ஹரியானா மாநிலத்தில், 11-ம் வகுப்பு மாணவியொருவர், தன்னுடைய தந்தை மற்றும் சகோதரனால் பாலியல் வன்முறைக்குள்ளான சம்பவம், பள்ளி ஆசிரியர்கள் மூலம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இது குறித்து வெளியான தகவலின்படி, பாதிக்கப்பட்ட மாணவி குருகிராமைச் சேர்ந்த 17 வயது சிறுமி என்று தெரியவந்திருக்கிறது. அதோடு, அவர்கள் இது பற்றி வெளியில் கூறினால், கொன்றுவிடுவோம் என்று மிரட்டியதாகத் தெரிகிறது.

மாணவி, தன்னுடைய தந்தை மற்றும் சகோதரனால் பாலியல் வன்முறைக்குள்ளானதை, தான் பயிலும் பள்ளி முதல்வர், ஆசிரியர்களிடம் கூறியிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட மாணவியை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று புகாரளித்திருக்கின்றனர். அதோடு, இது பற்றி வெளியில் கூறினால் மாணவியைக் கொன்றுவிடுவோம் எனக் கொலை மிரட்டல் வந்ததையும் புகாரில் அவர்கள் குறிப்பிட்டனர்.

அதன்பிறகு, மாணவியிடம் சுமார் 4 மணிநேரம் நடத்தப்பட்ட கவுன்சிலிங், விசாரணைக்குப் பிறகு, போக்சோ சட்டத்தின் பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. மேலும், போலீஸார் இது குறித்து விசாரித்துவருகின்றனர். பின்னர் இது குறித்து பேசிய மூத்த அதிகாரியொருவர், ``இந்த விவகாரத்தில் நாங்கள் உண்மைகளைச் சரிபார்த்து வருகிறோம். சட்டப்படி இதில் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.