சமூக வலைதளங்களில் ஆக்கபூர்வமான தகவல்கள் வந்தாலும், சமீபகாலமாக அமைதியைக் குலைக்கும் தவறான கருத்துகளும் அதில் பகிரப்பட்டுவருகின்றன. சமூக வலைதளங்களில் மதநல்லிணக்கத்தை பாதிக்கும் பதிவுகளை சைபர் க்ரைம் போலீஸார் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர்.

அதன்படி ‘கோவையில் பிரியாணி ஜிஹாத்' என்ற பெயரில் அவதூறு கருத்துகளைப் பதிவிட்டவர்ள்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
அந்தப் பதிவில், `கோவையில் பிரியாணி ஜிஹாத். இந்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்து கொடுக்கப்படுகிறது. இஸ்லாமிய வாடிக்கையாளர்களுக்கு மருந்து கலக்காமல் பிரியாணி வழங்கப்படுகிறது.

இதை போலீஸ் கண்டறிந்துள்ளனர்’ எனக் கூறப்பட்டிருக்கிறது. அந்தப் பதிவில் பிரியாணி, மருந்து அட்டைகள், காவல்துறையினர் ஆகிய புகைப்படங்களை இணைத்திருந்தனர்.
இதையடுத்து, ட்விட்டரில் இந்தப் பதிவைப் பகிர்ந்த ஒன்பது பேர்மீது கோவை சைபர் க்ரைம் போலீஸ் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். “இது போன்ற அவதூறான பதிவுகளை வெளியிடுவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோர் சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்” என்று சைபர் க்ரைம் போலீஸ் எச்சரித்திருக்கிறது.