்பிவருகிறார்கள். அந்தப் பள்ளியில் இப்போது படிக்கும் மாணவிகளோ, தங்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடுமோ என்கிற பயத்தில் புகார் கொடுக்கத் தயங்கிவருகிறார்கள்.
ராஜகோபாலனை மூன்று நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் குறித்து விசாரித்தோம். ‘‘நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு முதல் இரண்டு நாள்களாக மழுப்பலாகவே பதிலளித்தவர், ‘எனக்கு சுகர், பி.பி இருக்கிறது. சோர்வாக இருக்கிறது’ என்று சொல்லி ஒத்துழைக்க மறுத்தார். அதனால், மூன்றாவது நாள் விசாரணையின்போது கேள்வி - பதில் ஸ்டைலில் ஒரு பேப்பரில் கேள்விகளைத் தயாரித்துக் கொடுத்து பதில் எழுதச் சொன்னோம். ‘மாணவிகளிடம் என்ன மாதிரியான பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறீர்கள்? எத்தனை மாணவிகளிடம் தினமும் சேட் செய்வீர்கள்? எத்தனை ஆண்டுகளாக இந்தக் கொடுமை நடந்தது? உங்களைத் தவிர வேறு யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா?’ என்று கேள்விகளை வரிசைப்படுத்தியிருந்தோம். அதற்கு, ‘மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உண்மைதான். ஆனால், உடல்ரீதியாக எந்த மாணவிக்கும் தொல்லை கொடுக்கவில்லை’ என்று ராஜகோபாலன் பதிலளித்துள்ளார். மாணவிகள் அனுப்பிய ஆதாரங்கள் அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, ‘தெரியாது’ என்றே பதிலளித்திருக்கிறார்’’ என்றார்கள்.
“போலீஸ் காவலில் இருந்த ராஜகோபாலனைச் சந்தித்த அவரின் வழக்கறிஞர்கள், விசாரணையின் போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அவருக்குப் பாடம் எடுத்திருக்கிறார்கள். அதனால்தான், போலீஸ் காவலில் மழுப்பலான பதில்களையே ராஜகோபாலன் கூறியிருக்கிறார்” என்கிறார்கள். ‘இந்த வழக்கில் ராஜகோபாலனுக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதால், நிச்சயம் தண்டனை வாங்கிக்கொடுக்க முடியும்’ என்று போலீஸார் நம்பிக்கையாகச் சொல்கிறார்கள்.

நாகராஜனின் பாலியல் பிசியோதெரபி!
தடகளப் பயிற்சியாளரும் மத்திய அரசு அதிகாரியுமான நாகராஜன், சென்னை பிராட்வேயிலுள்ள பச்சையப்பன் பள்ளி வளாகத்தில் வீராங்கனைகளுக்குப் பயிற்சியளித்துவந்தார். ‘பாலியல் சீண்டலுக்கு ஒத்துழைக்காதவர்களைப் போட்டியில் கலந்துகொள்ள விடமாட்டேன்’ என்று கூறி அவர்களை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துவந்ததாக அவர்மீது புகார். நாகராஜனால் பாதிக்கப்பட்ட மாணவிகள், பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துவருகிறார்கள். விசாரணைக்கு பயந்த நாகராஜன், தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயல, சிகிச்சைக்குப் பிறகு அவரைக் கைதுசெய்த போலீஸார் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
நாகராஜனால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர், ‘‘பயிற்சிக்கு வந்தவர்களை வெளியில் அனுப்பிவிட்டு என்னை மட்டும் பிசியோதெரபி பயிற்சி என ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு என்னைப் படுக்கவைத்து தொடக்கூடாத இடங்களில் கையை வைத்தார். அவரின் நோக்கம் தெரிந்ததும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் நாகராஜன், என்னை மிரட்டியே தவறாக நடந்துகொண்டார். வெளியில் சொன்னால் என்னையும் குடும்பத்தையும் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார். அதனால், எனக்கு நடந்த கொடுமைகளை வெளியில் சொல்லவில்லை. என்னைப்போல நாகராஜனால் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்’’ என்று கண்ணீர்மல்க போலீஸாரிடம் கூறியிருக்கிறார். பயிற்சியின்போது மட்டுமல்லாமல் போட்டிக்கு அழைத்துச் செல்லும்போதும் வீராங்கனைகளுக்கு நாகராஜன் பாலியல் தொல்லை கொடுத்திருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
நாகராஜனின் வழக்கறிஞர் நடராஜனிடம் பேசினோம். ‘‘நாகராஜனிடம் தென்மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் பயிற்சி பெற்றுவந்தார். அந்த மாணவி ஒருவரைக் காதலித்து வந்திருக்கிறார். அகாடமிக்கு இடையூறாக அந்த மாணவியின் செயல்பாடு இருந்ததால், நாகராஜன் கண்டித்திருக்கிறார். கொரோனா காலகட்டத்துக்கு முன்பே அந்த மாணவி அகாடமியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். நாகராஜனைத் தன்னுடைய குரு என்று பெருமையாகப் பேசி வந்த அந்த மாணவி, திடீரென அவர்மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்திருப்பதன் பின்னணியில் யாரோ இருக்கிறார்கள் என்ற சந்தேகம் உள்ளது. இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம்’’ என்றார்.

ஜூடோ மாஸ்டரின் மன்மத லீலைகள்!
ஆசிரியர் ராஜகோபாலனைத் தொடர்ந்து பி.எஸ்.பி.பி பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்குத் தற்காப்புக் கலைப் பயிற்சியைக் கற்றுக்கொடுத்த ஜூடோ மாஸ்டர் கெபிராஜும் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கிறார். ‘‘கடந்த 2014-ம் ஆண்டு ஜூடோ பயிற்சி பெறுவதற்காக கெபிராஜிடம் பயிற்சிக்குச் சேர்ந்தேன். போட்டியில் கலந்துகொள்ள நாமக்கல்லுக்கு காரில் சென்று திரும்பியபோது, காரிலேயே கெபிராஜ் எனக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார். நான் எதிர்ப்பு தெரிவித்தபோது, ‘யார்கிட்டயாவது சொன்னா... உன்னைக் கொன்னுடுவேன்!’ என்று மிரட்டினார்’’ என, சென்னை அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கேரளாவைச் சேர்ந்த பெண்ணொருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கெபிராஜை போலீஸார் கைதுசெய்தார்கள்.
கெபிராஜிடம் பயிற்சிபெற்ற பெண்கள், மாணவிகள் சிலருக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரிய வந்ததையடுத்து, அவரின் நண்பர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. அவர்களில் இருவர் சினிமாத் துறையில் இருக்கிறார்கள். தன்னிடம் பயிற்சிக்கு வந்த ஒரு பெண்ணிடம் மட்டுமல்லாமல், கணவரை இழந்த அவரின் அம்மாவிடமும் கெபிராஜ் நெருக்கமாக இருந்த தகவலும், அவரை ஊட்டிக்குச் சுற்றுலா அழைத்துச் சென்ற விவரமும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. கெபிராஜால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் பி.எஸ்.பி.பி பள்ளியின் முன்னாள் மாணவிகள் சிலரும் இருக்கிறார்கள். கெபிராஜின் மன்மத லீலைகள் குறித்த புகார்கள் வரத்தொடங்கியிருப்பதால், அவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவுசெய்திருக்கிறார்கள்!