Published:Updated:

நெல்லை: இசைக்கருவிகளுடன் அரசுப் பேருந்தில் ஏறிய மாணவியை இறக்கிவிட்ட நடத்துனர் - குவியும் கண்டனங்கள்

நடுவழியில் இறக்கிவிடப்பட்ட மாணவி
News
நடுவழியில் இறக்கிவிடப்பட்ட மாணவி

”கல்லூரி மாணவியான நான் இசைக்கருவி எடுத்துச் சென்றதற்காக நடுவழியில் இறக்கிவிடப்பட்டிருக்கிறேன். எனக்கு உதவ ஆள் இருக்கிறார்கள். அப்பாவி கலைஞர்களின் நிலை என்னவோ” என வருந்தினார், பாதிக்கப்பட்ட மாணவி.

Published:Updated:

நெல்லை: இசைக்கருவிகளுடன் அரசுப் பேருந்தில் ஏறிய மாணவியை இறக்கிவிட்ட நடத்துனர் - குவியும் கண்டனங்கள்

”கல்லூரி மாணவியான நான் இசைக்கருவி எடுத்துச் சென்றதற்காக நடுவழியில் இறக்கிவிடப்பட்டிருக்கிறேன். எனக்கு உதவ ஆள் இருக்கிறார்கள். அப்பாவி கலைஞர்களின் நிலை என்னவோ” என வருந்தினார், பாதிக்கப்பட்ட மாணவி.

நடுவழியில் இறக்கிவிடப்பட்ட மாணவி
News
நடுவழியில் இறக்கிவிடப்பட்ட மாணவி

நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகே ஐன்ஸ்டீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இருக்கிறது. அந்தக் கல்லூரியில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த ரஞ்சிதா என்ற மாணவி முதலாம் ஆண்டு பிபிஏ படித்துவருகிறார். கல்வியில் சிறந்து விளங்கிய அவருக்கு அகரம் பவுண்டேஷன் உதவி செய்து வருகிறது.

கல்லூரி மாணவி ரஞ்சிதா
கல்லூரி மாணவி ரஞ்சிதா

கல்லூரியில் ஆண்டு விழாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் ரஞ்சிதா ஆர்வத்துடன் கலந்துகொண்டிருக்கிறார். அதற்காக தனது ஊரான சிவகங்கையிலிருந்து பறை உள்ளிட்ட இசைக்கருவிகளை எடுத்து வந்து தன்னுடன் படிக்கும் மாணவர்களுடன் சேர்ந்து கலைநிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்.

கலைநிகழ்ச்சி முடிந்த நிலையில், சிவகங்கை செல்வதற்காக நேற்று மாலை நெல்லை பேருந்து நிலையம் வந்த ரஞ்சிதாவை சக மாணவர்கள் அரசுப் பேருந்தில் ஏற்றிவிட்டிருக்கின்றனர். மதுரை செல்லும் பேருந்தில் இசைக்கருவிகளுடன் ஏறிய அவர், முதலிலேயே பேருந்தின் ஓட்டுநர், நடத்துனரிடம் அனுமதி பெற்றிருக்கிறார்.

இசைக்கருவி
இசைக்கருவி

எனினும் பேருந்து நிலையத்தை விட்டு பேருந்து வெளியே வந்ததும் நடத்துனர் டிக்கெட் கேட்டபடி வந்திருக்கிறார். அப்போது அவர் வைத்திருந்த பறை உள்ளிட்ட இசைக்கருவிகளைப் பார்த்ததும் ஆத்திரம் அடைந்திருக்கிறார். மாணவியை தவறாகப் பேசிய நடத்துனர், “ஆட்கள் ஏறுவதற்குத்தான் பேருந்தே தவிர இது மாதிரியான பொருள்களை ஏற்றுவதற்கு அல்ல” என்று வெறுப்புடன் பேசியிருக்கிறார். அதோடு, நடுவழியிலேயே அவரை இறக்கிவிட நடத்துனர் முயன்றிருக்கிறார்.

பேருந்தில் இருந்த சக பயணிகள் சிலர், மாணவியை நடுவழியில் இறக்கிவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். அதனால் வண்ணாரப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் மாணவி ரஞ்சிதாவை இறக்கிவிட்டிருக்கிறார். நடுரோட்டில் யாருடைய உதவியும் இல்லாமல் தவித்த மாணவி, தன்னைப் பேருந்தில் ஏற்றிவிட்ட சக மாணவர்களுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்.

கலங்கிய மாணவி ரஞ்சிதா
கலங்கிய மாணவி ரஞ்சிதா

உடனடியாக மாணவர்கள் அங்கு சென்று அவருக்கு உதவி செய்தனர். மாணவிக்கு ஏற்பட்ட இந்த அவலம் குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து அந்தப் பேருந்து நடத்துனர்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பின்னர் அவரை மாற்றுப் பேருந்தில் ஏற்றிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அந்த வழியாக வந்த பேருந்துகள் அனைத்தும் அதிக பயணிகளுடன் வந்ததால் மாணவிக்கு பேருந்தில் இடம் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது.

சுமார் அரை மணி நேரக் காத்திருப்புக்குப் பின்னர் மாணவி ரஞ்சிதா இசைக்கருவிகளுடன் பேருந்தில் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டார். இது குறித்து பேசிய மாணவி ரஞ்சிதா, ”கல்லூரியில் படிக்கும் நான் இசைக்கருவி எடுத்து வந்ததற்காக நடுவழியில் இறக்கிவிடப்பட்டேன். எனக்கு உதவிசெய்ய நண்பர்கள் பலர் இருந்தார்கள்.

நடு ரோட்டில் இறக்கி வைக்கப்பட்ட இசைக்கருவி
நடு ரோட்டில் இறக்கி வைக்கப்பட்ட இசைக்கருவி

ஆனால், இசைக்கருவி கையில் எடுத்துக்கொண்டு, நாள்தோறும் பேருந்துகளில் பயணிக்கும் அப்பாவி இசைக் கலைஞர்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. அவர்கள் தினமும் எத்தனையோ அவமானங்களைச் சந்திப்பார்கள் என நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. அனைவரையும் மனிதர்களாக நினைக்கும் பக்குவம் அரசுப் பணியாளர்களுக்கு இருக்க வேண்டும்” என்றார்.