அலசல்
Published:Updated:

‘நோ ரூல்ஸ்... ஒன்லி டூல்ஸ்’ - கோவையை மிரட்டும் டேஞ்சர் பாய்ஸ்!

கோவை
பிரீமியம் ஸ்டோரி
News
கோவை

‘என்னங்கடா... எங்களுக்குப் போட்டியா கஞ்சா விக்கிறீங்களா?’னு சம்பந்தமில்லாம பேசி, கிரிக்கெட் பேட்டால தாறுமாறா அடிக்க ஆரம்பிச்சாங்க.

பார்ப்பவர்களைப் பதைபதைக்கவைக்கும் வீடியோ ஒன்று கோவை மாநகரிலிருந்து வெளியாகியுள்ளது. அந்த வீடியோவைப் பார்ப்பவர்களுக்கு ‘இது பொள்ளாச்சி பாலியல் வழக்கின் நீட்சியா?’ என்ற அச்சம் தொற்றிக்கொள்கிறது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர். ஆனால், இங்கு மாணவனைத் தாக்கும் இளைஞர்களோ, பணம் பறிப்பதற்காக இது போன்ற கொடூரங்களைச் செய்திருக்கிறார்கள். இந்த விவகாரங்கள் அனைத்தும் கல்லூரி மாணவி ஒருவரின் தற்கொலையை அடுத்து அம்பலமாகியுள்ளன.

அந்த வீடியோ காட்சி இப்படி விரிகிறது... மீசைகூட அரும்பாத சிறுவனின் தோற்றத்தில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கிறான் அந்த மாணவன். பயத்தில் அவன் உடல் நடுங்குகிறது... அவனைச் சுற்றி ஒரு கூட்டமே அமர்ந்திருக்கிறது. அதில் நீண்ட தலைமுடி, தாடியுடன் இருக்கும் இளைஞன் ஒருவன், அந்த மாணவனை ‘டர்ர்ப்ப்ப்’பென்று கன்னத்தில் ஓங்கி அறைகிறான். ‘‘டேய் நான் யாருன்னு தெரியுமா... இப்ப நான் யாருன்னு காட்டவா... உன்னைய வெட்டவா... இனிமே பொண்ணுங்களை அந்த மாதிரி வீடியோ எடுப்பியா?’’ என்று கேட்டுக்கொண்டே அந்த மாணவனை முகத்திலும் தலையிலுமாக மாறி மாறித் தாக்குகிறான். முஷ்டியை மடக்கி மூர்க்கத்தனமாக நெஞ்சில் தொடர்ந்து குத்துகிறான். அந்த மாணவனைச் சுற்றியிருக்கும் கும்பலும் இடையிடையே அவனை அடிப்பதும் மிரட்டுவதுமாக பகீரென நீள்கிறது அந்த வீடியோ. அதைப் பார்க்கும்போதே “ஐயோ, யார் பெற்ற பிள்ளையோ... இப்படி அடிவாங்குகிறதே!” என்று அடிவயிறு கலங்குகிறது.

‘நோ ரூல்ஸ்... ஒன்லி டூல்ஸ்’ - கோவையை மிரட்டும் டேஞ்சர் பாய்ஸ்!

இப்படி ஒரு வீடியோ மட்டுமல்ல... இதேரீதியில் இன்னும் சில வீடியோக்களும் நமக்குக் கிடைத்தன. என்னதான் நடக்கிறது கோவை மாநகரில்? இதில் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவரைத் தேடிப்பிடித்துப் பேசினோம். அந்த மாணவர் சொன்ன தகவல்கள் அத்தனையும் அதிர்ச்சி ரகம்...

‘‘அந்தப் பசங்க வேற காலேஜ், நாங்க வேற காலேஜ். திடீர்னு ஒருநாள் நைட் எங்க ரூமுக்குள்ள ஆறு பேர் வந்தாங்க. எடுத்தவுடனே, ‘என்னங்கடா... எங்களுக்குப் போட்டியா கஞ்சா விக்கிறீங்களா?’னு சம்பந்தமில்லாம பேசி, கிரிக்கெட் பேட்டால தாறுமாறா அடிக்க ஆரம்பிச்சாங்க. எங்களை முட்டி போடவெச்சு, கத்தியைக் காட்டி மிரட்டினாங்க. அவங்கவெச்சுருந்த கஞ்சா பாக்கெட்களை எங்க முன்னாடி வெச்சு, ‘இனிமே கஞ்சா விக்க மாட்டோம்’னு சொல்லச் சொல்லி, அதை வீடியோ எடுத்துக்கிட்டாங்க. எங்க லேப்டாப், மொபைல்போன், தங்க செயின், வாட்ச், டிரெஸ்னு எல்லாத்தையும் பறிச்சிக்கிட்டவங்க, என்னோட ஏ.டி.எம் கார்டையும் பிடுங்கி, அதுலருந்து 21,500 ரூபாயை எடுத்துட்டாங்க. அதுக்கப்புறம்தான், அவங்க மேல போலீஸ்ல புகார் கொடுத்தோம்’’ என்றார் அச்சத்துடன்!

‘நோ ரூல்ஸ்... ஒன்லி டூல்ஸ்’ - கோவையை மிரட்டும் டேஞ்சர் பாய்ஸ்!

இந்தப் புகாரை அடுத்து கடந்த மார்ச் மாதம் இதில் தொடர்புடைய விஜய்சேதுபதி, விஷாக், அருண்குமார், விக்கி ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தார்கள். இதில் விஷாக் தலைமறைவாகிவிட, மற்ற மூவரும் கைது செய்யப்பட்டார்கள். இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த பிறகும் விஜய்சேதுபதியின் அடாவடி அடங்கவில்லை. இந்த முறை அவன் தன் காதலியான அப்பாவி மாணவியையே டார்ச்சர் செய்து பணம் பறித்திருக்கிறான். அதன் விளைவாக அந்த மாணவி விஷம் குடித்து, தற்கொலை செய்துகொண்டார். அதன் பிறகே இந்த கும்பலின் அட்ராசிட்டிகள் அம்பலமாகியுள்ளன...

கோவையில் வசித்துவந்த 19 வயது மாணவி, தனியார் கல்லூரியில் படித்துவந்தார். இவரைத்தான் மேற்கண்ட மாணவர்கள் தாக்குதலில் தொடர்புடைய விஜய்சேதுபதி காதலித்தான். அந்த மாணவியிடம் விஜய்சேதுபதி பணம் கேட்கவே ஆரம்பத்தில், ‘காதலன்தானே’ என்று அவரும் கொடுத்திருக்கிறார். 1,000, 2,000 என்று வாங்கியவன் ஒருகட்டத்தில் 35,000 ரூபாய் பணம், இரண்டு சவரன் நகை என்று பறித்துள்ளான்.

‘நோ ரூல்ஸ்... ஒன்லி டூல்ஸ்’ - கோவையை மிரட்டும் டேஞ்சர் பாய்ஸ்!

இந்தநிலையில்தான் மாணவர்களைத் தாக்கிய சம்பவத்தில் போலீஸில் புகாராகி விஜய்சேதுபதி சிறையில் அடைக்கப்பட்டான். தன்னை ஜாமீனில் எடுப்பதற்காக, தன் அம்மா மங்கையர்கரசி மூலம் மாணவியிடம் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறான் விஜய்சேதுபதி. அதற்கு அந்த மாணவி மசியவில்லை. சில நாள்களில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த விஜய்சேதுபதி, அந்த மாணவியைச் சந்தித்து, “உன் போட்டோவை மார்ஃபிங் செஞ்சு சோஷியல் மீடியால போட்டுடுவேன்” என்று மிரட்டி பணம் கேட்கவே, விரக்தியடைந்த மாணவி, விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரில் மீண்டும் விஜய்சேதுபதி கைதுசெய்யப்பட்டான். இந்த முறை பணப்பறிப்பில் உடந்தையாக இருந்ததாக அவனின் அம்மாவையும் கைதுசெய்தது போலீஸ்.

இதையடுத்து, போலீஸார் விசாரணையின்போது விஜய்சேதுபதியின் மொபைல்போனை ஆராய்ந்தபோதுதான், மாணவர்களை அடித்து, துன்புறுத்துவது உள்ளிட்ட பகீர் வீடியோக்கள் போலீஸுக்குக் கிடைத்துள்ளன. மேலும், அந்த நெட்வொர்க்கின் கேங் லீடரே விஜய்சேதுபதிதான் என்பதும் தெரியவந்தது.

மங்கையர்கரசி
மங்கையர்கரசி

இந்த கும்பல் பற்றி கோவை கல்லூரி வட்டாரங்களில் விசாரித்தோம்... ‘‘விஜய்சேதுபதி கேங்ல மொத்தம் 30 பேரு இருக்காங்க. அவங்களுக்கு ‘டேஞ்சர் பாய்ஸ்’னு பேரு. வசதியான வெளியூர் மற்றும் வெளி மாநில காலேஜ் பசங்களை மிரட்டி பணம் பிடுங்குறதுதான் இவங்களோட வேலையே. அதிலும், பொண்ணுங்களை லவ் பண்ற பசங்களா பார்த்து டார்கெட் ஃபிக்ஸ் பண்ணுவாங்க. யாரை டார்கெட் பண்றாங்களோ, அவங்க ரூமுக்குள்ளேயே போய் அடாவடியா சரக்கு, கஞ்சா எல்லாம் அடிப்பாங்க. திடீர்னு கண்மூடித்தனமா அடிக்க ஆரம்பிச்சுருவாங்க. மொபைலைப் பிடுங்கி அதுல காதலியோட நெருக்கமா இருக்குற மாதிரி படம், வீடியோ இருக்கான்னு பார்ப்பாங்க. அப்படி இருந்தா, காட்டுமிராண்டித்தனமா அவனை அடிச்சு... ‘இனிமே பொண்ணுங்களை வீடியோ எடுப்பியா?’னு கேட்டு, இவங்களை நல்லவங்களா காட்டற மாதிரி வீடியோவும் எடுத்துப்பாங்க. பார்க்கறவங்களுக்கு இவங்க தப்பைத் தட்டி கேட்கற மாதிரி இருக்கும். ஆனா, அது எல்லாமே பிளாக்மெயில் பண்றதுக்கான நாடகம்.

விஷாக் - அருண்குமார் - விக்கி
விஷாக் - அருண்குமார் - விக்கி

மொபைல்ல கிடைக்கிற போட்டோ, இவங்க எடுக்கற வீடியோவைவெச்சுக்கிட்டு காசு கேட்டு மிரட்டுவாங்க. ‘காலைல 10 மணிக்குள்ள எனக்கு ஐபோன் வேணும். இல்லாட்டி இந்த போட்டோ, வீடியோவை ரிலீஸ் பண்ணிடுவேன்’னு சொல்லி மிரட்டுவான். நிறைய பேர் காசு கொடுத்துருவாங்க. அதுல கிடைக்குற காசுல காஸ்ட்லியான பார், பப்னு சுத்துவாங்க. வெளியூர் டூர் போவாங்க. அப்படித்தான் ஒருமுறை டூர் போயிட்டு வர்றப்ப, அந்த கேங்ல ஒருத்தன் விபத்துல இறந்துட்டான். ‘இப்படி மிரட்டிக் காசு வாங்குன பாவத்துக்குத்தான் ஒருத்தன் போயிட்டான்’னு சிலர் திருந்தி, ‘டேஞ்சர் பாய்ஸ்’ கேங்ல இருந்து வெளியேறிட்டாங்க. ஆனா, விஜய்சேதுபதி, அருண்குமார், விஷாக், விக்கி உள்ளிட்ட ஏழு பேர்தான் இப்போ வரைக்கும் ஆக்டிவ்வா இருக்காங்க. விஜய்சேதுபதி கிளாஸுக்கே வராம டிராப்அவுட் ஆகிட்டான். இந்த டேஞ்சர் பாய்ஸ் கஞ்சா பிசினஸும் பண்றாங்க. அவங்களைத் தீவிரமா விசாரிச்சா, இன்னும் நிறைய விஷயங்கள் வெளியே வரும்’’ என்றார் அச்சத்துடன்.

டேஞ்சர் பாய்ஸ் குரூப்பில் சிலரது சமூக வலைதள பக்கங்களை ஆய்வுசெய்தபோது `420 ரௌடி, மப்பு, மிஸ்டர் பிளாக் மார்க், மிஸ்டர் பேட் பாய், கெட்டவன்’ போன்ற பெயர்களில் அவர்கள் வலம்வருவது தெரிந்தது. சிலர் பட்டாக்கத்தியுடன் போட்டோ, வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார்கள். ‘நோ ரூல்ஸ்... ஒன்லி டூல்ஸ்’, ‘இறங்கி வந்தால் இரக்கம் காட்டுவோம்... எதிர்த்து நின்றால் எமனைக் காட்டுவோம்’ - இவையெல்லாம் அவர்கள் பகிர்ந்திருக்கும் பன்ச் டயலாக்குகள்!

விஜய்சேதுபதி
விஜய்சேதுபதி

கோவையை அதிரச்செய்திருக்கும் இந்த விஷயங்கள் பற்றி கோவை போலீஸ் கமிஷனர் தீபக் எம் தாமோரிடம் கேட்டோம். ‘‘மாணவி தற்கொலை வழக்கில் அவர்கள்மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வீடியோவெல்லாம் பழைய சம்பவங்கள். பாதிக்கப்பட்டவர்கள், இவர்கள்மீது புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம்’’ என்றார் சுருக்கமாக.

‘இந்தக் கும்பலால் பாதிக்கப்பட்டவர்கள் தாமாக முன்வந்து புகார் அளிக்கலாம்’ என்று காவல்துறை இப்போது சொல்கிறது. ஆனால், மார்ச் மாதம் கைதுசெய்யப்பட்டபோதே விஜய்சேதுபதி கும்பலைத் தீர விசாரித்து, கடும் நடவடிக்கை எடுத்திருந்தால், அவர்கள் வெளியில் வந்திருக்க மாட்டார்கள். கல்லூரி மாணவியின் உயிரும் போயிருக்காது. காவல்துறை இனியும் அலட்சியம் காட்டாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!