கரூர் மாவட்டம், வேலப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் ரேஷ்மா. கோடை விடுமுறை என்பதால், கோவையிலுள்ள தன் உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காகத் தன் மகன்கள் சர்வேஷ் (8), மித்ரன் (7) ஆகியோருடன் கரூரிலிருந்து கோவைக்குச் செல்லும் அரசுப் பேருந்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பயணித்திருக்கிறார்.
அப்போது, ரேஷ்மாவின் பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த ஆண் ஒருவர், குழந்தைகளிடம் நன்றாகப் பேசுவதுபோல் நடித்து பேருந்து பல்லடம் அருகே வந்தபோது, ரேஷ்மாவிடம் ஜூஸ் குடிக்குமாறு கொடுத்திருக்கிறார். ஆனால், ரேஷ்மா அவர் அளித்த ஜூஸைக் குடிக்காமல் தன் இரண்டு குழந்தைகளுக்குக் கொடுத்திருக்கிறார். ஜூஸைக் குடித்த சிறிது நேரத்திலேயே சர்வேஷ், மித்ரன் இருவரும் பேருந்தில் மயங்கி விழுந்திருக்கின்றனர். இதைக் கண்ட அந்த நபர் பேருந்திலிருந்து இறங்கி ஓடிவிட்டார்.

சிறுவர்கள் மயங்கியதை அடுத்து, பேருந்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸை வரவைத்து இரண்டு சிறுவர்களையும் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிறுவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, உயர் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து பல்லடம் போலீஸார் கூறுகையில், "ரேஷ்மாவிடம் இருந்த கைப்பையைத் திருடிச் செல்வதற்காக அந்த நபர் ஜூஸில் மயக்க மருந்து கொடுத்திருக்க வாய்ப்பிருக்கிறது. மாறாக சிறுவர்கள் அதைக் குடித்ததால், அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக விசாரித்துவருகிறோம். பயணத்தின்போது, தெரியாதவர்கள் கொடுக்கும் உணவு, தண்ணீர், ஜூஸ் போன்ற எதையும் உண்ணக் கூடாது" என்றனர்.