
மக்களிடம் இனம் புரியாத அச்சம்...
23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பதற்றத்தில் இருக்கிறது கோவை மாநகரம்.
குண்டு வெடிப்புக்குப் பிறகு பெரும் வீழ்ச்சியைச் சந்தித்த கோவை, அதிலிருந்து மீண்டு வளர்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் சூழலில் இப்போது நடந்துவரும் விரும்பத்தகாத சம்பவங்கள் கோவை மக்களிடம் அச்சத்தை விதைத்துள்ளன.
சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் நடக்கும் போராட்டங்களின் ஒரு பகுதியாக, கோவையிலும் இஸ்லாமிய கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர். பிப்ரவரி 19-ம் தேதியிலிருந்து ஆத்துப்பாலம் பகுதியில் `ஷாஹீன் பாக்’ பாணியில் தொடர்போராட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில், மார்ச் 2-ம் தேதி சி.ஏ.ஏ-வுக்கு ஆதரவாக கோவை காந்திபுரம் பகுதியில் தமிழ்நாடு ஹோட்டல் முன்பு, இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தினர். அதை வீடியோ எடுத்ததாகக் கூறி, ஷாகுல் ஹமீது என்கிற இஸ்லாமியரை இந்து அமைப்பினர் தாக்கியதாக புகார் எழுந்தது. இரு தரப்புக்கும் மோதல் ஏற்படாமல் தடுத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர் போலீஸார்.

அடுத்து, மார்ச் 4-ம் தேதி நஞ்சுண்டாபுரம் மேம்பாலம் அருகே இந்து முன்னணிப் பிரமுகர் ஆனந்தன், மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். அன்றே இரண்டு இஸ்லாமியர்களின் ஆட்டோக்கள் உடைக்கப்பட்டன. மறுநாள், கணபதி அருகே பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. ஆனந்தன் மீதான தாக்குலைக் கண்டித்து 6-ம் தேதி கடையடைப்புப் போராட்டம் நடத்துவதாக இந்து முன்னணி அறிவித்தது. ‘அதே நாளில் நாங்களும் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்று இஸ்லாமிய அமைப்புகளும் அறிவித்தன. ‘மார்ச் 6-ம் தேதி முகூர்த்த நாள் என்பதால், அன்றைய தினம் கடையடைப்பு வேண்டாம்’ என்று கோரிக்கைகள் முன்வைக்கப்படவே, இரு தரப்புமே 7-ம் தேதி கடையடைப்பு நடத்தின. வீதிகளெங்கும் போலீஸார் குவிக்கப்பட்டனர். அன்று கோவை நகர வீதிகள் வெறிச்சோடின. மக்களிடம் இனம் புரியாத அச்சம் உருவானது.
இதற்குப் பிறகு, மனிதநேய மக்கள் கட்சி, பி.ஜே.பி மற்றும் வி.ஹெச்.பி என இரு தரப்புகளைச் சேர்ந்தவர்களின் ஆட்டோக்களும் உடைக்கப் பட்டன. காட்டூர் இந்து முன்னணி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. காட்டூர் பகுதியில், எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் இக்பால் மர்மநபர்களால் தாக்கப்பட்டார். இந்த அசாதாரண சூழலில், டி.ஜி.பி-யான திரிபாதி தலைமையில் ஏ.டி.ஜி.பி-க்கள் கோவை வந்து ஆலோசனை நடத்தினர். இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகளுடன் ஆட்சியர் மற்றும் காவல் துறையினர் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். அடுத்த ஒரு வாரத்துக்கு, யாரும் எந்தப் போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என்று அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனால் மார்ச் 11 அன்று நடைபெறவிருந்த இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம் ரத்துசெய்யப்பட்டது. அன்று மாலையே சுந்தராபுரம் பகுதியில் சூரியபிரகாஷ் என்கிற இந்து முன்னணிப் பிரமுகர் மர்மநபர்களால் தாக்கப்பட்டார். இதனையடுத்து 12-ம் தேதி, இந்து முன்னணியினர் நடத்திய கண்டனப் பேரணியில் இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
பத்து நாள்களுக்குமேலாக விடாத கறுப்பாகத் துரத்தும் பிரச்னைகளால், கோவை மக்கள் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் மூழ்கியுள்ளனர். இந்தச் சூழ்நிலை நீடிக்கக் கூடாது, மீண்டும் கோவையில் எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்கக் கூடாது என்பதுதான் இரு தரப்பினரின் விருப்பம். ஆனால், இரு தரப்புகளிலும் குறிப்பிட்ட சிலர் செய்யும் காரியங்கள், பதற்றத்தைப் பரப்பிக்கொண்டிருக்கின்றன.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் கோவை மாவட்ட துணைச்செயலாளர் ஆஷிக் அகமது, ‘‘எங்கள் போராட்டத்தால் எந்தவிதமான சட்டம் ஒழுங்கு பிரச்னையும் இல்லை. எங்களுக்கு எதிரான போராட்டத்தை போலீஸார் அனுமதித்ததே பிரச்னையின் தொடக்கம். 1998 குண்டு வெடிப்புச் சம்பவத்தை ஒரு கெட்ட கனவாக நினைக்கிறோம். இன்னொரு மதக்கலவரத்தை கோவை தாங்காது. கோவை அமைதியாக இருந்து தொழில் வளர்ச்சியடைய வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணம். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார்.
‘‘கோவையில் கலவரத்தை ஏற்படுத்துவதே சில இந்து அமைப்புகளின் நோக்கமாகவுள்ளது. இதுவரை ஏழு ஆட்டோக்கள் உடைக்கப்பட்டுள்ளன. எங்கள் மாவட்டச் செயலாளர் இக்பால், அவரின் நண்பர் ஷாஜகான் ஆகியோர் தாக்கப்பட்டுள்ளனர். எங்களுடைய புகாரின் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை. நடவடிக்கை எடுக்கத் தாமதிக்கும் அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும். கோவையில் அமைதி நிலவ நாங்கள் முழு ஒத்துழைப்புத் தருவோம்’’ என்கிறார் எஸ்.டி.பி.ஐ கட்சி மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்.

இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் குணா, ‘‘சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கும் முன்பு கோவையில் எந்தப் பிரச்னையும் இல்லை. அனுமதியின்றி ஆத்துப்பாலத்தில் போராட்டம் நடத்தியதால், பொதுமக்கள் பலரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் ஆட்டோக்களும் உடைக்கப்பட்டுள்ளன. இஸ்லாமியர்கள் பாதிக்கப்படும்போது விரைந்து நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, இந்துக்கள் பாதிக்கப் படும்போது நடவடிக்கை எடுப்பதில்லை. நாங்கள் அனைத்து இஸ்லாமியர்களையும் குற்றம்சாட்டவில்லை. சில அடிப்படைவாத இஸ்லாமிய இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், கோவையின் அமைதியை விரும்புவதில்லை. இந்த ஊர் அமைதியாக இருக்க வேண்டும் என்ற அக்கறை எங்களுக்கு அதிகமாக இருக்கிறது’’ என்றார் அழுத்தமாக.
பி.ஜே.பி கோவை மாவட்டத் தலைவர் ஆர்.நந்தகுமார், ‘‘1990-களுக்கு முன்பு இங்கு எல்லா சமுதாய மக்களும் ஒற்றுமையாகத்தான் இருந்தனர். கேரளாவிலிருந்து இங்கு வந்த சில இஸ்லாமியர்கள், இங்கிருந்த நல்ல உறவை உடைத்தனர். 1998-ம் ஆண்டு குண்டு வெடிப்புச் சம்பவத்தால், கோவை வளர்ச்சியில் 20 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றது. அதிலிருந்து மீண்டு இப்போது கோவை வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடையவர்கள் இங்கு கைதுசெய்யப் பட்டிருக்கின்றனர். அதுவே எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இங்கு இருக்கக்கூடிய இஸ்லாமிய சகோதரர்களுக்கு எந்தப் பாதிப்பு ஏற்பட்டாலும், அவர்களுடன் நாங்கள் நிற்போம்’’என்றார்.

கோவையின் இந்த அசாதாரணச் சூழலால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகக் குமுறுகின்றனர் வணிகர்கள். தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பின் கோவை மாவட்டத் தலைவர் இருதயராஜா, ‘‘கோவை அமைதியாகவே இருக்கிறது. ஆனால், இங்கு அமைதி இல்லாததைப்போல் ஒரு தோற்றத்தை உருவாக்க முயன்று வருகின்றனர். வெளியில் இருப்பவர்கள் இதைப் பார்த்து பயப்படுவார்கள். இதனால், நஷ்டமாவது நாங்கள்தான். எனவே, கடையடைப்புப் போராட்டங்களை அறிவிக்கும்போது, போலீஸார் எங்களுக்கு முழுப் பாதுகாப்பு வழங்க வேண்டும். யார் தவறு செய்தாலும், மதரீதியான பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும். அனைத்து சமயங்களைச் சேர்ந்தவர்களையும் இணைத்து ஓர் அமைதிக் குழுவை அமைக்க வேண்டும். தங்களது சமயங்களில் தவறு செய்வோரை மற்றவர்கள் அடையாளம் காட்ட வேண்டும்’’ என்றார் சமூகப் பொறுப்புணர்வுடன்.
இதுகுறித்து கோவை போலீஸ் துணை ஆணையர் பாலாஜி சரவணனிடம் பேசியபோது,
‘‘தனிமனிதர்கள் யாரும் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது. வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அதற்கு காவல்துறை மூலம் தீர்வு காண்பதே சரியான வழி. மதரீதியாகப் பதற்றத்தை ஏற்படுத்துபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும்’’
என்று எச்சரித்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, ‘‘கடந்த சில நாள்களாக கோவையில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. கோவை மக்கள் அச்சமின்றி இருப்பதற்காக, பல்வேறு அமைப்பினரை அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். சட்டம் ஒழுங்கைப் பேணிக்காக்க முழு ஒத்துழைப்பை வழங்குவதாகக் கூறியுள்ளனர். கோவையில் அமைதி திரும்ப வேண்டும். எந்த நிலையிலும் அமைதிக்கு பங்கம் வருவதை ஏற்க முடியாது. அப்படி அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும், சமூக வலைதளங்களில் வன்முறையைத் தூண்டும் பிரசாரங்களில் ஈடுபடுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்பவர்கள் மீது தயவுதாட்சண்யம் பார்க்காமல் நடவடிக்கை பாயும்’’ என்றார் உறுதியாக.
கோவையில் அமைதி திரும்பட்டும்!