நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகிலுள்ள எடப்பள்ளி வனப்பகுதியில், கடந்த மாதம் தூக்கில் தொங்கிய நிலையிலிருந்த ஆண் சடலம் ஒன்றை வெலிங்டன் போலீஸார் மீட்டனர். அது தொடர்பாக அவர்கள் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர்.
அழுகி சிதைந்து காணப்பட்ட அந்த ஆண் சடலத்தை அடையாளம் காணும் பணியிலும் வெலிங்டன் போலீஸார் ஈடுபட்டுவந்தனர்.

போலீஸார், சடலமாக மீட்கப்பட்டது குன்னூர் பேருந்து நிலையம் பகுதியில் உலவி வந்த எம்.ஜி.ஆர் என்ற 65 வயதான ராஜேந்திரன் என்பதை உறுதிசெய்தனர். அதையடுத்து, உடனடியாக ராஜேந்திரனின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்து உடலையும் ஒப்படைத்திருக்கிறார்கள். உடலைப் பெற்ற உறவினர்கள், தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் உடலை அடக்கம் செய்து இறுதி மரியாதை செய்திருக்கின்றனர்.
இந்த நிலையில், நேற்று திடீரென குன்னூர் பேருந்து நிலையம் பகுதியில் எம்.ஜி.ஆர் என்ற ராஜேந்திரன் உயிருடன் நடமாடியிருக்கிறார். இதைக் கண்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக ராஜேந்திரனின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்து வரவழைத்திருக்கின்றனர்.
உறவினர்கள் விசாரித்ததற்கு, நீண்டகாலமாக கேரளாவில் இருந்ததாகவும், தற்போதுதான் அங்கிருந்து மீண்டும் குன்னூருக்குத் திரும்பியதாகவும் சொல்லியிருக்கிறார் ராஜேந்திரன். இதைக் கேட்ட உறவினர்கள் முதல் காவல்துறையினர் வரை அனைவரும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். இந்த நிலையில், ராஜேந்திரனின் சடலம் என ஒப்படைக்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய போலீஸ் ஒருவர், "ராஜேந்திரன் நீண்டகாலமாக காணாமல் போயிருந்தார். வனப்பகுதியில் மீட்கப்பட்ட சடலம் ராஜேந்திரனின் சடலமாக இருக்க அதிகம் வாய்ப்பிருப்பதாக வெலிங்டன் ஸ்டேஷன் போலீஸார் நம்பியிருக்கின்றனர். உறவினர்களும் ராஜேந்திரனின் உடல்தான் எனப் பெற்றுக்கொண்டு அடக்கம் செய்தார்கள். தற்போது இப்படி ஆகிவிட்டது. அடக்கம் செய்யப்பட்டது யாருடைய சடலம் என்பதைக் கண்டறிய மீண்டும் விசாரணை நடத்தப்படும்" என்றார்.