கோவை நீதிமன்ற வளாகத்தில் கடந்த மார்ச் 23-ம் தேதி, கவிதா என்ற பெண்மீது அவரின் கணவர் ஆசிட் வீசினர். அப்போது கவிதாமீதும் அருகில் இருந்தவர்கள்மீதும் ஆசிட் பட்டு காயம் ஏற்பட்டது. கருத்து வேறுபாடு காரணமாக கவிதாவும் சிவாவும் பிரிந்து வாழ்ந்துவந்தனர்.

இதற்கிடையே தன்மீதுள்ள வழக்கு குறித்த விசாரணைக்காக கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக கவிதா வந்திருந்தார்.
அப்போதுதான் கணவர் சிவக்குமார் அவர்மீது ஆசிட் ஊற்றினார். பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சம்பவத்தையடுத்து சிவக்குமாரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

80 சதவிகித தீக்காயங்களுடன் கவிதா கடந்த ஒரு மாத காலமாக கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கவிதா நேற்று இரவு உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றி பதிவுசெய்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

பிரேத பரிசோதனைக்குப் பிறகு கவிதாவின் உடல் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்படவிருக்கிறது. ஆசிட் வீச்சால் பெண் உயிரிழந்த சம்பவம் கோவை மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.