கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள கோமங்கலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக (எஸ்.ஐ) பணியாற்றியவர் மணிமாறன்.

இவர் வாகன இன்ஷூரன்ஸ், ஓட்டுநர் உரிமம், மொபைல் காணவில்லை போன்ற புகார்களில் லஞ்சம் வாங்கி முறைகேட்டில் ஈடுபடுவதாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ஒட்டன்சத்திரம் பகுதியில் நடந்த விபத்து ஏற்படுத்திய வாகனத்துக்கு இன்ஷூரன்ஸ் இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து, இன்ஷுரன்ஸைப் புதுப்பித்து, தான் பணியாற்றும் காவல் நிலைய எல்லைக்குள் விபத்து நடந்ததுபோல மணிமாறன் வழக்கு பதிவுசெய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

சில வழக்குகளில் ஆய்வாளர் கையொப்பம் இடும் இடத்தில் அவரே கையெழுத்து போட்டது தெரியவந்தது.
போலீஸ் ஆவணங்களைப் போலியாகத் தயாரித்து, மோசடியில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உறுதிசெய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து மணிமாறனை உதவி ஆய்வாளர் பதவியிலிருந்து தலைமைக் காவலராகப் (ஏட்டு) பதவியிறக்கம் செய்து கோவை சரக டி.ஐ.ஜி உத்தரவிட்டிருக்கிறார்.

மேலும், அவரை குன்னத்தூர் காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்தும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.